
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடும்
திருமாவளவன் நாடகமாடுகிறார் என்று ஜெயலலிதா கூறுவதா?
ஈழத் தமிழர்ப் பிரச்சினை - சேது கால்வாய்த் திட்டம் உட்பட
பெண் ராஜபக்சேயாகப் பேசுகிறார் அம்மையார்
இத்தகைய தலைமையைத் தமிழ்நாடு அனுமதிக்கலாமா?
கூட்டணி சேர்ந்துள்ள தோழர்கள் மறுபரிசீலனை செய்க!
ஏ, தாழ்ந்த தமிழகமே! என்று அண்ணா சொன்னது
முக்காலத்துக்கும் பொருந்த வேண்டுமா? அந்தோ!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (17.1.2009) அளித்த பேட்டி சிங்கள அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளரின் பேட்டி போல் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, இத்தகைய தலைமையைத் தமிழகம் அனுமதிக்கலாமா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர்கள்தம் வாழ்வுரிமைப் பிரச்சினை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; தமிழரல்லாதவர்கள் கூட வாழ்வா? சாவா? என்ற பிரச்சினையாகி, மனித நேயம் உள்ள அத்துணைப் பேரும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டு வரும் எம் தமிழர்களை அழிவிலிருந்து - சிங்கள அரசின் இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றுவது எப்படி? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கலைஞரும் திருமாவளவனும் நாடகம் ஆடுகின்றனர் என்று ஜெயலலிதா கூறுவதா?
இதற்காக தமிழ்நாட்டிலுள்ள பல கட்சிகளும் (ஜெயலலிதா தலைமையில் உள்ள அண்ணா திமுக கட்சித் தவிர) மிகவும் வேதனையால் துடித்திடும் நிலையில், முன்னாள் முதல் அமைச்சரும், இந்நாள் (சட்டமன்றத்திற்கே போகாமல், எப்போதோ ஒரு முறை அத்திபூத்ததுபோல கிளம்பி வந்து சண்டப் பிரசண்டம் செய்து விட்டு உடனே திரும்பிச் செல்லும்) விசித்திர எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அவர்கள், பற்றி எரியும் ஈழத்தில் - அழிவின் விளம்பில் நிற்கும் எம் தமிழர் இனத்தைக் காப்பாற்ற மத்திய அரசினை வற்புறுத்திட விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் ஒன்றை அறப்போராட்டமாகத் துவக்கியுள்ள நிலையில், அதைக்கைவிட மனிதாபிமானம் உள்ள முக்கிய கட்சியினர் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில்,
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா அவர்கள், தனது தமிழ் இன விரோதப் போக்கை பகிரங்கமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
இப்பிரச்சினையில் கருணாநிதியும் திருமாவளவனும் பேசிக் கொண்டு நடத்துகிற நாடகம் என்றும்,
இலங்கை வேறு நாடு, எனவே அந்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு; இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னமும் அமையவில்லை என்றும்,
இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை; ஒரு போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் கூறி, எரியும் ஈழப் பிரச்சினையில் தன்னைச் சரியாக உலகத்திற்கு அடையாளம் காட்டிவிட்டார்!
சிங்கள இனவெறி ஆட்சி நடத்தும் அதிபர் ராஜபக்சேவால் கூட இவ்வளவு பகிரங்கமாக அங்கே நடைபெறும் தமிழர்களான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்திட முடியாது!
அந்த அளவுக்கு ஈவு இரக்கமற்ற - கொடுமையான பெண் ராஜபக்சேவாகவே மாறி, தனது உள்ளத்தை உலகத்திற்குத் திறந்து காட்டிவிட்டார் தமிழ் இன விரோதியான ஜெயலலிதா! சகோதரர் தொல்.திருமாவளவன் உயிரைக் காப்பாற்ற, தமிழர்கள் துடித்துக் கொண்டுள்ள நேரத்தில், இப்படி நாடகமாடுகிறார் என்றெல்லாம் கூறுகிறார்.
அண்ணா என்ன சொன்னார் என்று தெரியுமா ஜெயலலிதாவுக்கு?
இலங்கையில் உள்ள சிங்கள அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் போல இப்படி பகிரங்கமாக தமிழர்கள் படுகொலையை நியாயப்படுத்தும் இவரது கட்சிக்குப் பெயர் அண்ணா திமுக.வாம்!
வெட்கம்! வேதனை!! விசாரம்!!! கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது என்றால், வெளிநாட்டுத் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட நிலையில், கப்பல்களில் வரும்போது கடலில் அவர்கள் விட்ட கண்ணீர் கடலில் கலந்த காரணத்தால் என்று கூறினாரே அறிஞர் அண்ணா - அது தெரியுமா இவருக்கு? அண்ணாவை வெறும் படமாகத்தான் அவர் பார்க்கிறாரே ஒழிய, கொள்கை - லட்சியம் தந்த தலைவராகப் பார்க்கத் தெரியாத ஆணவத்தின் சின்னமாக அல்லவா உள்ளார்!
முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று விடுத்த விளக்க அறிக்கையில், தொல்.திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணா விரதம், தன்னிடம் அறிவித்துத் துவக்கப்பட்டதல்ல என்றே உலகுக்குத் தெரிவிக்கும் நிலையில், இப்படி இருவரும் ஆடும் நாடகம் என்று நாக்கூசாமல் பேசுகிறாரே!
திருமங்கலத்தில் மக்கள் கொடுத்த மரண அடியால் சித்தம் கலங்கி இப்படி உளறுகிறாரோ என்னவோ நமக்குத் தெரியவில்லை!
அய்.நா. சொல்வது காதில் விழவில்லையா?
அய்.நா. மன்றத்தில்கூட 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் நிலைபற்றி, அவர்கள் இலங்கைக் காடுகளில் தவிப்பதுபற்றி, கவலை தெரிவிக்கப்படுகிறது, அய்.நா. மற்றும் பல உதவிகளால் அவர்களுக்கு ஓரளவு உணவு கிடைத்தாலும், இருப்பிடம், குடிநீர், துப்புரவு, சுகாதார வசதிகள் கிடைக்கவில்லையே என்றும், அவர் களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்க வேண்டும் என்றும் அய்.நா. சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் நேற்று (17.1.2009) கூறியுள்ளார்!
அந்த மனிதருக்கும், அவ்வமைப்புக்கும் உள்ள மனிதாபிமானம் கூட தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவருக்கு இல்லாததற்கு என்ன காரணம்? சிங்கள இனம் - ஆரிய இனம் என்ற வரலாற்று உண்மை இதன்மூலம் புதுப்பிக்கப்படுகிறது போலும்!
பாலஸ்தீனத்தின்மீது பச்சாதாபம் ஈழத்தின்மீது மட்டும் எரிச்சலா?
பாலஸ்தீனத்தின்மீது இசுரேல் குண்டு வீச்சு - ஏவுகணை ஏவுதல் - இவற்றால் பாலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகிறார்களே என்று கண்ணீர் சிந்தி, கருணை மழை பொழியும் செல்வி ஜெயலலிதா - ஈழத்தில் சிங்கள இராணுவம் அதே வேலையை மூர்க்கத்தனமாகச் செய்யும்போது எந்த ஒரு போரிலும் அப்பாவி மக்கள் பலியாவது இயல்புதான் என்று, சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் இனப் படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
இந்து ராம்களும் துக்ளக் சோக்களும், ஜெயலலிதாக்களும் சிங்களர்களுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சுருதிப் பேதமின்றிப் பாடுவதன் அடிப்படை உணர்வையும் அடையாளம் காண வேண்டும் - ஆரியராவது, திராவிடராவது என்று ஏகடியம் பேசும் கூட்டமும் இதனைப் புரிந்த கொள்ள முயல வேண்டும்.
ஈழத் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்றும், விடுதலைப்புலி களைத் தீவிரவாதிகள் என்றும் கூறி அவர்களை அழிப்பதில் சிங்களர்களை விட மும்முரம் காட்டுகிற அம்மையார், இவரது அரசியல் ஆசானான எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எவ்வளவு நெருக்கமாக இருந்து, எப்படியெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற பழைய கதையை அறிவாரா? இவரேகூட முன்பு பேசியதென்ன?
ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல - சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்திலும் இலங்கைக்கு ஆதரவு!
சிங்கள அரசின் பேச்சாளராக - இதில் மட்டுமா இவர் தமிழ் இன விரோதப் போக்கைக் காட்டுகிறார்?
பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்கள் விரும்பிய சேதுக் கால்வாய்த் திட்டம் 2500 கோடி ரூபாய் செலவில் - முடியும் தறுவாயில் திட்டம் இருக்கும்போது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, இத்திட்டமே கூடாது - இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியதோடு, திட்டமே கைவிடப் பட வேண்டும் என்று (அவர் கட்சித் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு முற்றிலும் விரோதமாக) இலங்கை அரசு வருவாய் இழக்கக்கூடாது என்பதற்காகப் பேசுகிறாரே!
கூட்டணி சேர்ந்தோர் மறுபரிசீலனை செய்க!
இந்நிலையில் அவரது தலைமை தமிழ்நாட்டில் இருக்க இனி அனுமதிக்கலாமா?
அவருடன் வெட்கமின்றி கூட்டுச் சேர்ந்துள்ள நமது சகோதர நண்பர்கள் இனியாவது தங்கள் நிலையை மறு பரிசீலனை செய்யவேண்டாமா?
ஈழப் பிரச்சினை, சேதுக்கால்வாய்த் திட்டம் என்பதற்கு முன்னுரிமை, முதல் உரிமை கொண்டாடும் சகோதரர் வைகோ, மற்றும் புதிய வரவுகளாக அங்கே சென்றுள்ள இடதுசாரிக் கட்சியினர் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டாமா?
ஜெயலலிதாவின் தமிழர் இனப் படுகொலைகளை நியாயப்படுத்தும் பேச்சினை எதிர்த்து நாடு முழுவதும் விளக்கப்பட வேண்டும்.
ஏ, தாழ்ந்த தமிழகமே!
திருமங்கலம் அவருக்கு வெறும் மங்கலமான பிறகும் இவ்வளவு அகம்பாவப் பேச்சு என்றால், இதைக் கண்டு தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பாமல் இருந்தால் அவர்களை என்ன சொல்லி அழைப்பது?
ஏ, தாழ்ந்த தமிழகமே! என்று அண்ணா சொன்னது முக்காலத் திற்குமா? அந்தோ!
முகாம்: கோவை
18.1.2009
------------------ கி. வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் -"விடுதலை" 18-1-2009
3 comments:
உள்ளதை உள்ளபடியே சொல்லுறிங்கள். இலங்கை அரசின் பேச்சாளர்ஜெயலலிதா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஜெயலலிதா இலங்கையில் வசிக்கிறாரா? அய்யமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் என்றால் வை.கோ. தா.பாண்டியனின் கருத்து என்ன?
Post a Comment