Search This Blog

5.12.09

பெரியாருக்கு தமது அமைச்சரவையையே காணிக்கையாக்கியவர் அண்ணா

தந்தை பெரியாருக்கு தமது அமைச்சரவையையே காணிக்கையாக்கியவர் அண்ணா
குவைத் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பேச்சு


தந்தை பெரியார் அவர்களுக்கு தமது அமைச்சரவையே காணிக்கை என்று அறிவித்து தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் 28.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார்தான் தலைவர்

தந்தை பெரியார் அவர்களிடம் பயிற்சி பெற்ற அண்ணா அவர்கள் ஒப்பற்ற பேச்சாளராக, எழுத்தாளராக உயரிய கலைத்துறை தொண்டராக நடிப்பிலும் மிஞ்சக்கூடியவராக இருந்த அண்ணா அவர்கள் அரசியலுக்கு வருகிறார். தனியே கட்சியை கண்ட நேரத்தில் கூட தாம் உருவாக்கிய கட்சிக்கு தலைவர் தந்தை பெரியார்தான் என்று சொன்னார்.

தலைவர் நாற்காலி தந்தை பெரியாருக்காக காலியாகவே இருக்கும் என்று சொன்னார். அண்ணா அவர்களிடம் இருந்த அந்த பணிவு, கனிவு இவைகள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து கற்றார்.

அண்ணா அவர்கள் செய்த சாதனை இருக்கிறதே, அது ஒப்பற்ற சாதனை; வரலாற்றில் இடம் பெற்ற சாதனை. வரலாற்றில் கூட சில மனிதர்கள் பிறக்கின்றார்கள். சிலர் மரிக்கின்றார்கள்.

வரலாற்றை உருவாக்கியவர்

ஆனால் நண்பர்களே, சிலர் புதைக்கப்பட்டு விடுகிறார்கள்; சிலர் எரிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆனால், சிலர் வரலாற்றில் இடம் பெறக் கூடியத் தலைவராக ஆகிறார்கள்.

ஆனால், அண்ணாவோ தந்தை பெரியார் அவர்களோ வரலாற்றில் இடம்பெற்றவர்கள் அல்லர்; வரலாற்றையே உருவாக்கியவர்கள். அதைத்தான் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வரலாற்றை உருவாக்கிய மேதை அவர். தந்தை பெரியார் அவர்களுக்கு உயிருக்கு உயிராக இருந்தவர். தளபதியாக நின்றவர். போர்க்களத்திலே வென்று காட்டினார். அதன் காரணமாக ஆட்சிக்கு வந்தவுடனே உலகத்திலேயே நடைபெற முடியாத ஓர் அரசியல் விந்தை நடைபெற்றது. 1967ஆம் ஆண்டு தமிழக சட்டசபையிலே அண்ணா அவர்கள் எழுந்து சொன்னார்.

அமைச்சரவையே பெரியாருக்கு காணிக்கை

இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்று சொன்னார். உலகத்திலே எங்காவது இப்படி நடைபெற்றதுண்டா? ஒரு தலைவர் ஒரு புரட்சியாளர் சமுதாய வளைவுகளை நிமிர்த்து வதற்காக தன்னை ஒப்படைத்துக்கொண்ட தலைவர்.

அந்தத் தலைவருடைய காலத்திலே அவருடைய தொண்டர்களே அமைச்சராகி, அந்த அமைச்சரவையையே தந்தை பெரியார் காலடியில் வைக்கின்றோம் என்று அண்ணா அவர்கள் சொன்ன, செய்த வரலாறு உலகத்தில் வேறு எங்காவது உண்டா? தேடிப்பாருங்கள்.

அதுமட்டுமல்ல; தந்தை பெரியாருடைய கொள்கையை நடைமுறைப்படுத்திக் காட்டினார் அண்ணா அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடைமுறைப்படுத்திக்காட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடத்தி வைத்த திருமணங்கள் கூட செல்லாது. எவ்வளவு பெரிய மனிதர்கள் திருமணங்களை நடத்தி வைத்தாலும் செல்லாது. இதுதான் அன்றைக்கு இருந்த நிலை. நண்பர்களே! அண்ணா அவர்கள்தான்_அவர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று சட்ட வடிவமாக்கினார்.

தமிழர்களுக்கு சுயமரியாதைத் திருமணங்களின் மூலம் மான உணர்வைப் பெற்றுத்தந்தார். அண்ணா சட்டத்தைக் கொண்டு வந்து, ஏற்கெனவே நடந்த திருமணங்கள் செல்லும்; இனி நடக்கப் போகிற திருமணங்களும் செல்லும் என்று உருவாக்கிய பெருமை அண்ணா அவர்களையே சாரும்.

ஓராண்டு காலத்திற்குள் முப்பெரும் சாதனை

அவர் ஆண்ட ஓராண்டு காலத்திற்குள் முப்பெரும் சாதனைகளைச் செய்தார். தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

அண்ணா அவர்கள் உடல்நிலை சரியில்லாத நிலை. அந்த நிகழ்ச்சிக்கு டாக்டர்கள் போகக்கூடாது என்று சொன்னார்கள் அவரது உடல் நிலையைக் கருதி. அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சை கேட்க நான் வாய்ப்பு பெற்றேன்.

அண்ணா பேசுகிறார்: நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

நீங்கள் போனால் உடல்நிலை கெடும் என்று சொன்னார்கள். உடனே நான் மருத்துவர்களிடம் சொன்னேன். என்னுடைய தாயகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லையென்றால், அதனால் என்னுடைய உடலுக்கு விளைவுகள் ஏற்பட்டால் அதைவிடப் பெருமை வேறு எனக்கு இல்லை.

இந்த உயிர் இருந்து என்ன பயன்?

எனவே, தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்த இந்த நிகழ்ச்சியில் என்னுடைய வாழ்க்கை முடியுமானால், அதைப் பற்றிக் கவலை இல்லை. இந்த உயிர் இருந்து என்ன பயன்?

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விழாவிற்குத் துணிந்துதான் வந்திருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

எனவே, இன்றைக்கு தமிழ்நாடு என்று உலகம் பூராவும் தெரிந்திருக்கிறது. இதற்கு முன்னாலே பலமுறை செய்ய எண்ணினார்கள். ஆனால் இதை தி.மு.க தான் செய்ய வேண்டும் என்று சரித்திரம் விட்டு வைத்திருக்கிறது. எனவேதான் நான் இதை செய்திருக்கிறேன் என்று அண்ணா அவர்கள் இதை சட்டமன்றத்திலே பதிவு செய்தார்கள். (பலத்த கைதட்டல்)

அதற்கடுத்து இருமொழிக்கொள்கை பின்பற்றப்படும் என்று அண்ணா சொன்னார். இந்தி மொழிக்கு தமிழகத்தில் இடமில்லை. ஆங்கிலம், தமிழ் மொழி பின்பற்றப்படும் என்று அறிவித்தார்கள்.

அண்ணா அவர்களின் இப்படிப்பட்ட அரிய சாதனை பலரின் வேதனையை நீக்கியிருக்கிறது. இவை எல்லாம் மிகப்பெரிய சரித்திர சாதனைகளாக நிலை பெற்று நின்றன.

அண்ணா அவர்களுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. ஆட்சியாளர் அண்ணா, பேச்சாளர் அண்ணா. எழுத்தாளர் அண்ணா, நாடாளு-மன்றவாதி அண்ணா என்று பல பரிமாணங்கள் உண்டு.

அண்ணாவின் பேச்சு

அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில் மிகச் சிறந்தவர். தமிழ்மொழிப் பேச்சில் எப்படி வல்லுநரோ அதே போல ஆங்கிலத்திலே அண்ணா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர்.

நாம் அண்ணா அவர்களுடைய தமிழ்ப் பேச்சைத்தான் பல நேரங்களிலே கேட்டிருக்கிறோமே, தவிர அவருடைய ஆங்கில நடையை நாம் கேட்டது கிடையாது. அவருடைய ஆங்கில நடை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு முறை மாணவர்கள் பேச அழைத்தார்கள்.

அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள மாணவர்கள், அண்ணா அவர்களே! நீங்கள் இப்பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொன்னார்கள். ஆற்றோரம்

அதற்குத் தலைப்பு என்ன தெரியுமா? அதாவது ஆற்றோரம் என்ற தலைப்பிலே ஆங்கிலத்திலே பேசுங்கள் என்று சொன்னார்கள்.

உடனடியாக அண்ணா அவர்கள் பேச ஆரம்பித்தார். நம்முடைய இந்திய வரலாறு எங்கேயிருந்து தொடங்குகிறது என்றால் கங்கைக் கரையிலேயிருந்து தொடங்குவதாக எழுதியிருக்கின்றார்கள்.

நமது வரலாறு காவிரிக்கரையிலிருந்து வரவேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது என்று ஆங்கிலத்திலே மிக அற்புதமாகச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த நிலையிலே அமெரிக்கா செல்கின்றார். சப்_பெலோஷிப் என்னும் பட்டத்தை அமெரிக்காவில் அண்ணா அவர்களுக்கு வழங்குகினர்.அண்ணா அவர்கள் அமெரிக்க மாணவர்களிடம் உரையாற்றுகின்றார்.

அண்ணாவிடம் கேள்வி

அண்ணாவின் ஆங்கில நடையைப் கேட்டுவிட்டு வியப்படைந்த மாணவர்கள் ஒன்றைக் கேட்கிறார்கள். அண்ணா அவர்களே! பிக்காஸ் (because) என்ற வார்த்தை மூன்று முறை வரக்கூடிய ஒரு வாக்கியத்தை நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அண்ணா அவர்கள், இருங்கள் நான் யோசித்துச் சொல்லுகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை.

பட்டென்று சொன்னார்: No sentence ends with
because because, because is the conjunction’ என்று சொன்னார்

(பலத்த கைதட்டல்)

. --------------- தொடரும் --------------"விடுதலை" 30-11-2009

0 comments: