Search This Blog

29.1.09

பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தின் விளைவு என்ன?


பாதுகாப்பு எந்த வகையில்?

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனுப்பப்படுவார் - அனுப்பப்படுவார் என்று இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

சொல்லி இவ்வளவு நாள்கள் ஆகியும் அமைச்சர் நகருவதாகயில்லையே - அதற்கான அறிகுறியில்லையே என்ற கண்டனங்கள் கசிந்து கொண்டேயிருந்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இறுதி வேண்டுகோள் என்று கூறி ஓர் அழுத்தமான - குமுறல் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும் கொடுத்தார்.

இறுதி வேண்டுகோள் என்று ஒரு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றால், அந்த இறுதி என்பதில் உள்ள இறுக்கத்தின் ஆழம் என்ன என்பதை பிரதமர் அவர்களும் சரி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும் சரி மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்பலாம்.
இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநில அரசு இதைவிட வேறு எந்த வகையில்தான் தன் உணர்வை வெளிப்படுத்த முடியும்?

ஜனநாயக ரீதியாக தொடர்ந்து படிப்படியாக பல கட்டங்களில் தமிழகம் தன் உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டே வந்து இறுதியாக இறுதி வேண்டுகோளை சட்டமன்றத்தின் வழியாக சரியான முறையில் உணர்த்தி விட்டது.

இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று வந்தார். அவர் ஏன் சென்றார்? எதற்குச் சென்றார்? எதைக் கொண்டு வந்தார் என்பதெல்லாம் இதுவரை மர்மம், மர்மம்தான்!

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார், அந்நாட்டின் அதிபரைச் சந்தித்தார்; இதன் விளைவு என்ன?
யுத்த முனையில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாம் கூறியதாகவும், அதற்கு இலங்கை அதிபர் சம்மதித்ததாகவும் கூறியுள்ளார்.

போரை நிறுத்தவேண்டும் - அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் - உலக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துக்கு ஆக்கம் கிடைக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகவிட்டது.

இலங்கை அரசு போரை நிறுத்தாமல் அந்தப் பகுதியில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எப்படி காப்பாற்றப் போகிறது? உண்ண உணவும், உயிர் காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலையில், ஈழத் தமிழர்கள் உயிர் வாழ்வது எங்ஙனம்?
பாதுகாப்புப் பகுதி என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களுக்குச் செல்லும் மக்களையும் குண்டு போட்டு அழிக்கும் ஓர் இனவெறி அரசாங்கம் அம்மக்களைக் காப்பாற்றும் என்று நம்புவதற்கு எங்காவது இடம் இருக்கிறதா?

வாழ்ந்தாலும், செத்தாலும் போராளிகளுடன்தான் இருப்போம் என்பதில் ஈழத் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றாகும். இது நம்மைவிட சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, இலட்சக்கணக்கான தமிழர்களை, போராளிகள் கேடயமாகப் பயன்படுத்த இயலுமா? கடுகளவு பொது அறிவு உள்ளவர்களும் தெரிந்துகொண்டு இருக்கக்கூடிய சாதாரண உண்மை இதுவாகும்.
இந்த நிலையில், இலங்கையில் போரை நிறுத்தச் செய்யாமல், தமிழர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்வது நம்பத் தகுந்த ஒன்றல்ல.


இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை (Genocide) குறித்து அய்.நா. மன்றம் கொஞ்சம் வாயைத் திறந்துள்ளது. இந்தப் பிரச்சினையை உலகப் பிரச்சினை யாக்கித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

பாலஸ்தீனத்தின்மீது மேற்கொண்ட தாக்குதலை இசுரேல் எப்படி நிறுத்தியது? அதே அளவுகோல் ஈழத்திலும் மேற்கொள்ளப்படவேண்டாமா?


தமிழர்களின் ஒன்றுபட்ட இந்த உணர்வை மீண்டும் மீண்டும் அழுத்தமாக ஒலிப்போம்!


----------------நன்றி: "விடுதலை" 29-1-2009

1 comments:

Unknown said...

//பாலஸ்தீனத்தின்மீது மேற்கொண்ட தாக்குதலை இசுரேல் எப்படி நிறுத்தியது? அதே அளவுகோல் ஈழத்திலும் மேற்கொள்ளப்படவேண்டாமா?

தமிழர்களின் ஒன்றுபட்ட இந்த உணர்வை மீண்டும் மீண்டும் அழுத்தமாக ஒலிப்போம்!//

ஒன்று படுவோம், உரிமையை வெல்வோம்.