Search This Blog

24.12.09

பெரியாரின் வெற்றிக்கொடி



தந்தை பெரியாரின் வெற்றிக்கொடி

தஞ்சை பகுத்தறிவாளர் தோழர் இரா.இரத்தினகிரி அவர்கள், வாழ்வியல் சிந்தனைப் பகுதிக்காக, எனக்கு நினைவூட்டி கீழ்க்காணும் அரிய செய்தியை ஒரு கட்டுரை வடிவில் தயாரித்து அனுப்பினார்.

அய்யா தந்தை பெரியார் அவர்களது 36 ஆவது நினைவு நாள் இன்று.

அவர்களது லட்சியங்களும், கொள்கை, கோட்பாடு அவைகளை அடைய அவர்கள் காட்டிய வழிமுறைகளும், அறப்போராட்டங்களும் இன்றும் தொடருகின்றனஅவர்தம் தூய தொண்டர்களால்,

நமக்குப் பலவீனம் என்று எதையும் கருதி, மனிதர்கள் அதைரியப்படக்கூடக் கூடாது; மாறாக, பலவீனமாக இருந்தாலும்கூட அதை பலமாக்கிக் கொள்ளும் துணிவுடைமை தந்தை பெரியாரின் சொத்தாகும்.

1967 பொதுத்தேர்தலின் முடிவில் அறிக்கை தந்தபோது, ‘‘நான் நல்லவண்ணம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல, மூன்றாவது முறையாகும்.

ஆனால் கடந்த இரண்டு முறைகளில் இந்த தோல்விகளை எப்படி வெற்றிகளாக மாற்றிக் கொண்டேனோ, அது போலவே இம்முறையும் மாற்றிக்கொள்ள என்னால் முடியும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அது போலவே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது என்பது வரலாறு.

தோழர் இரா.இரத்தினகிரியின் தகவல் பெட்டியைத் திறப்போமா?

அய்யா அவர்கள் தனக்கு உடலில் ஏற்பட்ட நஷ்டங்களையே கூட இலாபமாக மாற்றி, ஈடுகட்டிக் கொள்ளும் வல்லமையை வளர்த்துக் கொண்டவர்கள். அதுதான் பகுத்தறிவின் அடையாளம். எடுத்துக்காட்டாக. அவருக்கு வயதான நிலையில் பற்கள் எல்லாம் விழுந்துவிட்டன. அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தோழர்கள், மருத்துவர்கள்கூட ‘பல்செட்’ வைத்துக்கொள்ளலாம் என்று வலியுறுத்தினார்கள். அய்யா அதை ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

‘பல் இல்லாவிட்டால் சொல்போய்விடும்’ என்பார்கள். ஆனால் அய்யா அவர்கள் பல் இல்லாவிடினும்கூட தமது சொற்பொழிவின் சொற்களை வெகு தெளிவாகப் பயன்படுத்தினார். ஒலி உச்சரிப்பு குறையாமல் சொற்பொழிவைக் கேட்பவர்களுக்குப் பொருள் நல்ல வண்ணம் புரியும்படி அய்யா அவர்கள் பேசுவதை, பேச்சு வெளிப்படுவதை நீங்கள் இன்றைக்கும் கூட அவரது சொற்பொழிவுகளின் ஒலி நாடா ஒலிபரப்பப்படும் போது துல்லியமாகக் கேட்கலாம்.

அய்யா அவர்கள், வாயின் பல் ஈறுகளையே பற்களைபோலப் பயன்படுத்திக் கொண்டார். பற்கள் இல்லாமலேயே அவர் இறைச்சி உண்ணும் விதம் ரசிக்கத்தக்கது. அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யாவின் உடல் நலத்துக்கு உகந்த மாதிரியான மிருதுவான இறைச்சித் துண்டுகளைத் தேர்ந்தெடுத்து எளிதாக ஜீரணமாகும்படி, மிளகு சேர்த்து மணம் மிகுந்தவாறு சமைத்து பக்குவமாகக் கொடுப்பார்கள்.

அவர், உணவில், இறைச்சித் துண்டுகளை எடுத்து அதைத் தமது வலது கை கட்டைவிரலில் ஆள்காட்டி விரல் இடுக்கில் வைத்து அழுத்தி நசுக்கி விரல்களிலேயே, மாவு பதத்துக்கு இறைச்சியை மசிய வைத்துவிடுவார். அதை வாயில்போட்டு மென்று சுவைத்துத் தம்முடைய பல் ஈறுகளால் மென்று கூழாக்கி பின் சாப்பிடுவார்கள். பல் இல்லையே என்பதற்காக அதை விட்டுவிடமாட்டார்.

அதுபோலவே, மதுரை பெரியவர் தேவசகாயம் போன்ற சில தோழர்கள் நல்ல ‘முறுக்குப் பொட்டலம்’ அய்யாவிடம் அன்போடு கொடுப்பார்கள். அய்யா எனக்குத்தான் பல் இல்லையே, ஏன் கொடுக்கின்றீர்கள்? என்று சொல்லி மறுக்கமாட்டார். அன்போடு அதை வாங்கிக்கொண்டு அவர்கள் முன்னிலையில் பொட்டலத்தைப் பிரித்து அந்த முறுக்கில் ஒன்றை எடுத்துக் கைகளால் பொடிப் பொடியாக்கி, வாயில் நிறைய உமிழ்நீரைச் சேகரித்துக்கொண்டு போட்டுக் கூழாக்கிச் சுவைத்து விழுங்கி மகிழ்ந்து பொட்டலத்தைக் கொண்டு வந்து கொடுத்தவரிடம் மிகச் சுவையாக இருப்பதை வெகுவாகப் பாராட்டியும் சொல்வார். பொதுவாக பல் விழுந்தவர்கள் மட்டும் அல்ல, ‘பல்செட்’ கட்டிக்கொண்டவர்கள் கூட முறுக்கு சாப்பிட மாட்டார்கள்.

‘ஒன்று’ போய் விட்டதனாலேயே அதனால் ஆகக் கூடிய வேலை போய்விட்டது என்று இல்லாமல், பலவீனத்தைக் கூட பலமாக மாற்றி வாழ்ந்து காட்டுவதுதான் பகுத்தறிவு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, அருமை நண்பர்களே! எதற்கும் கலங்காதீர்கள்; அச்சம் தேவையில்லை. தோல்விகள் வந்தால்கூட, அது நிரந்தரம் என்று கருதி மனமுடையாதீர்கள். பலவீனத்தை பலமாக்கிக்கொள்ளுவது போல, தோல்விகளை புதிய அனுபவங்களாக்கி அந்தப் படிக்கட்டு மீதேறி நின்று வெற்றிக் கொடியைப் பறக்க விடுங்கள்!

--------------------- கி.வீரமணி அவர்கள் 24-12-2009 “விடுதலை” யில் எழுதிய ”வாழ்வியல் சிந்தனைகள் ”

0 comments: