
தமிழர்தம் புத்தாண்டு இவ்வாண்டில் அதிகாரபூர்வமாக (அரசு சட்ட - ஆணைப்படி) தைமுதல் நாள் என்ற மகிழ்வுடன் பொங்கல் விழா -
தமிழர் புத்தாண்டு - நாளை மலரவிருக்கிறது.
உதயசூரியன் ஆட்சியினால் முதல்வர் கலைஞர்தம் துணிவுமிக்க முடிவினால், காலங்காலமாய் நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சிக்கவிஞரும், தமிழ்ச் சான்றோர்கள் மறைமலை அடிகளார் போன்றோரும் எண்ணியதை, செயலாக்கி, அமைதிப் புரட்சி திராவிடர் இனத்தின் மானப் பொங்கலாய் மார்கழி உச்சியில் மலர்ந்த பொங்கலாய் வருகிறது!
புத்தாண்டுப் பரிசு!
இவ்வாட்சியை சில அரசியல் கண்ணிவெடிகளால் பலவீனப்படுத்த நினைத்த பதவி வேட்டைக் கட்சிகளை சரியாகவே அடையாளம் காணத் தவறாதவர்கள் தமிழக வாக்காளர்களான பெருமக்கள் என்பதை திருமங்கலத் தேர்தல் முடிவில் தி.மு.க.விற்கு அமோக வெற்றியைத் தந்து, இதுதான் தமிழர்களின் இவ்வாண்டுப் பொங்கல் - புத்தாண்டுப் பரிசு என்று காட்டியுள்ளனர்!
சமூகநீதி - மதச்சார்பின்மை
மதவாத அரசியலை, நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நாடு சந்திக்க இருக்கிறது.
அதன் முகத்திரையைக் கிழித்து மக்களுக்கு அம்பலப்படுத்தும் கடமையும் நமக்கு இருக்கிறது. சமூகநீதி, மதச் சார்பின்மை இரண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சி பொங்கும் இந்நாளில் கிளர்ச்சிக்கான தேவைகளும், நம் இதயத்தின் ஒரு பகுதியில் பொங்கத்தான் செய்கின்றன.
ஈழத் தமிழர் சோகம்!
இலங்கையில் 4 லட்சம் ஈழத் தமிழர்கள் காடு வனாந்தரங்களில் மிருகங்களுடன் மிருகங்களைப் போல், சொந்த மண்ணிலேயே சோகக் கடலில் தள்ளப்பட்டு, நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் நிலையை எண்ணினால், கண்ணீர்ப் பொங்கலாகத்தான் இப்பொங்கல் நமக்குத் தெரிகிறது!
என் செய்வது! விடியாத இரவுகள், முடியாத சோகங்கள், என்றும் நிரந்தரமில்லை; விரைவில் வெளிச்சம் வரும் அல்லது வரவழைக்க உலக மக்களின் ஆதரவுக்கரம் திரட்டுவோம் என்று உறுதியுடன்,
"ஆன எந்தமிழர் ஆட்சியைக் காக்க அல்லல்கள்வரின் ஏற்போம்" என்ற சூளுரையைப் புத்தாண்டு உறுதியாக ஏற்போம்!
மூட நம்பிக்கைகளும், ஜாதி இருளும் மாறி, புதிய அறிவொளி தோன்றிடும் புத்தாண்டாக தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்து, தமிழர்களைத் தன்மானமுள்ள இனமாக்கிட விழைவோம் - வீறுகொண்டு உழைப்போம்!
---------------- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் "விடுதலை"
13.1.2009
3 comments:
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை. அவரது மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியின் விளம்பரம் இந்த அறிவிப்பு.
சித்திரை(April) மாதம் புது விதை விதைக்க படும் . எனவேபட்ட அது புத்தாண்டு. பின் அறுவடை செய்வதை கொண்டு கொண்டாடுவது பொங்கல். அந்த அடிப்படை கூட தெரியவில்லை இந்த சுயநல தமிழின தலைவருக்கு. முன்னோர்கள் (தமிழர்கள்) முட்டாள்கள் இல்லை.
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை. அவரது மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியின் விளம்பரம் இந்த அறிவிப்பு.
சித்திரை(April) மாதம் புது விதை விதைக்க படும் . எனவேபட்ட அது புத்தாண்டு. பின் அறுவடை செய்வதை கொண்டு கொண்டாடுவது பொங்கல். அந்த அடிப்படை கூட தெரியவில்லை இந்த சுயநல தமிழின தலைவருக்கு. முன்னோர்கள் (தமிழர்கள்) முட்டாள்கள் இல்லை.
அப்படி என்றால் இந்த ஆண்டுக்கு பெயர் என்ன? கருணா ஆண்டு, அழகிரி ஆண்டு , ஸ்டாலின் ஆண்டு, கனிமொழி ஆண்டு ...?? நாளை திருக்குறளையும் பெயர் மாற்றுவார் அதற்கு பெயர் " கருணா குறள் " ?????
Post a Comment