Search This Blog

20.12.11

வீரமணி அவர்கள் சிறையில் அனுபவித்த சித்ரவதை

சிறையில் சித்ரவதை


சென்னை மத்திய சிறைச்சாலையின் கதவுகள் திறந்தன. வீரமணியும், ஏனையோரும் உள்ளே நுழைந்தனர். க்யூ வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அவர்கள் கொண்டு சென்ற உடைமைகளை வாங்கிக்கொண்டனர். அனைத்தும் ஜெயிலர் அறையில் அடைக்கலம் புகுந்தன.

அனைவரின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின்னர் ஜெயிலர் கயூம், வார்டர்கள் மகாலிங்கம், செந்தூர்பாண்டியன் ஆகியோர் வந்தனர். அதிகாரத் தோரணையை அவர்களுடைய பூட்ஸ் கால்களின் ஒலியே உணர்த்தியது. அவர்களுடைய கொள்ளிக் கண்கள் வீரமணியைக் கூர்ந்து பார்த்தன. நாராச நடையில் அர்ச்சனைகள் நடந்தன. காணிக்கை வார்டர்கள் என்ற ஆயுள் கைதிகளும், அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் கற்கால மனிதர்களாகவே காட்சி அளித்தனர். அன்றைய கற்கால மனிதனின் கைகளில் கூர்மையான கற்கள் இருந்தன. இவர்களுடைய கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன. வேறுபாடு அவ்வளவுதான். ஆனால், வார்டர்களாக வடிவெடுத்த காவலர்கள் கற்கால மனிதர்களை விடக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.

வீரமணிக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நின்று கொண்டிருந்தார். அவர் மக்கள் பிரதிநிதி என்பதுகூட அந்த வார்டர்களுக்கு மறந்து போய்விட்டது. அவருடைய சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட் வைத்திருந்தார். அதுதான் குற்றம்.

உனக்கு அறிவு இருக்கிறதா? ஏற்கெனவே ஜெயிலுக்கு வந்தவன்தானே! ரூல்ஸ் தெரியாதா? என்று ஜெயிலர் கத்தினான். மிசாவின் கொடுமை எப்படி இருக்கும் என்பதனை அப்போதே தம்மால் உணர முடிந்தது என்கிறார் வீரமணி.

சென்னை மத்திய சிறையின் கடைசிப் பகுதி 9 ஆம் நம்பர் பிளாக். அதில் ஒரு அறையில் வீரமணி அடைக்கப்பட்டார். 8 அடிக் கொட்டடியில் எட்டுப் பேர் வீதம் அடைக்கப்பட்டனர். ஏறத்தாழ 120 பேர் அந்த பிளாக்கில் இருந்தனர். அந்த பிளாக்கில் முன்னர் தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு அறைகளில் நிரம்ப அடையாளங்கள் இருந்தன.

திராவிடர் கழக மாணவர் மாநாட்டைத் திறந்து வைத்தவர் இளம் வழக்கறிஞர் சத்தியேந்திரன். மாவட்ட நீதிபதியாக இருந்த சத்தியேந்திரனின் புதல்வர். அவரும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். அவர்களுடைய குடும்பமே சிவகங்கையில் அய்யாவை வழிகாட்டியாகக் கொண்ட கொள்கைக் குடும்பம். வீரமணியோடு இளம் வழக்கறிஞர் சத்தியேந்திரனும் கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்திருந்தார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, தென்னார்க்காடு மாவட்டத் தலைவர் முதியவர் பண்ருட்டி நடேசன், வில்லிவாக்கம் அ. குணசீலன், ராயபுரம் மு.போ. வீரன், புவனகிரி சச்சிதானந்தம் ஆகிய அய்யாவின் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாநிலம் முழுதும் கைது செய்யப்பட்ட தொண்டர்கள் ஆங்காங்கே மாவட்ட மத்திய சிறைகளில் அடைபட்டிருந்தனர்.

வீரமணி கொண்டு சென்ற பெட்டி, படுக்கைகளை இரண்டு வாரகாலமாக அவருக்குத் தரவில்லை. பதினைந்து நாள்களும் ஒரே உடைகளைத்தான் அணிந்திருந்தார். வேறு வழியின்றி கொட்டடி திறக்கப்படும்போது பனியன், ஜட்டியை மட்டும் கசக்கிப் பிழிந்து காய வைத்து அணிந்துகொண்டார்.

தமது வாழ்நாளில் இதுபோன்று அழுக்கைச் சுமந்த அனுபவம் இதற்குமுன்னர் ஏற்பட்டதே இல்லை என்கிறார் வீரமணி.

அன்று நள்ளிரவு சிறையில் மயான அமைதி. ஒன்பதாம் பிளாக்கை நோக்கி வார்டர்கள் வருகிற காலடி ஓசை கேட்டது.

கீரிச்...

பிளாக்கின் கதவு திறக்கப்பட்டது. அந்த பிளாக் முழுக்க மின்சார விளக்குகள் இல்லை. ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் அழுது கொண்டிருந்தது.

தலைவாசலைத் திறக்க வார்டர்கள் உள்ளே வந்தனர். வீரமணியிருந்த கொட்டடியின் கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது அவர் அரைகுறை தூக்கத்தில் இருந்தார்.

உள்ளே போ! ஒரு வார்டனின் மிரட்டல்.

ஒரு இளைஞர் உள்ளே அடியெடுத்து வைத்தார். தட்டுத்தடுமாறி திகைத்து நின்றார். கொட்டடியின் கதவு பூட்டப்பட்டது.

உள்ளே வந்த இளைஞர் வீரமணியின் கால்களை உராய்ந்துவிட்டார். ஏன் வீரமணிமீதே விழுந்துவிட்டார். உடம்பெல்லாம் அடி.

யாரது? வீரமணி கேட்டார்.

ஸ்டாலின் என்று பதில் வந்தது. அலறி அடித்துக்கொண்டு எழுந்தார் வீரமணி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். திராவிட இயக்கத்தின் வாரிசு அரசியல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற வந்திருந்தது என்றார் வீரமணி.

அந்த அறையிலிருந்த அனைவரும் விழித்துக் கொண்டனர். வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை ஸ்டாலின்மூலம் அறிய அனைவருக்கும் ஆவல். ஆனால், வீரமணியும், ஏனையோரும் எந்தச் சிறையில் இருக்கிறார்கள் என்பது வெளி உலகிற்குத் தெரியாது. பட்டப் பகலிலேயே தமிழகம் தடுமாறிக் கொண்டிருந்தது.

அச்சம் தவிர் என்பது முதல் பாடம்; அந்தப் பாடத்தில் ஸ்டாலின் தேறிவிட்டார்.

வீரமணிக்குப் படுக்கையும் இல்லை; தலையணையும் இல்லை. பகலில்கூட அவர் அறைக்குள்ளே பூட்டப்பட்டிருந்தார். உணவுவேளையின்போது மட்டும் கொட்டடிக் கதவு சிறிது நேரம் திறந்திருக்கும். அங்கே ஆயுள் கைதிகளான கன்விக்டட் வார்டர்கள் காத்திருப்பர். அவர்கள் வீரமணியை மட்டுமல்ல, அனைவரையுமே ஒருமையில்தான் பேசுவார்கள். சிறை அதிகாரிகள் அவர்களுக்கு அப்படிப் பயிற்சி கொடுத்திருக் கிறார்கள்.

யூதர்களைப் படுகொலை செய்ய சித்திரவதை முகாம்களை - முள்வேலி முகாம்களை இட்லர் உருவாக்கியிருந்தான். மனிதநேயம் மரித்துப்போன அந்த முகாம்களில்கூட இந்த அளவிற்குச் சித்திரவதைகள் நடந்திருக்காது என்கிறார் வீரமணி.

ஒரு மாத காலம்வரை வீரமணி பகலிலேயே இருளில்தான் இருந்தார். சிறைக் கொட்டடியின் இருளைச் சொல்லவில்லை. சிறைச் சுவர்களுக்கு வெளியே என்ன நடைபெறுகிறது என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படிக்கப் பத்திரிகைகள் கொடுக்கப்படவில்லை. வானொலிச் செய்தியைக் கேட்க முடியாது. அவரைச் சந்திக்க உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீரமணி எந்தச் சிறையில் இருக்கிறார் என்ற செய்திகூட அவர்களுக்குத் தெரியாது. கொடுமையே அறமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தது.

பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு ஒன்பது மணி. ஒன்பதாம் நம்பர் பிளாக்கின் கொட்டடிகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டன. மாலையில், கணக்குப் பார்த்துக் கைதிகளை அறைகளில் பூட்டி விட்டால், பின்னர் விடிந்த பிறகே கதவுகளைத் திறக்கவேண்டும். இது விதி. இதற்கு மாறாக அறைக் கதவுகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு அறையிலிருந்தும் அலறல் சத்தம் கேட்டது.

நெஞ்சுவலியுள்ளவர்களையோ, நோயாளிகளையோ எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்பது சிறைச் சட்டம். ஆனால், அந்தச் சட்டத்தை எரித்துவிட்டு சிறை அதிகாரிகள் சர்வாதிகாரத்தின் விளையாட்டுப் பிள்ளைகளாக கோரத்தாண்டவம் ஆடினர்.

உங்கள் அறையைச் சோதனையிடப் போகிறோம். ஒவ்வொருவராக வெளியே வாருங்கள் என்று ஆயுள் கைதி வார்டர்கள் கத்தினர். பயந்துகொண்டே வந்த ஒவ்வொருவரும் மயங்கி விழும்வரை தாக்கப்பட்டனர். கை, கால்கள் முறிந்தன; ரத்தம் சிந்தினர்.

அன்றைக்கு ஸ்டாலின் வேறு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதான் இன்னார் மகனா என்று கேட்டுக்கொண்டே அவரையும் அடித்தனர். அவர் ஆவேசத்தை அடக்கிக் கொண்டார். இன்றைக்கும் அவரது தேகத்தில் சிறை தந்த தியாகத் தழும்புகளைக் காணலாம்.

கடைசியாக வீரமணி இருந்த அறை திறக்கப்பட்டது. கொலைகார ஆயுள் கைதிகளான கன்விக்டட் வார்டர்களின் காட்டுக் கூச்சல்.
(ஒவ்வொருவராக வெளியே வாங்கடா).

வீரமணி வந்தார். இரும்புப்பூண் போட்ட தடிகள் வார்டர்களின் கரங்களில் சுழன்று கொண்டிருந்தன. சரமாரியாக அடி விழுந்தது. அவர்களுடைய கைகள் ஓயும் மட்டும். உடம்பின் எல்லா அவயவங்களையும் பதம் பார்த்தனர். மன உறுதியோடு வீரமணி அந்தச் சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார். உள்ளே போடா.

வீரமணி நடக்க முடியாது கொட்டடிக்குள் சென்றார். அடுத்து விடுதலை நிருவாகி சம்பந்தம் அழைக்கப்பட்டார். அவர் நடுங்கிக் கொண்டே கொட்டடியை விட்டு வெளியே வந்தார். கோரப் பசியெடுத்த குண்டாந்தடிகள் விளையாடின.

வீரமணி ஓடி வந்தார். அய்யா, அவரை அடிக்காதீர்கள். அண்மையில்தான் அவருக்கு முதுகுத் தண்டுவட ஆபரேஷன் நடந்தது என்று கெஞ்சினார்.

அவனுக்கு நீ என்ன சிபாரிசாடா நாயே என்று ஒரு வார்டன் வெறிக் கூச்சலிட்டான். இன்னொருவன் மீண்டும் வீரமணியைத் தாக்கினான். ஆபாச அர்ச்சனைகள் நடந்தன. ஒருவன் லத்திக் கம்பால் வீரமணியின் கண்ணைக் குத்தினான். ஒரு நரம்பு அறுந்தது. பார்வை பழுதாகிவிடுமோ என்ற அச்சம்.

அதன்பின்னர் திடீர் திடீரென்று வீரமணியின் கண்கள் வீங்கின. சைனஸ் பிரச்சினையும் இணைந்தது. அவருடைய முகம் வீங்கியே விட்டது.

இறந்துவிட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு சம்பந்தம் அடிபட்டுபேச்சு மூச்சற்று கீழே சாய்ந்தார். அவரை வீரமணியும், மற்றவர்களும் மெதுவாக அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

ஏதோ இமயத்தை வீழ்த்தியதுபோல பெருமிதத்துடன் வார்டர்கள் வெளியேறினார்கள். ஒன்பதாம் பிளாக்கில் புயல் அடித்து ஓய்ந்துவிட்டது. கோரப்புயலின் கொடுஞ் சீற்றத்திலிருந்துகூட மனிதன் தப்பிவிடலாம். ஆனால், அன்றைக்கு ஒன்பதாம் பிளாக்கில் அடைபட்ட எவருமே தப்பவில்லை.

அவர்கள் என்ன சமூக விரோதிகளா? அவர்களுக்கு சிறையில் பெரிய மரியாதை உண்டு.

அவர்கள் என்ன கள்ளநோட்டு அடித்தவர்களா? கஜானாவைக் களவாடியவர்களா? அவர்களுக்கு சிறையில் ராஜமரியாதை உண்டு.

ஆனால், வீரமணியைப் போன்ற சமூக சிந்தனையாளர்களுக்கும், அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோட்டவர்களுக்கும், அண்ணாவின் கரம்பற்றி நடை பயின்றவர்களுக்கும் அவசர நிலைப் பிரகடனம் அநியாயமாகத் தண்டனை வழங்கியது.

அன்றைய சிறைக் கொடுமைகளை சகித்துக் கொண்ட வீரமணி, தம்மைவிட அடிபட்டு வீழ்ந்த தோழர்களுக்காகக் கண்ணீர் சிந்தினார். அவர் சொன்னார்,

தாக்கப்பட்டவர்களிலேயே மிகக் கொடூரமான முறையில் இனிப் பிழைப்பார்களா என்று அய்யப்பட்ட அளவிற்கு சிட்டிபாபு, ஆர்க்காடு வீராசாமி, முரசொலி அடியார், கோடம்பாக்கம் குமார் ஆகியோர் தாக்கப்பட்டார்கள். முடிந்த அளவு மனதுக்குள் அவர்களுக்காக அழுதோம். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம் என்கிறார் வீரமணி.

வீரமணியின் கண்கள் வலி எடுத்தன. இனி அவருக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சிறை மருத்துவமனை மருத்துவர்கள் கருதினர்.

வீரமணியின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. அவர் அரசினர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு மருத்துவரின் அறையிலேயே சிகிச்சை; சிறிது நேரம் ஓய்வு; மீண்டும் சிகிச்சை; அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்கூட கண்களைக் குளமாக்கிக் கொண்டனர். ஒரு ரவுடி தாக்கப்பட்டதுபோல் வீரமணி தாக்கப்பட்டிருக்கிறார் என்பதனை அவர்களால் அறிய முடிந்தது.

அரசினர் மருத்துவமனைக்கு வீரமணி அழைத்து வரப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரிந்து, அவருடைய குடும்பத்தார் மின்னலைப்போல் பறந்து வந்தனர். ஆனால், அவர்களால் எட்டி நின்று அவரைப் பார்க்க முடிந்ததே தவிர அருகில் வர முடியவில்லை. நலமா என்றுஒரு வார்த்தை கேட்கவும் முடியவில்லை. வீரமணியைச் சுற்றி அவ்வளவு கெடுபிடியான கட்டுக்காவல். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக்கூட உளவுத் துறையினர் கண்காணித்தனர்.

ஆரம்ப காலங்களில் வீரமணிக்கும் அளிக்கப்பட்டது கல்லும், மண்ணும் கலந்த உணவுதான். சில நாள் வேப்பெண்ணை கலந்தும் கொடுத்தார்கள். சிறுநீர்கூட உணவில் கலக்கப்பட்டதை இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ரசம் என்ற பெயரில் வெந்நீர். மாலையில் சிறிது கடலை. வேறு உணவே கிடையாது என்கிறார் வீரமணி.

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை சென்னை மத்திய சிறையில் மிசாக் கைதிகள் கொடுமைப்படுத் தப்பட்டார்கள். அதனை மாண்புமிகு நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் பதிவு செய்திருக்கிறது.
விடுதலை நிருவாகி சம்பந்தம் அடித்து வீழ்த்தப்பட்டதை அந்தக் கமிஷன் பதிவு செய்திருக்கிறது.

இதோ சம்பந்தம் பேசுகிறார்:

நான் செத்தவன்போல் கீழே விழுந்தேன்; அடிகள் வாங்கிய ஏனையோர் அறைக்குள் அனுப்பப்பட்டனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த வார்டர்களும், மற்றவர்களும், என்னை எழுந்திருக்குமாறு கேட்டு, எழுந்திருடா கழுதை, பாவலா செய்கிறாயா என்று கூறினர். அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகத் தடியால் என்னை அடித்தனர். வார்டர்களில் ஒருவர், என்னை வலது முழங்கால் முட்டிக்குக் கீழே எலும்பில் உதைத்தார். இரத்தம் கசிய ஆரம்பித்தது. ஏற்கெனவே அடிகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் அனுப்பப்பட்டிருந்த திரு.கே. வீரமணியும், திரு. தட்சிணாமூர்த்தியும் அப்போது அந்த இடத்திற்கு விரைந்து வந்து, அவரை அடிக்காதீர்கள், அவருக்கு முதுகுத் தண்டில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், அடிகள் கொடுத்தால் அவர் இறந்துவிடுவார் என்று கூறினர். வார்டர் ஒருவர் கே. வீரமணியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, ஒக்காளி ஒளி, நீ என்னடா சிபாரிசு என்று கூறினார்.

அடுத்த நாள் ஜெயிலர் திரு. கையூம் வார்டர்கள் புடைசூழ வந்து எங்களைப் பார்த்தார். என்னால் தரையில் உட்கார முடியவில்லையாதலால், நான் திண்ணைமேல் உட்கார்ந்திருந்தேன். கையூம், நீ மட்டும் என்னடா மேலே, இறங்கி கீழே உட்காரடா கழுதை என்று கூறி என்னை அங்கிருந்து இறங்கும்படிக் கூறினார். நான் எனது நண்பர்களின் உதவியுடன் கீழே உட்கார முயற்சி செய்தேன். வீரமணி எனது வருந்தத்தக்க நிலையை விளக்கி, என்னால் தரையில் உட்கார முடியாது என்பதையும் விளக்கிக் கூறினார். அதன் பிறகு கையூம் என்னைப் பார்த்து, மேலேயே உட்காருடா கழுதை என்று கூறினார். திரு.என்.எஸ். சம்பந்தம் சொல்லியுள்ள சாட்சியங்கள் கற்பனையானவை அல்லது புனைந்துரைக்கப் பட்டவை என்று நான் தள்ளிவிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறுகிறார் மாண்புமிகு நீதிபதி இஸ்மாயில் அவர்கள்.

கண்களில் அடிபட்ட வீரமணி தொடர்ந்து சிகிச்சை பெற சிறையிலிருந்து அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டிருக்கவேண்டும். ஆனால், சிறைத் துறை அதிகாரியின் நிர்பந்தம் காரணமாக சிறை மருத்துவமனை மருத்துவர் பரிந்துரை செய்யவில்லை. மேலும், இஸ்மாயில் கமிஷன் முன்பு அந்த மருத்துவர் பொய் சொன்னார்.

இதனையும் இஸ்மாயில் கமிஷன் பதிவு செய்திருக்கிறது.

இதோ படியுங்கள்!

திரு. கே. வீரமணியைப் பொறுத்தமட்டில், அவர் அடிக்கப்பட்டதனால் அவருடைய இடது கண்ணின் கீழ்ப்புறத்தில் வீக்கம் இருந்தது. அதனால் அவர் பெரிதும் தொல்லைப்பட்டார். அதற்காக சிகிச்சை செய்யவேண்டியது அவசியமாயிருந்தது. அவர் பொது மருத்துவமனையிலுள்ள காது, மூக்கு, தொண்டை நோயியல் துறைக்கு 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி அன்று அனுப்பப்பட்டு 10 நாள்கள் ரேடியம் சிகிச்சை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார் என்பதில் எவ்விதமான கருத்து வேற்றுமையுமில்லை. அதுபோலவே, அவர் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள் அன்றும், 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் அன்றும் பொது மருமத்துவமனையில் ரேடியம் சிகிச்சை செய்துகொண்டது போக, எஞ்சிய 8 நாள்களில் ரேடியம் சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்பதிலும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இதுகுறித்து திரு. கே. வீரமணியை ரேடியம் சிகிச்சைக்காக ஏன் மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்று சிறை மருத்துவர் ரங்காச்சாரியை (P.W.11) கேட்டபோது, திரு. வீரமணி, பொது மருத்துவமனைக்குச் சென்று வரிசையில் நிற்கவேண்டிய இக்கட்டான நிலை காரணமாக, அங்கு தான் போக விரும்பவில்லை என்று அவரே தெரிவித்ததாகப் பதிலளித்துள்ளார்.

திரு. கே. வீரமணி, தான் மருத்துவமனைக்குப் போக விரும்பவில்லை என்று கூறியதை, மருத்துவர் அவருக்கு சம்பந்தப்பட்ட ஆவணம் எதிலும் குறிக்கவில்லையென்றும், நடந்தவற்றைத் தனது நினைவிலிருந்தே சொல்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதிலிருந்தே மருத்துவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை.

கண் வலி காரணமாக 6.3.1976, 8.3.1976 ஆகிய இரு நாள்களும் பொது மருத்துவமனைக்குச் சென்று பெரிய மருத்துவரின் ஆய்வுரை பெற்ற ஒருவர் பொது மருத்துவமனைக்குச் சென்று நிற்கவேண்டிய இக்கட்டான நிலையிருப்பதால், தான் அங்கு செல்ல விரும்பவில்லை என்று அவரே தன்னிச்சையாகச் சொல்லியிருக்க முடியாது. எனவே, இதுகுறித்து மருத்துவரின் விளக்கத்தை நான் தள்ளிவிடுகிறேன். எஞ்சிய நாள்களுக்கு திரு. வீரமணியை ரேடியம் சிகிச்சை பெறுவதற்காக பொது மருத்துவமனைக்கு வேண்டுமென்றேதான் மருத்துவர் அனுப்பாமலிருந்தார். சென்னை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளருடைய தூண்டுதலின் பேரில் மருத்துவர் அவ்வாறு அனுப்பவில்லை என்ற முடிவிற்குத்தான் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

வீரமணிக்கு சிறை அதிகாரிகளும், மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க மறுத்ததை, மனிதாபிமானமற்ற செயலை நீதிபதி இஸ்மாயில் அவர்கள் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனவே, மிசா காலச் சிறைக் கொடுமைகள் என்பது தன்மான வீரர்கள் சிந்திய ரத்தத் துளிகளால் எழுதப்பட்ட கருப்பு அத்தியாயமாகும்.

அவசர நிலை என்ற காட்டாட்சி டெல்லியில் முடிவிற்கு வந்தது. சர்வாதிகாரிகள் காகித ஓடத்தில் பயணிக்க முடியவில்லை.

சரியாக ஓராண்டு முடிந்த பின்னர் சென்னை மத்திய சிறையிலிருந்து வீரமணி விடுதலையானார்.

--------------------எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய “வீரமணி ஒரு விமர்சனம்” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி

2 comments:

siththar said...

எமேர்ஜென்சிக்குப் பிறகு சிறை கண்காணிப்பாளர் மற்றும் வார்டர்கள் என்ன ஆனார்கள் ? தண்டிக்கப்பட்டார்களா ?

siththar said...

எமேர்ஜென்சிக்குப் பிறகு சிறை கண்காணிப்பாளர் மற்றும் வார்டர்கள் என்ன ஆனார்கள் ? தண்டிக்கப்பட்டார்களா ?