Search This Blog

1.12.09

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி!


வாழ்க தமிழர் தலைவர்!

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 77 ஆம் அகவையில் (2.12.2009) அடியெடுத்து வைக்கிறார்.

அவர்தம் பிறந்த நாள் என்பது தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானதல்ல! மனிதன் தானாகப் பிறக்கவில்லை; எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்றார் தந்தை பெரியார்.

அந்த இலக்கணத்துக்குச் சொந்தக்காரரான தலைவர் இவர். தந்தை பெரியார் என்பவர் ஓர் இனத்தின் மீட்சிக்கு வித்திட்டு வீறுகொள்ளச் செய்தவர். என்றாலும், அவரின் பரிணாமம் என்பது ஓர் எல்லைக்குட்பட்டதல்ல மானுடம் தழுவியது. உலகில் ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் காணப்பட்டாலும் அந்த மேடு பள்ளங்களைச் சரி செய்யும் தனித்தன்மையான சிந்தனைகள் தந்தை பெரியார் அவர்களுடையது.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞன் கணித்தது மிகவும் சரியானது துல்லியமானது.

அந்தத் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்தான் வீரமணி. தந்தை பெரியார் தனக்கென்று வாரிசை நியமிக்கவில்லை; அறிவிக்கவில்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில் இயக்கத்திற்கு ஏற்பாடு என்று அன்னை மணியம்மையார் அவர்களை அறிமுகப்படுத்தி, அறிவித்தவர் அவர் என்பது முக்கியமானதாகும்.

தந்தை பெரியார் அவர்களின் கணிப்பையும், எதிர்பார்ப்பையும் மதிக்கத்தகுந்த முறையில் பூர்த்தி செய்தவர் போராட்டக் குணமுடைய அன்னை மணியம்மையார்.

உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்துக்குச் சிறப்புடன் தலைமை தாங்கிய தலைவர் என்ற பெருமை அவருக்குண்டு.

தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் எழுதிய இரு அறிக்கைகள் மிக முக்கியமானவை. ஒன்று வரவேற்கிறேன் என்ற தலைப்பில் தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய அறிக்கை (10.8.1962) விடுதலை வெள்ளி விழாவையொட்டி இன்னொரு தலையங்கத்தை எழுதினார் (6.6.1964).

இவ்விரண்டு தலையங்க அறிக்கைகளைப் படித்தவர்களுக்கு, தந்தை பெரியார் அவர்களால் இயக்கத்தின் எதிர்கால உத்தரவாதத்துக்கு மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகவே தெரியும்.

1960 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகவும், தந்தை பெரியார் அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தில் வீரமணி உறுப்பினராக இல்லை என்று சில அரைகுறைகள் கூறுவதும் அறியாமை வகைப்பட்டதாகும்.

அன்னை மணியம்மையார் அவர்கள் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்து அனுமதி பெற்று வந்து, சென்னைப் பெரியார் திடலில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமது உடல்நலத்தைக் காரணம் காட்டி (25.12.1977) தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கழகத்தின் முழுப்பொறுப்பினை வீரமணி ஏற்கவேண்டும் என்று அறிவித்தார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அதனை ஏற்காமல் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அதன் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழகத்தின் இந்தப் பொறுப்பான கால கட்டத்தில் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஆசிரியர் கி. வீரமணி அவர்களே நீடிக்க வேண்டும் என்று மத்திய நிருவாகக் குழுவினர், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், கழக நிருவாகிகளின் கூட்டம் ஒரு மனதாகத் தீர் மானித்து, இதற்கு வணக்கத்திற்குரிய கழகத் தலைவர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து ஒப்புதல் அளிக்கப் பணிவன்புடன் ஒருமனதாக வேண்டு கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்புதல் தந்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.

இந்த வரலாற்றுச் சுவடுகளை நினைவூட்டக் காரணம்_ தந்தை பெரியார் மற்றும் அவர்களால் கழகத்திற்கு எதிர்கால ஏற்பாடு என்று அறிவிக்கப்பட்ட அன்னை மணியம்மையார் ஆகியோரால் முறைப்படி அடையாளம் காட்டப்பட்டு, அறிவிக்கப்பட்டவர்தான் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

கழகத்தின் தலைவராக, தமிழர் தலைவராக, உலகப் பகுத்தறிவாளர்களின் வழிகாட்டியாக, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை உலகப் பரப்பெங்கும் பிரச்சாரம் செய்யும், எடுத்துச் செல்லும் தூதராக, தலைதாழாக் கொள்கையாளராகப் புகழ் மணக்க நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

காலத்துக்கேற்ற அணுகுமுறைகளோடு, அறிவியல் சாதனங்களின் துணை கொண்டு கழகப் பிரச்சாரங்களையும், பெரியார் கல்வி நிறுவனங்களையும் வளர்க்கும் சிறப்பு தனித்தன்மையானது; எதிர்காலத்திலும் இவை வீறுநடை போட உறுதியான அடித்தளத்தைக் கொண்டது என்பதில் அய்யமில்லை.

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி!

--------------------"விடுதலை" தலையங்கம் 1-12-2009

1 comments:

shyam said...

Longlive Veeramoney family