Search This Blog

15.12.09

கோவூர்- ஓர் எதிர்நாயகர், சிலை தகர்ப்பாளர்



கடவுள், கடவுள் தன்மை, மதம், மதப் பிரச்சாரம் என்பதன் பெயரால் வன்முறையானது எப்படி எல்லாம் திட்டமிட்டு பெரிய அளவில் தூண்டிவிடப்படுகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பிட்ட சில நல்ல குணங்களின் மொத்த உருவமாக கடவுளைக் காணும் கருத்தே, யதார்த்த உலகில் இருந்து தப்பிக்கத்தான். இது எப்படிப்பட்டதென்றால், அரசியல்வாதி பொது இடத்தில் அமைதி பற்றிப் பேசிக்கொண்டே, மறைவிடத்தில் சண்டைக்கு திட்டமிடுவதைப் போன்றதே.

அமைப்பாக்கப்பட்ட மதங்கள் மற்றும் சமயப் பிரிவுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காகக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட்ட கருத்துகளிலிருந்து மனத்தை விடுவிப்பதற்காக டாக்டர் கோவூர் ஆற்றிய பணிகளின் பின்னணியில் மட்டுமின்றி, நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டுள்ள எந்தவொரு கருத்தையும் அல்லது கொள்கையையும், அறிவியல் பூர்வமாக ஆராய்வதற்கான அணுகுமுறையை நம்முடைய மனத்தில் ஆழப்பதிய வைப்பதற்கு அவர் புரிந்த உதவிகளின் பின்னணியிலும்தான் டாக்டர் கோவூரைப் பற்றி நான் பேசுகிறேன்.

முன்னாள் அறிவியல்காரரான பகவந்தத்தை அம்பலப்படுத்தி டாக்டர் கோவூர் எழுதிய ஒரு கட்டுரைதான், சத்தியநாராயண ராஜுவின் (சத்யசாயி பாபா) சார்பில் பரப்பப்பட்டு வந்த பொய்களை சிறப்பாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியது. ராஜுவின் பொய்க்கருத்துகளை அழகாகவும் தெளிவாகவும் அம்பலப்படுத்திய டாக்டர் கோவூரின் இந்த சவாலில் இருந்து பகவந்தத்தால் எந்த வழியிலும் தப்பிக்க முடியவில்லை. சத்திய நாராயண ராஜுவை அது முடித்துக்கட்டி இருக்கிறது. அப்பாவி மக்களின் ஏராமளித்தனத்தைப் பயன்படுத்தி, அவர்களை சுரண்டி உறிஞ்சும் முதல்தர மோசடிப் பேர்வழியாக, பொது மக்களை ஏமாற்றுபவராக, குற்றவாளியாக அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.

உண்மைக்கு அது எவ்விதமான உண்மையாக இருந்தாலும் விளம்பரமோ பிரச்சாரமோ தேவையா? பின் ஏன் சத்தியநாராயண ராஜுவும் அவரது கையாள்களான கஸ்தூரி, பகவந்தம், கோகக் போன்றோரும் பலவித பிரச்சார, விளம்பர முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்? சாதாரண அறிவுகூட இவர்களுக்கு கிடையாது. சத்தியநாராயண ராஜுவின் கடவுள் தன்மையைப் பற்றி அவர்கள் கட்டிவிடும் பொய்கள் மூலம் அவர்களின் அற்பத்தனமும் குறுகிய மனமும் தாமே அம்பலமாகின்றன.

டாக்டர் கோவூரின் சவால்கள் இந்த ஒரு மனிதரிடம் மட்டும் விடுக்கப்பட்டதல்ல. அற்புதம் புரிவோர், சோதிடக்காரர்கள், ஆவித் தொடர்பினர், அதிசய ஆற்றல்கள் படைத்தோர், மறை ஞானிகள், ஆன்மிக வாதிகள் என்றெல்லாம் தம்மைத்தாமே அழைத்துக் கொள்வோர் யாராயிருந்தாலும், உலகத்தின் எந்தப் பகுதியில் அவர்கள் இருந்தாலும், அவர்கள் எல்லாரிடமும், அவர்கள் தம் அற்புதங்களை நிரூபித்துக் காட்டுமாறு விடுக்கப்பட்டதாகும். இந்த ஆன்மிக மனிதர்களின்அவதார புருசர்களின் அற்புத பெருமைகள் எல்லாம், அவர்களின் சொந்த வசதியை பெருக்கிக் கொள்வதற்கான வெற்றுப் பிரச்சாரமே ஆகும். தமக்குத் தாமே அவர்கள் உரிமை பாராட்டிக் கொள்ளும் பெயர்களும், பட்டங்களும், சாதனைகளும், திறமைகளும், எந்த ஓர் ஆழமான ஆய்வின் முன்னும் நிற்க முடியாது. அச்சமற்ற ஓர் உண்மையான மனிதரையே என்னால் கோவூரிடத்தில் பார்க்க முடிகிறது. தனது நோக்கத்தில் அவர் கொண்டிருந்த நேர்மை, மற்றும் அவரது எளிமையான நடவடிக்கைகள் அவரை அனைத்து வகை மக்களிடத்தும் பிணைத்திருந்தது. அவர் ஓர் அதி உயர் மனிதரல்லர். தனக்குத்தானே உயர்வும் அவர் கற்பித்துக் கொண்டதுமில்லை. ஆனால் கோவூ-ரின் தெளிவான உண்மையும் அதற்கான காரணங்களுமே கடவுள் அவதாரங்களின் பொய்களை அம்பலப்படுத்தியது.

எண்பது வயதான இந்த சிற்றுருவ மனிதர் ஒரு பெரிய கேள்விக்குறியாக நின்றார். அவருடைய முதுமையானது அவரது இளமை ததும்பும் சவாலின் வீரியத்தை குறைக்கவில்லை. மேலும் அவரை நீங்கள் உற்றுக் கவனித்திருந்தால் அவருக்கு இணையாகவோ அல்லது அவர் அளவுக்கு வரவோகூட எந்த ஓர் அவதார மனிதருக்கும் தகுதியில்லை என்பது புரியும். அவரது எளிமை, நோக்கத்தின் தூய்மை, மனிதர்களுடன் அவர் கொண்டிருந்த நேரிய, சீரிய நட்பு எல்லாம் அவரை ஒரு பெரியாராக ஆக்கின.

‘‘கோவூர் இறந்துவிட்டார்’’ என்று சொல்பவர் யார்? அதை நம்பாதீர்கள்! கோவூர் சாகவில்லை! அவர் சாகவும் முடியாது! ஏனெனில் அவரது படைப்புகள் இன்றும் இளமையுடன் உயிருடன் உள்ளன. என்றென்றும் அவை உயிரோடிருக்கும்.

-------------------நன்றி:- "விடுதலை" 4-12-2009

0 comments: