Search This Blog

3.12.09

பெரியார் படைவரிசைக்காரன் திருமாவளவன்

கடந்த தலைமுறைக்குப் பெரியார் வழிகாட்டினார்
எங்கள் தலைமுறைக்கு தமிழர் தலைவர் வழிகாட்டுகிறார்
விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் எம்.பி. முழக்கம்

கடந்த தலைமுறைக்குத் தந்தை பெரியார் வழிகாட்டினார்; எங்கள் தலைமுறைக்குப் பெரியார் வழிவந்த தமிழர் தலைவர் வீரமணி வழிகாட்டுகிறார் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

சென்னை மந்தைவெளி மார்க்கெட்டில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

கடந்த வாரம் நான் டெல்லியில் இருந்தபோது பெரியார் மய்யத்துக்குச் சென்று பார்த்தேன். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். மெய்ச்சிலிர்த்துப் போனேன். நம் தமிழர் தலைவரின் செயல்திறனைக் கண்டு வியந்து போனேன்.

முன்பு இதே டெல்லியில் பெரியார் மய்யத்தை இடித்தார்கள். இப்பொழுது அதைவிட அருமையான ஓரிடத்தில் பெரியார் மய்யம் கொண்டுள்ளார்.

டெல்லியில் தமிழர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்ற உரிமையோடு குதூகலித்தேன். பெரியார் அகாடமி பொறுப்பாளர் முனைவர் இராமசாமி எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்தார். மய்யத்தின் செயல்பாடுகளையும், நோக்கங்களையும் விவரித்தார்.

பெரியார் மய்யம் அரங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் பயன்படுத்திக் கொள்ளும்

சென்னையில் ஒரு பெரியார் திடல் என்றால், டெல்லியில் ஒரு பெரியார் மய்யம் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.

பெரியார் கொள்கைகளை ஒப்புக்காகப் பரப்புவது என்று இல்லாமல், ஆக்க ரீதியாக, தொலைநோக்கோடு தமிழர் தலைவர் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார் என்பதற்கு டெல்லி பெரியார் மய்யம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

பெரியார் கொள்கைகளை உலகெலாம் பரப்பிட அடித்தளமிட்டுள்ளார். பெரியார் மய்ய அரங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும்.

நிறுவனப்படுத்துதல்

பெரியார் கொள்கைகளை நிரந்தரமாகப் பரப்பிட நிறுவனப்படுத்துதல் என்பதில் தமிழர் தலைவர் பெருவெற்றி பெற்றுள்ளார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்கிற அளவுக்குக் கல்வி நிறுவனங்களை வளர்த்து, அதன்மூலமும் பெரியாரியலை நிரந்தரப்படுத்தும் ஆக்கப்பூர்வமான செயல் தமிழர் தலைவருடையது.

சிலர் பேச்சாளர்களாக இருப்பார்கள், சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் சிறந்த நிருவாகிகளாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது, தமிழர் தலைவர் இவை அனைத்தும் நிறைந்த தலைவராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒன்றுக்குப் பத்தாக வளர்த்தவர்

தந்தை பெரியார் உருவாக்கியதை ஒன்றுக்குப் பத்தாக வளர்த்தெடுத்து தந்தை பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

கடந்த தலைமுறைக்குத் தந்தை பெரியார் வழிகாட்டியாக இருந்தார். எங்கள் தலைமுறைக்கு வழிகாட்டியாகத் தமிழர் தலைவர் விளங்குகிறார்.

பாடம் கற்கிறேன்

தமிழர் தலைவர் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளாகிய நாங்கள் பாடம் கற்றுக் கொள்கிறோம். அவரின் உத்திகளைப் பின்பற்ற விரும்புகிறோம். பெரியாரியலுக்கு விரோதிகள் விடுதலைச்சிறுத்தைகள் என்றுகூட பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை ஆசிரியர் அவர்களோ, திராவிடர் கழகமோ ஏற்றுக்கொள்ளவில்லை. திருமாவளவன் எங்கு இருந்தாலும், நின்றாலும் அவன் பெரியார் படைவரிசைக்காரன் என்று கருதக் கூடியவர்கள்தாம் ஆசிரியரும், திராவிடர் கழகத்துக்காரர்களும்.

ஈழத் தமிழர்களுக்காக ரயில் மறியல் போராட்டமாக இருந்தாலும் சரி, சமூகநீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, எங்களுக்கு மறவாமல் அழைப்புக் கொடுப்பவர் ஆசிரியர். நாங்களும் மிகவும் ஆர்வத்தோடு, உரிமையோடு அவற்றில் எல்லாம் பங்கு கொண்டு வருகிறோம்.

எங்களைப் புரிந்துகொண்ட இயக்கம் திராவிடர் கழகம். புரிந்துகொண்ட தலைவர் ஆசிரியர். நல்லிணக்கம் பேணுவதில் மிகச் சிறந்த பெரியார் வாரிசு அவர். அவர் நூறாண்டும் கடந்து நல்ல உடல்நலத்துட-னும், மன நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும்; எங்களுக்கெல்லாம் வழிகாட்டவேண்டும் என்று அவரின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளில் வாழ்த்துகின்றோம்.

---------------------நன்றி:- "விடுதலை" 3-12-2009

0 comments: