Search This Blog

31.12.09

பெரியார் தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ,இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?


மனிதன் என்பவன் எல்லையற்ற சுயநலவாதியாக இருக்கிறான்
பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

மனிதன் என்பவன் எல்லையற்ற சுயநலவாதியாக இருக்கிறான் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மனிதன் என்பவன் ஒரு கூட்டுப் பொருள் கொண்டவன். தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ ஒரு இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?

அவனது அவயவங்களில் ஒன்று இரண்டு குறையாக இருந்த போதிலும் அவனை மனிதன் என்று தான் அழைக்கிறோம். மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கெல்லாம் இல்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நாய் நன்றியை கொஞ்சம் கூட குறையாமல் விசுவாசத்துடன் தன் எஜமானனுடன் இருக்கும்.

தன் எஜமானன் வெளியேசென்றுவிட்டு வந்ததும் நன்றியின் அறிகுறியாக தத்தி தாவி வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக்குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும் - எது? அய்ந்தறிவுள்ள நாய்.

அய்ந்தறிவுள்ள நாய் இப்படி தன் நன்றியைக் காட்டும். மனிதனோ நாயைப் போன்று நன்றி இயல்பு உடையவன் அல்லன். நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் மறு நிமிடத்தில் அதே நாய் தன் எஜமானனிடம் அன்பு காட்டுவதைப் பார்க்கலாம். சோறு போடவிட்டாலும் நாய் விசுவாசத்தைக் காட்டும். ஆனால் மனிதன் அப்படி அல்லன். என்ன நன்மைக்கு அழைத்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டால் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக் கொள்வான். இது மனிதனின் ஜீவ சுபாவமாகும்.

மனிதனுக்கு சகலமும் சுயநலம்

மனிதனுக்கு சகலமும் சுயநலம், வியாபார முறை துரோகம் என்பது இயல்பு. எனவே இவர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அல்லவா நான் ஏமாற்றம் அடையவேண்டும்? யாரும் நன்றி காட்டமாட்டார்கள். யாரும் தேவையில்லை என்று கருதி பொதுப்பணியில் தானே இறங்கினார் பெரியார்.

பெரியார் அவர்கள் நடத்திய குடி அரசு ஏட்டில் உள்ள செய்திகளை இப்பொழுது நாங்கள்முதல் தொகுதியை வெளியிட்டிருக்கின்றோம், இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. குடிஅரசு மிகுந்த பொருள் நட்டத்தில் நடந்தது. நம்முடைய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் குடிஅரசு ஏட்டின் முகவராக இங்கே இருந்தார்கள்.

குடிஅரசுவில் பணியாற்றிய நண்பர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் சொன்னார்கள், அய்யா நிறைய பொருள் நட்டம் ஆகிறது; இந்த இதழை நாம் நிறுத்திவிடலாம். பொதுக் கூட்டத்தில் பேசுகிறீர்கள்; அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் போதும்; பத்திரிகை வேண்டாம், இதனால் நட்டமாகிறது என்று சொன்னார்கள். பெரியார் சொன்னார்

இப்படி சொன்னவுடனே அய்யா அவர்கள் சொன்னார்கள், குடிஅரசு ஏட்டை யார் வாங்குகிறார்கள்? யார் படிக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

நான் ஒரு கொள்கையிலே திட சித்தம் உள்ளவன். இந்தக் கொள்கையைப் பரப்புவதற்காக 1925லேயிருந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி குடிஅரசு இதழை நடத்தி வருகிறேன்.

எனவே நட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரும் வாங்கவில்லையானாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

நானே எழுதி நானே படித்து.........!

நான் ஒருவனே எழுதி நான் ஒருவனே அச்சடித்து நானே திண்ணையிலே உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பேனே தவிர குடிஅரசு இதழை நிறுத்த மாட்டேன் என்று சொன்னார்.

தந்தை பெரியாருடைய உறுதியை எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் கண்ட வாழ்வியலில் இது போன்ற சம்பவங்கள்தான் முக்கியமானது.

ஒரு முறை கலைஞரைப் பார்த்து கேட்டார்கள்

நீரோடு போகக் கூடாது. ஒரு முறை கலைஞரைப் பார்த்துக் கோட்டார்கள். நெருக்கடி காலத்திலே உங்கள் மீது குற்றச்சாற்றே என்னவென்றால், நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதுதான்.

உடனே கலைஞர் அவர்கள் பளிச்சென்று அதற்கு பதில் சொன்னார். ஏனென்றால் தந்தை பெரியாருடைய குருகுலத்திலே பயின்றவர். அந்த பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பே கேள்வி_பதில்தான்.

வரலாற்றிலேயே கிடையாது

ஆகவே கேள்விகளை யார் கேட்டாலும் பெரியார் மாதிரி பதில் சொன்ன தலைவர்கள் வரலாற்றிலேயே கிடையாது. நீங்கள் பெரியார் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். பெரியாரை எதிர்த்து ஒருவர் கேள்வி கேட்டார். எழுதியவருடைய பேனா எழுதவில்லை என்று தெரிந்தவுடனே தன்னுடைய பேனாவை தந்தை பெரியார் எடுத்துக்கொடுத்தார்.

என்னுடைய பேனா மூலம் எழுதிக்கொடுங்கள். கேள்வி கேளுங்கள் என்று எடுத்துச்சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். ஆகவே அவரைப் பொறுத்த வரையிலே எதிர் நீச்சல் அடிக்கக் கூடியவர். தந்தை பெரியார் அவர்களிடத்திலே இருந்த தொண்டர்கள், தோழர்கள்,பயின்றவர்கள்தாம் அண்ணா அவர்களிலிருந்து, கலைஞர் அவர்களிலிருந்து எங்களிலிருந்து வந்தவர்கள்.

கலைஞர் பளிச்சென்று பதில் சொன்னார்

கலைஞர் அவர்களுடைய பதவி பறிபோயிருக்கிறது. நெருக்கடிகாலம் இதற்காகத்தான் உங்களுடைய பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். ஆகவே நீங்கள் தேசிய நீரோட்டத்தோடு கலந்து சென்றிருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று சொன்னபொழுது கலைஞர் அவர்கள் பளிச்சென்று சென்னார், நான் ஈரோடு போனவன்; ஆகவே நீரோடு போக மாட்டேன் என்று அழகாக பதில் சொன்னார் (பலத்த கைதட்டல்)

ஏனென்றால் ஈரோடு போனவன் என்றால், அது எதிர் நீச்சல். எதிர் நீச்சல் அடிக்கும் பொழுதுதான் மனிதன் இலக்கை அடைய முடியுமே தவிர, ஓடுகின்ற நீரில் அவன் விழுந்துவிட்டால், அந்த நீரோட்டத்தோடே தான் அவன் போக வேண்டும்.

இரண்டு வகை தலைவர்கள்

தலைவர்களிலே இரண்டு பேர் உண்டு. ஒரு வகை நீரோடு போகக் கூடியவர்கள். இன்னும் சிலர் மிகச்சிலர் ஈரோடு போகக்கூடியவர்கள். ஈரோடு என்பது ஊரைக் குறிக்காது. அதன் இலக்கை குறிக்கும் அவ்வளவுதான். தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனையில் சொல்லுகிறார்.

பூனையைப் பாருங்கள்

இப்படிப்பட்ட மற்ற ஜீவன்களில் பூனையை எடுத்துக்கொண்டால் அதன் சுபாவப்படி மனிதன் எப்பொழுது ஏமாறுவான்? அல்லது எப்பொழுது இருட்டாகும் அறையில் உள்ள பால், தயிரை உருட்டிவிட்டு ருசி பார்க்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும். (இது பூனையினுடைய ஜீவ சுபாவம். அடுத்து அய்யா சொல்லுகிறார்) மற்றவனை ஏமாற்றும் சுபாவத்திலேயே எப்பொழுதும் இருக்கிறது.

அது போல மாத்திரமல்லாமல் மனிதனை மனிதன் குரோதக் கருத்திலும், துரோகக் கருத்திலும் இருப்பான். கொல்வான், விஷமிடுவான், சாகத் தவம் கிடப்பான் என்பது மனித இயல்பு

பறக்கும் பருந்து

பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் இருக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை கண்டுபிடித்து விடுகிறது.

நம்முடைய கண் பருந்தின் கண்ணைவிட பெரியது நம் கண் உருவத்தில் பெரியதே தவிர, பார்வைக்குரிய சக்தி அதிகம் கொண்டிருக்கவில்லை. பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இருக்கிறது. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்னத்தான் தெரியும்; கரும்பை பயிர்செய்யத் தெரியாது. ஆறாவது அறிவினுடைய பயன் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாய்க் கொண்டுள்ளான். இந்த குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை என்று தந்தை பெரியார் சொன்னார்.

எல்லையற்ற சுயநலம்

எனவே, பெரியார் கண்ட வாழ்வியலிலே மிக முக்கியமான அடிப்படை என்னவென்றால் தொண்டறம், இல்லறம், துறவறம் எப்படியோ அது போல தொண்டறம்.

மனிதர்களாக நாம் வாழ்கிறோம் என்று சொன்னால் ஓரளவுக்கு சுயநலமில்லாத மனிதர்கள் இருக்க முடியாது. முதலிலே மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதைத் தவறு என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லை. எல்லையற்ற சுயநலம் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார். அது மட்டுமல்ல, மிகுந்த தன்னடக்கத்தோடு தந்தை பெரியார் சொல்லுகிறார். இவர்மாதிரி தொண்டு செய்த பொதுநலவாதி வேறு எவரும் இல்லை என்று சொன்னபொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஏற்புரை_கடைசியாக பதில் உரை சொன்ன நேரத்திலே சொன்னார்.

பெரியார் அவர்களுக்கு இருக்கின்ற அடக்கம்

இப்படி எல்லாம் சொன்னார்கள். நான் ஏதோ பெரிய காரியம் செய்து விட்டேன். தொண்டு செய்து விட்டேன் என்று சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு இருக்கின்ற அடக்கம் மிகப்பெரிய அடக்கம் ஏதோ பணி செய்திருக்கிறேன் என்று சொல்வதில் ஏதோ உண்மை இருக்கலாம்.

இவை அத்தனையும் உங்களுக்காக தேர்ந்தெடுத்து நான் சொன்னது அல்ல. மாறாக எனது சுயநலத்திற்காக என்றார்.

எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவுடனே சொன்னார். ஆம். எது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அது என் ஆயுளை நீட்டும். எனவே அந்த மகிழ்ச்சி அதிலே இருக்கிறதென்றால், தொண்டு செய்வதில்தான் இருக்கிறது. அதனால் தான் தொண்டு செய்தேன் என்று சொல்லுவதைவிட எனக்காக நான் செய்தேன்.

எனவே எவர் சுயநலம் என்று நினைக்கிறார்களோ அது உண்மையில் பொதுநலம். எது பொது நலம் என்று நினைக்கிறார்களோ அது உண்மையில் சுயநலம். மிக அருமையாக தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

எனக்கே கூட கொஞ்சம் சங்கடம்

அது மட்டுமல்ல. எனக்கே கூட கொஞ்சம் சங்கடம். என்னை நீங்கள் பாராட்டினீர்கள். அய்யா அவர்கள் கவிதை எழுதிக்கொடுத்தார். உங்களுடைய அன்புக்கு நன்றி. தந்தை பெரியார் சொன்னதை நினைவுபடுத்தி நானே அவருடைய தொண்டன் என்ற முறையிலே நினைவு படுத்திக்கொண்டேயிருந்தேன்.

அய்யா அவர்களை வைத்து இந்த மாதிரி பாராட்டுகளை ஏராளமாக சொன்னபொழுது அய்யா சங்கடத்தோடு அமர்ந்திருப்பார்.

மனிதன் என்பவன் ஒரு கூட்டு பொருள் கொண்டவன். தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ ஒரு இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?

அவனது அவயங்களில் ஒன்று இரண்டு குறையாக இருந்த போதிலும் அவனை மனிதன் என்று தான் அழைக்கிறோம். மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கெல்லாம் இல்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நாய் நன்றியை கொஞ்சம் கூட குறையாமல் விசுவாசத்துடன் தன் எஜமானனுடன் இருக்கும்.

தன் எஜமானன் வெளியேசென்றுவிட்டு வந்ததும் நன்றியின் அறிகுறியாக தத்தி தாவி வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக்குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும் எது? அய்ந்தறிவுள்ள நாய்.

---------------------------தொடரும். ...... "விடுதலை” 30-12-2009

0 comments: