Search This Blog

24.12.09

தமிழர் தலைவரின் தந்தைபெரியார் நினைவு நாள் அறிக்கை


சோதனைகள், துரோகங்களை வென்று தந்தை பெரியார் வழியில் வெற்றி நடைபோடுகிறது கழகம்
சக படை வீரர்களோடு நம் வெற்றிப் பயணம் தொடரும்
தோழர்களே, உங்கள் பங்கை மேலும் கூட்டுங்கள்!

தமிழர் தலைவரின் தந்தை பெரியார் நினைவு நாள் அறிக்கை


தந்தை பெரியார் வழியில் நமது வெற்றிப் பயணம் தொடர்வோம்; தோழர் களின் உழைப்பும், பங்கும் மேலும் மேலும் பெருகட்டும் என்று, தந்தை பெரியார் நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று திரும்பிப் பார்க்கிறோம். திகைக்கிறோம், திண்தோள்களோடு நமது பயணத்தை, அந்த ஈரோட்டுப் பாதையில் தொடர்கிறோம் முழு மன நிறைவோடு.

‘அய்யா’ என்று அகிலமே அழைக்கும் அந்த அறிவு ஆசானின் மறைவு 36 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை நிலை குலையச் செய்தது. நீடு துயில் கொள்ளச் சென்ற அவர் நமக்கு நீங்காத் துன்பத்தை, துயரத்தை அல்லவா தந்தார்கள், அந்தப் பகலவன் மறைந்ததால் எங்கும் சோக இருள்மயம்தானே என்று கதறினோம்.

என்றாலும், கடமை அதனினும் முக்கியமல்லவா? களத்தில் நம்மை தனியே அவர்கள் அனாதைகளைப் போல விட்டுவிடவில்லையே. நமக்குத் தலைமை யேற்று அய்யா விட்ட பணிகளை முடிக்க, அதுவும் அவர்கள் போட்டுத் தந்த பாதையிலேயே சென்று முடிக்க அன்னையாரை அல்லவா விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்த தியாகச் சுடர் அந்த இருட்டை தனது ஒளியால் நீங்கச் செய்யும் என்று ஆறுதல் கொண்டோம்!

அம்மாவின் அரிய தலைமை

ஆம்; அம்மாவின் தலைமை நமக்கு அரியதோர் புதையலாகக் கிடைத்ததோடு, அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்த நம் அம்மா அவர்கள் இயக்கத்தையும் வாழ வைத்தார்கள்.

நெருக்கடி காலச் சோதனைகளிலிருந்து கழகத்தினை கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றினார்கள்.

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத வீராங்கனை அவர் என்பதற்கு ‘இராவண லீலா’ என்ற அனைத்திந்தியாவையும் அலற வைத்த அந்த ஒரு சாதனை போதாதா?

தொண்டர்களை அரவணைத்து ஆதரவு காட்டி, தாய்ப்பாசத்தோடு கடமையாற்றுபவர் என்பதை, ஜாதி ஒழிப்புப் போரில் தந்தை பெரியார் சிறைக் கோட்டத்தில் இருந்தபோதே நிரூபித்துக் காட்டியவர் அல்லவா!

தனக்கென வாழாது தன் சொத்துகளையும்கூட அய்யாவைப் போலவே அறக்கட்டளையாக்கி இணையில்லாத் தொண்டறத்திற்கும், இறவாப் புகழுக்கும் சொந்தக்காரர் ஆனவர் நமது அம்மா அவர்கள் அல்லவா!

சமுதாய நோய்களோடு மட்டுமா அவர்கள் போராடினார்கள்? அவரது உடலின் நோய்களோடு நாளும் போராடிக் கொண்டு கடமை தவறாது, இயக்கத்தினை ஏறு நடைபோட வைத்தார்கள்.

“குருவி தலையில் பனங்காய்!’’

அத்தகைய இருபெரும் மலைகள் மறைந்துவிட்ட நிலையில், ‘குருவி தலையில் பனங்காயை’ வைத்துவிட்டு (மறைந்த மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பயன்படுத்திய உரையின் ஒரு பகுதி இது) மறைந்தார்கள்.

மாபெரும் தளபதிகள் இருந்து நடத்திய போரை வெறும் சாதாரண போர் வீரனிடம் விட்டுச் சென்றார்கள் நம்பிக்கையோடு!

அந்த நம்பிக்கையை நியாயப்படுத்தவே அந்த இராணுவ வீரன் இன்றும் ஓடோடி உழைக்கிறான் அலுப்பு சலிப்பின்றி!

அதற்குக் காரணம் அவனது திறமையோ, பலமோ இல்லை. அவனது சக படை வீரர்கள், அவர்களிடம் உள்ள (இராணுவக்) கட்டுப்பாடு! கடமை உணர்ச்சி! முகம் சுளிக்காத முழுப் பயணங்கள்!

‘துறவிகளை விட மேலானவர்கள் எனது தோழர்கள் தொண்டர்கள்’ என்ற தந்தை பெரியார் தம் அற்புதப் பாராட்டுரையையே அணிகலனாகக் கொண்ட பாசறை வீரர்கள் அல்லவா அவர்கள்?

துரோகத்தின் தொடர் கதை

1978 இல் துரோகம் தொடங்கியது. இன்றும் தொடர்கிறது_

1978 இல் பொறுப்பேற்றவுடன் துரோகம் இது அம்மா தலைமையேற்றபோது ஒத்திகை பார்க்கப்பட்ட ஒன்றுதான்; இன எதிரிகளின் காலடியில் வைத்துவிடலாம் என்று கருதி வழக்கு மன்றங்கள் சென்றனர். அவதூறு சேற்றினை அள்ளி அள்ளி வீசினர்; இவை தொடர் கதையாயின.

என்றாலும், நமது தோழர்கள், தோழியர்கள், கழகக் குடும்பத்தினர்கள் கவசமாகப் பயன்பட்டார்கள் மலையென வந்தவை பனியென மறைந்தன.

வருமான வரித்துறை என்னும் கணை

அடுத்து வருமான வரித்துறை பாக்கி என்ற பெரும் ஏவுகணை நம்மை நோக்கி! அதற்கும் மூல காரணம் நமது துரோக முன்னாள் கழகத்தவர்கள்தான் என்பது உலகறிந்த ரகசியம்; அய்யா காலத்திலேயே அவர்மீது கணை ஏவப்பட்டது. ‘அம்மா’ காலத்தில் நெருக்கடி காலத்தில் முழு வீச்சோடு கிளம்பி, ‘முடக்கிவிட்டோம் இவர்களது சொத்துகளை’யென்று கொக்கரித்து கும்மாளம் போட்டது ஆரியம்!

அடுத்து அதன் முழு வீச்சும், கடுமையும் போர் உக்கிரமும் நம் காலத்தில் ரூபாய் 80 லட்சம் வரிகள்; இவை அறக்கட்டளைகளே அல்ல என்றனர். இப்படிக் கூறியதை மாற்றி, 80 லட்சம் ரூபாய் வரி பாக்கிகளையும் செல்லாததாக்கி, இவை அறக்கட்டளைதான் என்று அறிவிக்க செய்ததோடு, அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்த அங்கீகாரம் தொய்வின்றிக் கிடைக்கும் நிலையை உருவாக்கினோம். துணிவோடு கழகப் பணிகளையும், கல்விப் பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மனித நேயப் பணிகளையும் ஊக்கமுடன் செய்து வருகிறோம் கொள்கைப் பயணத்தில்.

வகுப்பு வாரி உரிமை வரலாறு இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (S.C., S.T., BC., MBC) தனிச் சட்டத்தின்மூலம் கிடைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற தனி வரலாற்றை நம் இயக்கம் வழிகாட்ட அரசுகள் செய்தன. 76 ஆவது இந்திய அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தோம். முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் 1951 இல் அய்யா மூல காரணம். 1994 இல் கழகம் காரணம் என்பது வரலாறு.

மத்திய அரசிலும் இட ஒதுக்கீடு

மத்தியிலும் தாழ்த்தப்பட்டோருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீடு போலவே, பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவிகித இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் என்று லட்சிய வெற்றி பல கட்டப் போராட்டங்-களின் காரணமாகப் பெறப்பட்டது. இன்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் கூட செயலாக்கப்படும் நிலை சட்டப்பூர்வமாக!

கடவுள், மத மூட நம்பிக்கைகளை எதிர்த்த போர் தொடர்ந்தபடி உள்ளது.

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்க, மத்தியில் சுமார் 10 ஆண்டுகால மதவெறி ஆட்சியை மாற்றிட, மக்களாட்சி வருவதற்கு நம் இயக்கத்தின் பங்களிப்பு எவராலும் மறுக்க முடியாத ஒன்று அல்லவா?

வெற்றி உலா வரும் ‘விடுதலை’

இவ்வளவும் எதிர் நீச்சலில்; ஏடுகளும், தொலைக்காட்சிகளும், அதிகாரவர்க்கமும் இன எதிரிகளான ஆரியத்தின் வசம்; என்றாலும் நம் பயணம் தொடர்ந்தபடியே இருக்கிறது!

தேவாசுரப் போரின் சில கட்டங்களே முடிவடைந்துள்ளது; நாம் நம்பிக்கையோடு களத்தில் உள்ளோம்; நம்மிடம் அய்யா தந்த படைக்கலன்களில் ஒன்றுதான் ‘விடுதலை’ நாளேடு. அதன் 75 ஆம் ஆண்டு பவளவிழா வெற்றி உலா வருகிறது.

வெட்கப்படாது நமது தோழர்கள் தெருவில் இறங்கிவிட்டால், இதன் வெற்றி உலா தொடருவது உறுதி!

வளர்கிறது பெரியார் கல்வி நிறுவனங்கள்

கல்வி நிறுவனங்கள் வளர்ந்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக ஓங்கி வளர்ந்து, மற்றும் 49 அமைப்புகளாக வளர்ச்சி பெற்று வருகின்றன.

நமது இப்பயணம் தொடரும் சலிப்போ, சங்கடமோ இன்றி!

80 ஆண்டுகளுக்குமேலான இயக்கம், அந்த எழுச்சி குறையாமல் பீடுநடை போட்டுக் கொண்டுள்ளது. தலைவரைப்போல் அதன் பயணம் இளமை முறுக்கோடு முதிர்ச்சி என்ற வளர்ச்சியோடு வாகை சூடுவது நிச்சயம் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறது!

தோழர்களே, தோழியர்களே, உங்கள் பங்கை மேலும் கூட்டுங்கள். கூட்டுறவில்தான், கூட்டுக்குழு மனப்பான்மையில் நம் வெற்றி.

வெற்றி நமதே!

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 24.12.2009

0 comments: