Search This Blog

14.12.09

போக்குவரத்துக்கு இடையூறாக அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள கோயில்கள் 3000



3000 கோயில்களாம்

சென்னை மாநகரில் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள கோயில்கள் 3000 என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது போக்குவரத்துக்கும், நடந்து செல்லும் மக்களுக்கும் பெரிய இடையூறாக உள்ளது என்றும், இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கோயில்கள் எந்த மதங்களைச் சார்ந்தவைகளாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கறாராகத் தீர்ப்பு வழங்கிவிட்டபின்னர் அரசுகள், அதிகாரிகள் செயல்படுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

மதம், கோயில், பக்திக் கண்ணோட்டத்தில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடுமோ என்கிற அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை.

இந்தக் கோயில்கள் சட்ட விரோதமாக, அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்படுகின்றன என்பதும் ஒன்று; போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் நடப்பதற்குக் காரணமாகவும் நடந்து செல்லும் மக்களுக்குத் தொல்லையாகவும் இருக்கும்போது பொது மக்கள் ஏன் எதிர்க்கப் போகிறார்கள் - அதிருப்தி அடைவார்கள்?

சென்னை சைதாப்பேட்டையில் மாடல் பள்ளி முன்னர் எவ்வளவு பெரிய இடம் கோயிலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? திருவான்மியூரில், காய்கறி அங்காடிக்கு எதிரில் நடுச் சாலையில் எழுப்பப்பட்டுள்ள கோயிலைக் காண்போரின் கண்களை உறுத்தத்தான் செய்யும்.

இந்த நடைபாதைக் கோயில்கள் ஒவ்வொன்றிலும் பெரிய பெரிய உண்டியல்கள். இரவு நேரங்களில் அந்த உண்டியல் தொகைகளைப் பங்கு போட்டுக் கொண்டு, மதுபானம் அருந்தி, சமூக விரோத நடவடிக்கைகள் களேபரமாக நடைபெறுவதைப் பொது மக்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டு முகம் சுழித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

மக்கள் வசதிக்காக ஏராளமான பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூருவை விஞ்சும் அளவுக்கு பூங்கா நகரமாக சென்னை உருவெடுத்து வருகிறது. அந்தப் பூங்காவுக்குள்கூட கோயிலைக் கட்டி தொல்லை கொடுத்து வருகிறார்கள். (எடுத்துக்காட்டு சிவன் பூங்கா கலைஞர் நகர்).

மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலக வளாகங்களில் கோயில் எழுப்புகிறார்கள். எடுத்துக்காட்டு:

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் அலுவலகத்தின் வளாகத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பிரம்மாண்டமான கோயிலை சட்ட விரோதமாகக் கட்டி, நாள்தோறும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. வேலியே பயிரை மேயும் இந்த நிலை கண்ணுக்குத் தெரிந்து நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சி, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களும், அலுவலர்களும் சேர்ந்து கோயில்களைக் கட்டி வருகிறார்கள்.

இது கோயில் பிரச்சினை என்பதற்காக மட்டும் அல்ல; சட்டங்களைத் தூக்கியெறிந்து அரசு அதிகாரிகள் செயல்படலாம் என்கிற ஒரு மனப்பான்மையை இது உருவாக்குகிறதா இல்லையா? இந்த நிலை உகந்தது தானா?

அரசு அதிகாரிகள் மத்தியில் சட்ட மீறல் எண்ணத்தைத் தூண்டும் இந்தக் குற்றத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும் என்றும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும்.

----------------------- ”விடுதலை” தலையங்கம் 14-12-2009

0 comments: