Search This Blog

2.12.09

பெரியார்-அண்ணா பாசமும், நட்பும், மரியாதையும் எப்படிப்பட்டது?

என் வேண்டுகோளை அய்யா, அண்ணா ஏற்றனர்
தமிழர் தலைவர் கி.வீரமணி நெகிழ்ச்சி

(திருச்சி பெரியார் பிறந்தநாள் விழா (1968) மேடையில் அய்யா, அண்ணா, தமிழர் தலைவர் கி.வீரமணி)

அய்யா-அண்ணா பாசமும், நட்பும், மரியாதையும் எப்படி என்பதை நேரில் காண எங்களுக்குச் சில சூழ்நிலைகள் வாய்த்தன.

கண்ணீர் துளிகள் என்றெல்லாம் கடுமையாக அய்யா தாக்கினாலும், அண்ணா தன்னிடம் பதவி வந்தவுடன் வந்து செலுத்திய மரியாதை, அவர்களை உள்ளபடியே நெகிழ வைத்தது! அய்யா அவர்களிடம் நேரில் சென்று, அவரது கடுமையான எதிரிகூட ஏதாவது வேண்டுகோள் வைத்தால், அதை எளிதில் மீற முடியாத தாட்சண்ணியத்திற்கு ஆளாகக் கூடியவர் அய்யா அவர்கள் என்பதை அவருடன் நெருங்கி யவர்கள் அறிவார்கள்.

திருச்சியில் அய்யா அவர்களது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்கு முதல்வர் அண்ணாவை அழைத்தபோது அவர்கள் மனமகிழ்வோடு வர ஒப்புக் கொண்டார். அவரிடம் நான்தான் ஒப்புதல் பெற்றேன். 1967 செப். 17-ஆம் தேதி காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் அண்ணா அவர்கள் திருச்சி வந்தார். விழாக்குழு சார்பில் நானும் நண்பர்கள் நோபிள் அச்சக உரிமையாளர் கோவிந்தராஜூலு மற்றும் கழக நண்பர்கள் கருப்புச் சட்டையுடன் சென்று வரவேற்றோம். அதிகாரிகள், அன்பில் தருமலிங்கம் மற்றும் தி.மு.கழகத்தவர்கள் வரவேற்றாலும், எங்கள் வரவேற்பை அவர் முதன் முதலில் சிறப்பாகப் பெற்றார். அவருடன் நடந்து வந்து பிறகு தனித்தனிக் காரில் ஏறிக் கொண்டோம். அண்ணா அவர்கள் யூனியன் கிளப் அருகிலுள்ள ஓய்வு அறையில் தங்கப் போனார்.

நான் பின்னால் போனவுடன் அண்ணாவைப் பார்த்து ஒரு முக்கிய செய்தியைக் கேட்டு விட்டு போக வேண்டும் என்று அண்ணாவின் செயலாளர் திரு.கஜேந்திரன் அவர்களிடம் அனுமதி கேட்டேன். அவர் அய்யாவின் ஆள்களிடையே ஒருவித வெறுப்பு வளர்த்துக் கொண்டவர் என்பதால் இடைமறித்தார். அதை அண்ணாவே பார்த்துவிட்டு, உடனே வந்து என்ன செய்தி? நான் பேசி அனுப்புகிறேன். கஜேந்திரன் நீங்கள் போய் உங்கள் பணியைப் பாருங்கள் என்று கூறிவிட்டார்!

அண்ணாவிடம் தயங்கிக் கொண்டே, அண்ணா! அய்யாவுடன் ஊர்வலத்தில் இருவரும் இணைந்து மெயின் கார்டு கேட்டிலிருந்து மேடைவரை வர ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறினேன். அண்ணா ஊர்வலங்களுக்கு எளிதில் ஒப்புக் கொள்ளவே மாட்டார். அது அவரது இயல்பான சுபாவம். ஓர் ஆச்சரியம் எங்களைத் தாக்கியது!

மறுப்புரைக்குப் பதில், என்னைப் பார்த்து அண்ணா, 5 மணித் துளிகள் அவகாசம் தா என்று விரலால் காட்டினார். முகச்சவரம் செய்துகொள்ள!

எனக்கும், நண்பர்களுக்கும் சிரிப்பு. உங்கள் வசதிப்படிப் புறப்படுங்கள். நேரே பெரியார் மாளிகைக்கு வாருங்கள். அய்யாவுடன் சேர்ந்து அங்கிருந்து மெயின் கார்டு கேட்டுக்குப் புறப்படலாம் என்றேன். அண்ணா சிரித்துக் கொண்டே தலையாட்டினார். அதுபோல, குளித்துச் சிற்றுண்டி முடித்து (திருச்சி) பெரியார் மாளிகையில் அய்யாவைப் பார்த்து மாலை அணிவித்தார். பதிலுக்கு அய்யா ஒரு சரிகை மாலையை அண்ணாவுக்கு அணிவித்து, இதை நான் வாடா மாலையாக அணிவிக்கிறேன் என்று வாய் திறந்து மொழிந்தபடியே அணிவித்தார். அண்ணாவின் மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை.

பிளாஷ் படங்கள், பளிச் பளிச்சென எடுக்கப்பட்டன. வெளியே ஒரே கூட்டம். அய்யா, அண்ணாவுடன் என்னையும் இழுத்துக் கட்டிலில் அமர்த்தினார். பக்கதில் காட்டூர் திரு.இராமய்யா அவர்களும் இருந்தார். எல்லாரும் சேர்ந்து படம் எடுத்த பிறகு புறப்பட்டார்கள். மெயின் கார்டு கேட்டு சாரட்டு வண்டியில் (மாடுகள் இழுத்து வந்தன) டி.டி.வீரப்பா, அன்பில் ஆகிய இருவரும்தான் சாரதிகள்! திருச்சி மக்கள் பல இலட்சக்கணக்கில் திரண்டு வந்துவிட்டனர். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண! 18 ஆண்டு பிரிவுக்குப் பின் தந்தையும், தனயனும் பவனி! பல காங்கிரஸ் நண்பர்கள் வந்தவர்கள் ஏனோ திரும்பி விட்டனர். பலர் வீடுகளின் உள்ளே இருந்து வியப்புப் பொங்கிடப் பார்த்தனர், பரவசப்பட்டனர்.

அய்யாவும், அண்ணாவும் முகத்தில் சிரிப்பு, மகிழ்ச்சி, பொலிவு பொங்கிட சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து வந்ததுபோல ஊர்வலத்தில் வந்தனர்!

அதுவே இரண்டாவது திருப்பம்! இரட்டைக் குழல் தத்துவம் பலருக்குப் புரிய ஆரம்பித்தது!


0 comments: