மதப்பிரச்சாரமும் மதமாற்றமும்
இந்திய மக்களின் கல்வி அறிவுவாசனை அற்ற தன்மையும், பாமரத்தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மங்களும், மத வேற்றுமைகளும், மதமாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறுபாடு உள்ளவர்களும்,மதகர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்து கொண்டு, வெகுகாலமாகவே மதமாற்றப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.
ஆனால், இந்த மதங்களில் மனித வாழ்க்கைத் தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கிறனவா என்று பார்த்தால், ஒன்றுமே காண முடியாத நிலையில்தான் இருந்து வருகின்றன.
எல்லா மதத்துக்குமே - ஒரு கடவுள் உண்டு,மேல் லோகமுண்டு,மோட்ச நரகமுண்டு, ஆத்மா உண்டு,
செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை - தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச - நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்து வருகின்றது.
பிரத்தியட்ச அனுபவத்திலோ, எல்லா மதத்திலும் அயோக்கியர்கள், யோக்கியர்கள் இருந்துதான் வருகிறார்கள்.
எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள்.
எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.
எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன.
எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தவம் இருக்கின்றன.
எல்லா மதக் கடவுள்களும் - தொழுகை, பிரார்த்தனை வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம் செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருந்து தான் வருகின்றது.
மற்றும், எல்லா மதக்கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனத்திற்குப் படாததும், ஆதி அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவை-களுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், கண்களுக்கும் மனத்திற்கும் தோன்றக்கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால், கண்களுக்கும் மனத்திற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லையென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது, என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக்கூடியதாய் இருந்து வருகின்றது. அல்லது நடக்கக்கூடியதாய்ச் செய்யச் சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, அதிருப்தி, கவலை, போதாது என்கிற தரித்திர குணம் ஆகியவை ஒன்று போலவேதான் இருக்கின்றன. எல்லோருடைய வேதமும், கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும், அவை ஒன்றுக்கொன்று, மாறுபட்டதாகவும், பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொருவித அடையாளம் இருக்கின்றது. இந்த நிலையில், மதப்பிரச்சாரத்தால் மத மாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரணமாக, இந்தியர்களில் 8 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; 1 கோடி கிறித்துவர்கள் இருக்கிறார்கள்; சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள்; 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.
மற்றும், கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக் கூடுமானாலும், இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருடங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும், இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாகப் பார்ப்போமேயானால், ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது, அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும் அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண், பெண் தலைமையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும், கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.
ஆகையால், மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று - அதிருப்தி ஒழிந்து, சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும், பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண், பெண் தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா, அல்லது மதம் மாற்றுப் பிரச்சாரம் வேண்டுமா என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டிய முக்கியக் கடமையாகும்.
மதம் மாற்றுதல், மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான - மூர்க்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து-வெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள், பிரத்தியட்ச அனுபவங்கள், எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது, இனி வரும் சுயமரியாதை -அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் - அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழ முடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு - தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம்.
---------------1.1.1937 "பகுத்தறிவு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.
2 comments:
//இனி வரும் சுயமரியாதை -அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் - அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழ முடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு - தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம்.//
அந்த நாளும் வந்திடாதோ?
ஜாதி இல்லாத, மதம் இல்லாத, கடவுள் இல்லாத, மனிதநேயம் மிகுந்த உலகம் எப்போது?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்
Post a Comment