Search This Blog

2.1.09

காவிமய ஆட்சி மீண்டும் திரும்பலாமா?


தமிழா! இன உணர்வு கொள்! தமிழா! தமிழனாக இரு!! மீண்டும்
ஒலிக்கட்டும்!!! என்று தணியும் ஈழத் தமிழரின் துயரம்? "பாழாய்ப்போன"
அரசியல்-தமிழரின் பொதுப் பிரச்சினையிலும் நுழைந்து கெடுக்கிறதே!

காவிமய ஆட்சி மீண்டும் திரும்பலாமா?

எந்தப் பூனைக்கும் மணிகட்டும் பணி நம்முடையது!
மலைகளைப் பிளக்கும் சிற்றுளிகள் நாம்! கடமையாற்றுவோம்- வாரீர்!

கழகத் தலைவர், தமிழர் தலைவர் வேண்டுகோள்!


2009 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், ஈழத்தமிழர் இன்னல் போக்கிடக் குரல் கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர் - அவர்தம் துதிபாடிகளின் கெடுநிலை கண்டு வருந்தி, தமிழர்களும், கழகத் தோழர்களும் ஆற்றிட வேண்டிய பணி குறித்துத் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-

கழகப் பொறுப்பாளர்கள் உள்பட அனைத்துக் கழகக் குடும்பத்தினர்களே! பகுத்தறிவாளர் கழக மற்றும் தமிழ் இன உணர்வாளர் களான பெருமக்களே! சமூகநீதிக்கான போராளிகளாய் களங் காண தயாராக நிற்கும் சக போராளிகளான தோழர்கள், அனைத்துக் கட்சிகளிலும் உள்ள சுயமரியாதைக் கொள்கை உள்ளம் படைத்த வீரர்களே! வீராங்கனைகளே!

2009 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது; இப்புத்தாண்டு ஆங்கில வழிப் புத்தாண்டு எனினும், அதிகாரப்பூர்வமாக அரசே அறிவித்துக் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு - ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் என்ற பழைய முறை கைவிடப்பட்டு - தைமுதல் நாளாம் பொங்கல் விழா முதல் என்று கொண்டாடும் இப்புத்தாண்டுத் தொடக்கத்தை அறிவிக்கும் புத்தாண்டாக அமைந்துள்ளது. நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்தம் கொள்கைக் குடும்பத்துத் தலைவர்கள் அறிஞர் அண்ணா மற்றும் மறைமலை அடிகளார் போன்ற தமிழ்க் கடல்களின் பேரவாவும், பெருவிழைவும், மானமிகு சுயமரியாதைக் காரரான மாண்புமிகு முதல்வர் கலைஞர் எழுச்சி மிகுந்த பொற்கால ஆட்சியாம் - அவர்தம் அய்ந்தாம் முறை ஆட்சியில் செயலாக்கம் கண்டுள்ள பூரிப்பும் புளகாங்கிதமும் பொங்கி வழியும் புதுமை குலுங்கிய பண்பாட்டுப் பாதுகாப்பு - இழந்தது மீண்டும் கிடைத்தது என்ற எல்லையற்ற மகிழ்ச்சியை - அணை உடைந்த வெள்ளமாகக் காட்டும் வெற்றி உலாவை வையகம் உணர்த்திடும் விழா நாளாகும்!

ஜனவரி முதல்பற்றிக் கூறும்போதுகூட, நமது முதல்வர் எழுதியுள்ள தெள்ளு தமிழ்ச்சுவை பாய்ந்த பரவசக் கவிதை வரிகளில்,

தமிழ்ப்புத்தாண்டு முதல் நாள்

தைமுதல்நாள் பொங்கல் என்று;

கட்டியம் கூறுவதற்கு ஆங்கிலப்புத்தாண்டு-

கொட்டிய முழக்குடன் வரும் நாள் இன்று!


என்றல்லவா மகிழ வைக்கின்றார் நம் அனைவரையும்!

இவ்வாண்டின் தொடக்கத்தில் மகிழ்ச்சி மலர்ந்த போதிலும், ஈழத்தமிழர் அனுபவிக்கும் அன்றாடக் கொடுமைச் செய்திகளும், மரண ஓலங்களும் கண்டு கேட்டு, விட்ட கண்ணீர் உலர்ந்து விட்டதே. அய்யகோ!

என்று தணியும் அவர்தம் துயரம்?

என்று மடியும் அவர்தம் அடிமை என்று உரத்த குரலில் நாம் முழக்கமிட்டும்கூட, முடிவு - குறைந்தபட்சமாக போர் நிறுத்தம்கூட வரவில்லை.

பாலஸ்தீன வீரர்கள்மீது இஸ்ரேல் போடும் குண்டு மழையை நிறுத்த அறிக்கைவிடும் இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் அம்மையாருக்கு, ஈழத்தமிழர் கொல்லப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று சொல்ல மனம் வரவில்லையே - ஏன்? காரணம் வெளிப்படை என்றாலும், அவர்களுடன் கூட்டு என்று கூறும் வீராதிவீர சண்டப் பிரசண்டவாதிகள் ஈழத் தமிழருக்காக ஓங்கி நீட்டி ஓங்கார முழக்கமிட்டு, பன்முகச் சித்து விளையாட்டை நிகழ்த்தி, நம் இனம் என்றும் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்கள்தான் என்று காட்டிடும் நிலை தொடரவேண்டுமா?

வேதனை! வேதனை! வெட்கம் - விலாவைக் குடைகிறது!

2009 இல் விடியல் தான் எப்போது? பாழாய்ப் போன அரசி யல் நுழைந்து, பொதுப் பிரச்சினை களில்கூட தமிழர்கள் ஒன்று சேர முடியாது என்ற பிரகடனத்தை ஊர் அறிய, உலகறியச் செய்கிறதே, அது எத்தனைக் கொடுமை?

அதற்காக நாம் நமது கடமையைச் செய்யவேண்டாமா? அலட்சியமாக இருக்கலாமா? நம்முள் உறைந்துள்ள மானமும் மானிடமும் நம்மைக் கேட்கும் கேள்வி அல்லவா இது?

தமிழா, இன உணர்வு கொள்

தமிழா, தமிழனாக இரு என்ற முழக்கங்கள் தமிழ்நாடு எங்கும் மீண்டும் தெருக்களில் இடையறாது ஒலிக்கவேண்டும்!


சுவர் எழுத்துகளாக ஜொலிக்கவேண்டும். இவ்வாண்டில்தான் (2009 ஏப்ரலில்) பொதுத் தேர்தல் வருகிறது!

பா.ஜ.க.வும், அதற்கு மறைமுகமாக உதவிடும் வகையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறும் ஆட்சியும் 5 ஆண்டுக் காலம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (U.P.A.) நீடிக்க முடிய வில்லை; நிலைத்த ஆட்சியை இவர்களால் தர முடியாது என்று கூறி அற்ப ஆயுளில் ஆட்சி போகும் என்று ஆருடம் கணித்தவர்களின் ஆசை பொய்யாய், கனவாய், பழங்கதையாகப் போய் விட்டது என்பது அதன் முதலாவது வரலாற்றுப் பெருமையான சாதனை.

இதற்காக அய்க்கிய முன்னணி தலைவர் - பிரதமர் பதவியை ஏற்க மறுத்த தியாகத் திருவுருவமாம் - திருமதி சோனியா காந்தி அவர்களும், அவர்களுக்கு வழிகாட்டும் இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியான முதல்வர் கலைஞர் அவர்களும், லாலுபிரசாத், தக்க நேரத்தில் கைகொடுத்த முலாயம்சிங் யாதவ், அமர்சிங் போன்ற தலைவர்களும், ஆட்சியை அமைத்து காத்து, காப்பாற்ற வேண்டிய தருணத்தில் காப்பாற்றிடவும் செய்திட்ட சாதனை - இந்தியாவின் பாதை - மதச்சார்பின்மை, ஜனநாயகம் - சமதர்மம் என்பதிலிருந்து மாறாத பாதை - என்பதை அகிலத்திற்கும் பறைசாற்றுவது அல்லவா?

காவிமய ஆட்சி (Saffron) முந்தைய (NDA) தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் பாரதீய ஜனதா கட்சியினரால் எப்படி பகிரங்கமாகவே ஆட்சி யந்திரத்தை முடுக்கிவிட்டு நடந்தது என்பது உலகறிந்த உண்மையல்லவா?

இது மீண்டும் 2009 இல் திரும்பலாமா? திரும்பினால் இந்தியா காணாமல் போய் வெறும் ஹிந்து(நாடு)ராஷ்டிரம் அல்லவா மீண்டும் வரும்?

ஜனநாயகத்திற்குப் பதில் பாசிசம்; மதச் சார்பின்மைக்குப் பதில் ஒரு மத ஆட்சி, சமஸ்கிருதக் கலாச்சார சர்வாதிகார ஆட்சி; ஒரு மொழி நாடு - சிங்களக் கொடுமை இலங்கையில் தொடருவதுபோல இந்திய நாட்டிலும் - சமஸ்கிருத ஆரிய மொழிதான் ஆட்சி மொழி - பன்மொழிகளுக்கு இடமில்லை - என்றாகுமே!

18 வயது வந்த வாக்காளர்கள் நமது இளைஞர்களில் பலருக்கு, எது தலைவாரிடும் சீப்பு, எது கொள்ளிக்கட்டை என்று பிரித்தறியத் தெரியாமல், சீப்புக்குப் பதிலாக சிவப்பாக எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சீவிடும் (சொரிந்துகொள்ளவும்கூட தெரியாத) நிலையில், நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?

அடுத்தத் தேர்தலைப்பற்றி மட்டும் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் நம்மால் மட்டும்தானே கவலையோடு சிந்தித்துப் பொறுப்போடு செயல்பட முடியும்?

எனவே, தோழர்களே, தோழியர்களே!

நம்முன் உள்ள பணி மலையேறும் பயிற்சி போன்ற பணி. இலட்சிய நோக்குடன் பயணிக்க மக்களை ஆயத்தப்படுத்த வேண்டிய அவசரப் பணி.

யானைகள், உருவத்தில் பெரியவை!

அங்குசங்கள், சிறியவைதான்!

என்றாலும், அவைதான் யானைகளை வழிநடத்தும்!

அதுபோன்றதே நம் பணி!

"பூனைக்கு யார் மணி கட்டுவது?" என்று கேட்ட காலத்தை மாற்றி, எந்தப் பூனைக்கும் மணி கட்டும் பணி எம்மால் முடிந்த பணி என்று காட்ட வேண்டியவர்கள் நாம்!

நம்பிக்கையுடன் உழைத்து வெற்றி ஈட்ட உறுதியேற்போம்!

சிற்றுளிகள் மலைகளைப் பிளக்கும் ஆற்றல் உள்ளவை என்பதைக் காட்டிக் கடமையாற்றிட வாரீர்! வாரீர்!!

வெற்றி நமதே!!!


------------------ நன்றி: "விடுதலை" - 2.1.2009

0 comments: