கடவுள் பெயர்ச்சொல்தான்; வினைச்சொல் அல்ல!
கடவுளைப்பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் 5000 ஆண்டுக்குள் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்கள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத(காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது.
அந்தக் காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நடந்து கொண்டு வந்த, பயன்படுத்திக்கொண்டு வந்த , எண்ணிக்கொண்டு- நம்பிக்கொண்டு வந்தவைகளில் இன்று மனிதன் உணவு-உறக்கம் என்பதைத்தவிர வேறு எதைப் பின்பற்றி வருகிறான்; பயன்படுத்தி அனுபவித்துக்கொண்டு வருகிறான் என்ற சிந்திப்போமேயானால் , அவையெல்லாம் மாற்றப்படவேண்டிய, கைவிடப்படவேண்டிய, மறுக்கப்படவேண்டிய காரியங்களாகவே இருந்து இருக்கின்றன.
ஆகையால், கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சாதி என்று சொல்லப்பட்டாலும், அது பெயர்ச்சொல்லே ஒழிய வினைச் சொல் அல்ல. பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு-வஸ்துவுக்கு-வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை-கூட்டுப்பொருள் தன்மை ஃபார்முலா இருந்தே ஆகவேண்டும் ; அது இல்லாதது வஸ்துவே ஆகமாட்டாது. ஆதலால் கடவுளைப் பற்றிப்பேசுபவர்கள் முட்டாள் களானால் அவர்களிடம் இந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டியவனாகத்தானே இருக்க முடியும்?
"இங்ஙனமிருக்க கடவுள் என்றால் விளக்கங் கேட்க வேண்டாம்"
கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்"
"அது உனக்குப்புரியக் கூடியதல்ல"
"அதை எவனாலும் அறிந்துகொள்ள முடியாது."
"அது மனோ வாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்"
"கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கொள்ள வேண்டியது தான் கடவுள் என்பதற்கு விளக்கம்"
_ என்று சொல்லப்படுவதனால் இந்த முறைப்படி (ஃபார்முலாபடி) கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவு மேதாவியானாலும் அவன் மனிதக் கூட்டில் சேர்க்கப்பட வேண்டிய வனாவானா?
"சர்வ சக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறிவுள்ள ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கவேண்டிய அவசியமென்ன?" என்பதைப்பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா?
-----------------தந்தைபெரியார் -நூல்: "கடவுளர் கதைகள்"
0 comments:
Post a Comment