Search This Blog

2.1.09

ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் நான்கரை மணிநேரம் பேசினார்




ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் நான்கரை மணிநேரம் பேசினார் என்றால் கேட்பதற்கு அதிசயமாகவிருக்கும்.

ஆம், தந்தை பெரியார் பேசினார், பேசிய இடம் மயிலாடுதுறை - பேசிய நாள் 8.9.1956.
மயிலாடுதுறை தந்தை பெரியார் அவர்களின் பாடி வீடுகளுள் ஒன்று.


மாயவரத்தில் சமரச சன்மார்க்க சங்க விழாவில் - நானும், ஈ.வெ.ரா.வும் பெற்றெடுத்த குழந்தைதான் சுயமரியாதை இயக்கம். அது தாயுடன் வளராமல் தந்தையுடன் வளர்கிறது என்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

அந்த வகையிலும் வரலாற்றுச் சிறப்புக்குரிய தொட்டில் - இந்த மயிலாடுதுறை.
தந்தை பெரியாரின் மெய்க்காவலர் என்று போற்றப்பட்ட மாயவரம் நடராசன் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்.

நேருவுக்குக் கருப்புக்கொடி காட்டவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் ஆணை பிறப்பித்த காலகட்டத்தில் சுயமரியாதைக் கடலின் சீற்றத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றார் நேரு என்றால், அதனை இயக்கிய மாபெரும் சக்தி மாயவரம் நடராசன் ஆவார்.

எத்தனை எத்தனையோ சுயமரியாதை மாமணிகள் வீர உலா வந்த கொள்கைப் பூமி அது. சித்தர்க்காடு இராமையா, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், எஸ்.வி. லிங்கம், திருச்சி மிலிட்டரி ஓட்டல் சந்தான கிருட்டினன், மாமரத்து மேடை தங்கவேலு, (சிங்கப்பூர்) தி. நாகரத்தினம் திருவிளையாட்டம் ஆ. சவுரிராஜன், நாத்திகன் சிங்காரவேலு, சுவர் எழுத்தாளர் சுப்பையன், டாக்டர் ஆர்.டி. வேலு, செம்பனார் கோயில் எஸ்.பி. கோதண்டபாணி, மூதாட்டி காவேரி அம்மாள் அரையபுரம் கோ. நடேசன், தி.கோ. இராசன், கோ. சீனிவாசன், நா. வடிவேலு, மணல்மேடு இரகுபதி, முனுசாமி, பூக்கடை கோவிந்தராசு என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் இந்த வட்டாரத்தில் எண்ணற்றவர்கள் கலந்துகொண்டு சிறைக்கோட்டம் ஏகிய சீலர்கள் நிறைந்த பகுதி.

ஜாதி ஒழிப்புப் போரில், திருச்சி சிறையில் முதல் களப் பலியான தோழர் இந்தப் பகுதியைச் சேர்ந்த மணல்மேடு வெள்ளைச்சாமிதான்.

பிணத்தைக்கூட கொடுக்காமல், சிறைக்குள் புதைக்கப்பட்ட நிலையில், வீரத்தாய் அன்னை மணியம்மையார் போராடி, புதைத்த பிணத்தைத் தோண்டி எடுக்கச் செய்து திருச்சி மாநகரம் கண்டிராத மாபெரும் ஊர்வலத்தை நடத்தி வீரவணக்கம் செலுத்தச் செய்தார் என்பதெல்லாம் சாதாரணமானதல்ல!


1960 இல் நவம்பர் முதல்தேதி தந்தை பெரியார் அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 82 பொற்காசுகள் கொண்ட மாலையையும் அணிவித்து தன் உச்சியில் புகழ் மகுடத்தைத் தரித்துக் கொண்டது அன்றைய மாயவரம் - இன்றைய மயிலாடுதுறை.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பலியாகி மயிலாடுதுறை மாயவரம் என்று சமஸ்கிருதமயமாகி, சுயமரியாதை வீரரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த மானமிகு ந. கிட்டப்பா அவர்களின் விடா முயற்சியால் மீண்டும் மயிலாடுதுறையான சாதனையை இந்த நேரத்தில் பதிவு செய்வது பொருத்தமாகும்.


-------------------கூடுவோம் மயிலாடுதுறையில்! என்ற தலைப்பில் மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து - "விடுதலை" 1-1-2009

0 comments: