சைக்கிள்கள் மீண்டும் தொடக்கம் முல்லைப் பெரியாறு, கூடங்குளம் தீர்வென்ன? செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழர் தலைவர் பதில்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் சைக்கிள் பயணத்தை துவக்கிவைத்தார் (25.12.2011).
எரிபொருள் சிக்கனத்திற்காகவும், உடல் நலம் பேணுவதற்காகவும் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்ததோடு அல்லாமல் அடுத்து முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் கும், கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினைக்கும் தீர்வு என்ன என்பதை தமிழர் தலை வர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் விளக் கினார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரு சக்கர எரிபொருள் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிளை வளாகத்திற்குள்ளே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி சைக்கிள் பயணத்தை 25.12.2011 அன்று வல்லத்தில் துவக்கி வைத்தபொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சமீபத்தில் தைவான் சீனாவிற்குச் சென்றிருந்தோம். சீனம் எவ்வளவு பெரிய புரட்சிக்கு ஆளாகியிருக்கிறது என்பதை பார்க்கக்கூடியவகையில் மிகப் பெரிய பாடங்களைக் கற்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண் டிய மாணவர்களாக நாங்களும் ஆக்கப் பட்டோம்.
அதிலே மிக முக்கியமான ஒன்று பல்கலைக் கழக வளாகம். இதுபோன்று நூறு ஏக்கராவிற்கு மேலே இருக்கின்ற பீஜிங் பல்கலைக் கழகம் அந்த பல்கலைக் கழகத்தில்தான் புரட்சியாளர் மாசேதுங் அவர்கள் நூலகத்தின் உதவியாளராக இருந்திருக்கின்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.
அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய நிகழ்ச்சியில் பார்த்தபொழுது அந்த வளாகம் முழுவதும் இளம் மாணவர்கள், பேராசிரியர்கள் எல்லாம் அங்கே யாரும் கார்களையோ அல்லது நம்முடைய நாட்டிலே ஊரிலே இருப்பதைப் போல வேகமாகப் புகையைக் கிளப்பக்கூடிய இருசக்கர வாகனங்களையோ பயன்படுத்தவில்லை.
மாறாக சைக்கிள்களையே அதாவது ஈருருளை என்றழைக்கக்கூடிய அந்த மிதிவண்டிகளையே அதிகமாக அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
அதை ஒரு திட்டமாகவே வேலை முறையாகவே கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரித்த பொழுது இதை எங்களுக்கு ஆசிரியர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.
சைக்கிள் வீட்டுக்கும் - நாட்டுக்கும் நல்லது
ஒன்று எங்கள் உடல் நலத்திற்கு இது நல்ல பயிற்சியாக அமைகிறது. இரண்டாவது சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப்பாற்றப்படுகிறது.
மூன்றாவதாக ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை அதிலே உருவாகிறது. எரிபொருள் சிக்கனமும் அதில் இருக்கிறது. இத்தனையும் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும், தனி நபருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
எந்தப் பணியாக இருந்தாலும் நாம் சிறிய அளவிலே தொடங்கினால் அது பெரிய அளவிலே மக்களுக்குப் பயன்படும் என்ற அளவிலே இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்திலே சைக்கிள்களைப் பயன்படுத்த முன்வந்துள்ளோம். அண்மைக் காலத்திலே எப்படி டைப் ரைட்டர்கள் மறைந்து வருகின்றனவோ அதுபோல சைக்கிள்கள் மறைந்து வருகின்றன.
அதற்குப் பதிலாக ஏராளமாக எளிதில் கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக மிகப் பெரிய அளவிற்கு தும்பு - தூசியை உருவாக்கக்கூடிய, எரிபொருளை வீணாக்கக்கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குகிறார்கள்.
ஆகவே அதற்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்தோம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உடற் பயிற்சிக்குப் பதிலாக ஒரு அரைமணி நேரம் கேம்பஸ்சுக்குள் அவர்கள் சைக்கிளில் சுற்றினாலே எல்லோருக்கும் நல்லது. மருத்துவர்களிடம் செல்லுகின்ற பணியை குறைக்கும். நல்ல உடல் நலத்துடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அவர் களுக்குக் கிடைக்கும். வெளியில் இருக்கக்கூடிய திராவிடர் கழக இளைஞரணியினருக்கு இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தி சைக்கிள்கள் மீண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலே வந்திருக்கிறது.
அரசாங்கம் கூட உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கியிருப்பது நல்ல திட்டம். அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு இதை ஒரு ஊக்கமுறையாக தூண்டுகோலாக அமையும் என்று கருதி இந்தப் பணியை செய்கின்றோம். இது வளர வேண்டும்.
வல்லம் வழிகாட்டுகிறது!
சிறு அளவில் இன்றைக்குத் துவக்கப்பட்டா லும், தஞ்சை வல்லத்தில் துவக்கப்பட்டாலும் வல்லம் வழிகாட்டுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே அமையும் என்று சொல்லி இந்த முறையை அமல்படுத்துகிறோம்.
மாணவர்களும், மற்றவர்களும் இதில் சிறப்பாகப் பயன்பெற வேண்டும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும், சுற்றுச்சூழலை பாது காக்கக் கூடிய ஆர்வலர்களும் கரியமிலவாயுவைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இதை ஊடகங்களிலே இருக்கக்கூடிய செய்தியாளர்களான நீங்களேகூட வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலே ஒரு பிரச்சார இயக்கமாக ஆக்கிச் செய்தால் நல்லது. ஊடகத்தினுடைய வலிமை இன்றைக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே உங்க ளுடைய ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.
முல்லைப் பெரியாறு பற்றி
செய்தியாளர்:முல்லைப்பெரியாறு விசயமாக நேற்று நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே வழக்காகப் போடப்பட்டிருக்கிறது. 142 அடி உயரம் உயர்த்தலாம் என்று தெளிவாகவே ஏற்கெனவே நிபுணர்கள் குழு சொல்லிவிட்டது. எத்தனை நிபுணர்குழு போடுவது? நிபுணர் குழுவுக்கு மேல் நிபுணர் குழு போட்டுக் கொண்டிருப்பதிருக் கிறதே அது தேவையற்றது.
மத்தியஅரசைப் பொறுத்தவரையிலே அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே மத்திய அரசு உடனடியாக செயல்படுவதற்கு மாநில அரசுகளுக்குத் தாக்கீது கொடுக்க வேண்டும்.
அதுவும் குறிப்பாக இந்தப் பிரச்சினை ஏன் திடீரென்று முளைத்தது?
நிபுணர்குழுஆனந்த்அவர்களுடைய தலைமையிலே போடப்பட்டுள்ளது. அதற்கு மேலே தேசிய பேரிடர் நிபுணர் குழு என்று போடுவதிருக்கிறதே அது யாரைத் திருப்தி செய்ய போட்டது என்பதே புரியவில்லை. ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்று குழுக் களுக்கு மேல் குழுக்கள் போட்டு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது.
கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசே விரைவுபடுத்திச் சொல்லுங்கள் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதும், அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதும் மிக, மிக முக்கியமான ஒன்று. இன்னும் கேட்டால் இந்திய அரசியல் சட்டத்தில் 365, தயவு செய்து யாரும் 356ரை பழக்கத்தில் நினைத்துக் கொண்டு போட்டு விடாதீர்கள். 356 என்பது ஆட்சிகளை கலைப்பது. 365 என்பது வேறு.
இந்த 365ஆவது விதிப்படி பார்த்தால் தாக்கீது மீது பயன்படாத அரசுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாக இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசு சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை உங்கள் மூலமாக மத்திய அரசுக்குக் குறிப்பாக பிரதமருக்கும், மற்ற வர்களுக்கும் மிகப்பெரிய அளவிலே தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழர்கள் அமைதி யாக இருக்கிற காரணத்தால் அடி வாங்குவதற் காகப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் கேரள அரசுக்கும் வரக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கும் வரக்கூடாது. மத்திய அரசும் இதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
கூடங்குளம் பிரச்சினை
செய்தியாளர்: கூடங்குளம் பிரச்சினை பற்றி உங்கள் கருத்தென்ன?
தமிழர் தலைவர்: கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த வரையிலே அணுசக்தி இல்லாமல் இனிமேல் மின்சாரம் இயங்க முடியாது. நீர்விசை முடிந்துவிட்டது. அதுபோல காற்றாலை மூலம் மின்சாரம் நிரந்தரமாகக் கிடைக்காது. அனல் மின்சாரத்திற்கு சில தடைகள் இருக் கின்றன. நிலக்கரியை வரவழைக்க முடியாது. ஆறுகளும் வற்றிவிட்டன.
கடைசியாக, அறிவியல் பூர்வமாக இருப்பது அணுசக்தி. எனவே அதை அறவே நாம் மூடிவிட வேண்டும் என்று சொல்வதிருக்கிறது பாருங்கள் அது பகுத்தறிவு அடிப்படையிலோ, நடைமுறைக்கு ஒத்ததோ அல்ல. பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிறபொழுது அந்த பாதுகாப்புக்கு அச்சத்தை நீக்க வேண்டிய கடமை குறிப்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
அவர்கள்அதை செய்ய வேண்டும். இன்னும் கேட்டால்அப்துல்கலாம்போன்றவர்கள் தெளிவாகச் சொல்லும் பொழுது நாம் அவரையே எதிர்த்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இன்னும் கேட்டால் சுற்றுச் சூழலிலே வாழக் கூடிய கிராம மக்கள் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு உண்டு. இதுவரையிலே சுனாமி வந்தால் கூட ஆபத்து வராது என்ற நிலையிலே இருக்கிறார்கள். அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எனவே அந்த மக்களைப் பொறுத்த வரையிலே தவறான கருத்துகள் இருப்பதை எல்லாம் நீக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய் சுற்று வட்டாரத்திலே இருக்கக் கூடிய பல கிராமங்கள் இந்த மக்களுக்கெல்லாம் வாழ்வாதாரமாக மத்திய அரசே இலவசமாக ஆயுள் காப்பீட்டைச் செய்யும் என்ற ஒரு திட்டத்தை அவர்கள் கொண்டு வந்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஏதாவது மீறி விபத்துகள் மற்றது நடந்தால் எல்லா இடத்திலும் வரும். இன்னொரு கருத்து என்னவென்றால் விமானத்தில் போகிறோம். விபத்து நடக்கிறது அதற்காக விமானத்தையே நிறுத்திவிட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. கார்களில் போகிறோம் விபத்து நடக்கிறது. எனவே உயிர்களை அலட்சியப்படுத்துகிறோம் என்பதல்ல. அதே நேரத்தில் இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. கடவுள் இல்லாமல் வாழலாம். இதுதான் உண்மை.
செய்தியாளர்:கூடங்குளம் - சிலபேர் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்களே!
தமிழர் தலைவர்:அவர்களுக்கு அச்சம் இருக்கலாம். அந்த கருத்திலே நான் உள்ளே நுழைய விரும்பவில்லை. மக்களுக்கு நியாயமான அச்சம் இருக்கும் பொழுது அதைப்போக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.
ஆகவே இதில் இவர் தவறு பண்ணுகிறார். அவர் தவறு பண்ணுகிறார் என்று மக்களிடையே ஒரு எரிச்சலை உண்டு பண்ணக் கூடாது.
இப்பொழுது எரிகிற நெருப்புக்கு நீங்கள் அணைக்க உதவி பண்ண வேண்டுமே தவிர, அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோலை ஊற்றக் கூடாது (சிரிப்பு).
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.
---------------------"விடுதலை” 27-12-2011