Search This Blog

1.8.09

பெரியாருக்கு முன் -பெரியாருக்குப் பின்




ஒரு காலத்தில் அக்கிரகாரத்திற்குள் தபால்காரரை அனுமதிக்காத நிலை இருந்தது
பழங்கால நிலையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை


ஒரு காலத்தில் அக்கிரகாரத்திற்குச் சென்று தபால் கொடுக்கின்ற உரிமை தபால்காரர்களுக்கு இல்லையே. அந்த சமூக அவலத்தை மாற்றியவர் தந்தை பெரியார் என்று கூறி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்தப் பகுதியிலே இருக்கக் கூடியவர்களுக்குக் கூட வரலாறு தெரியாது. ஓர் ஆணைக்காகத் திட்டமிட்டு, இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திலே இவரைப் பற்றித் தாறுமாறாகத் தீர்ப்பு எழுதினார்கள்.

கலெக்டரின் எதிர்காலமே பாழ்!

ஆர்.எஸ்.மலையப்பனுடைய எதிர்காலமே பாழாகும் என்பதை மனதிலே கொண்டு அந்த உள்நோக்கத்தோடு இவரைப் பற்றித் தாறுமாறாகத் தீர்ப்பு எழுதிய நேரத்திலே, கலெக்டர் மலையப்பன் அவர்களைப் பார்த்திராத தந்தை பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதா-யத்தைச் சார்ந்தவர், பார்ப்பனர் அல்லாதவர்; இவ்வளவுதான் தெரியும் தந்தை பெரியார் அவர்களுக்கு. வேறெதுவும் தெரியாது.

நம்மவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் உத்தியோ-கத்திற்குத் தட்டுத் தடுமாறி இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அவரையும் கீழே தள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டு நடக்கிறார்களே என்பதை பெரியார் அறிந்தார்கள்.

உயர்நீதிமன்றத்தைக் கண்டித்துப் பேசினார்

உயர்நீதிமன்றத்தைக் கண்டித்து யாரும் பேச முடியாது. அப்படி கண்டித்தால்அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று சொல்லி நடவடிக்கை எடுப்பார்கள். யாருக்கும் துணிச்சல் வராது. தந்தை பெரியார் திருச்சியிலே டவுன்ஹால் மைதானத்திலே கூட்டம் போட்டு கண்டித்து, துணிவாகப் பேசினார்கள்.அதற்காக அவர் மீது வழக்கு வந்தது. உடனடியாக அந்த வழக்கிலே வக்கீலை வைத்து வாதாடவில்லை.

ஆம்! நாம் பேசியது உண்மைதான் என்று சொல்லிவிட்டுச் சொன்னார்: பார்ப்பான் நீதிபதியாக இருக்கிற நாடு கடும் புலிவாழும் காட்டை விடக் கொடுமையானது என்று பார்ப்பன நீதிபதிகள் முன்னாலேயே படித்த பெருமை சொன்ன பெருமை தந்தை பெரியார் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அல்ல!

யார் யார், எந்தெந்தப் பார்ப்பான் லஞ்சம் வாங்கி உத்தியோகத்திலே இருந்தான் என்ற ஒரு பட்டியலையே சென்னை உயர்நீதிமன்றத்திலே நீதிபதி முன்பே படித்தார்.

எங்கோ ஒரு கூட்டத்திலே பேசியதற்காக நீதிமன்ற அவமதிப்பு என்று அய்யா அவர்களை அழைத்து, அய்யா அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவுடனே அதையே பொதுக்கூட்ட மேடையாக அய்யா அவர்கள் மாற்றிக்கொண்டு ஆதார பூர்வமாகச் சொன்னார்.

கடைசிவரை மலையப்பனை அய்யா பார்த்ததில்லை

அதை முக மலர்ச்சியோடு ஏற்றார். சிறைக்குச் செல்லும்அன்றும் கூட இவர் மலையப்பனைப் பார்த்ததில்லை. மலையப்பன் பெரியார் அவர்களைச் சந்தித்ததில்லை.

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்று சொன்னால், உங்கள் வட்டாரத்திலே தெரிந்த ஒரு பகுதி சில பேர் வயதானவர்களுக்குத் தெரியும். அந்த ஒரு நிலை எதைக் காட்டுகிறது?

ஆத்திகர்களே பெரியார் பற்றிச் சொல்லுவது

இன்னமும் உத்தியோகத்திலே தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அத்தனைபேரும் கடவுளைக் கும்பிடக் கூடியவர்களாக இருக்கலாம். கோவிலுக்குப் போகக் கூடியவர்களாக இருக்கலாம். பட்டை போடக்கூடியவர்களாக, கொட்டை கட்டக் கூடியவர்களாக, நாமம் போடக் கூடியவர்களாகக் கூட இருப்பார்கள்.

ஆனாலும்அவர்களைக் கேட்டீர்களேயானால் தந்தை பெரியார் இல்லை என்றால் தன்னுடைய பையன் படித்திருக்க மாட்டான். பெரியார் இல்லாவிட்டால் வகுப்பு வாரி உரிமை வந்திருக்காது; இந்த சமூகநீதி கிடைத்திருக்காது என்றெல்லாம் சொல்வார்கள். உலகளாவிய நிலையில் பாராட்டு

எனவே சமுதாய மாற்றத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் உழைத்தார்கள். அவருடைய பிள்ளைகளுக்காகவா? அல்லது அவர்களுடைய உறவினர்களுக்காகவா? பாடுபட்டார். தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு அதற்கு நன்றி காட்டுவதற்குத்-தான் இப்படிப்பட்ட ஒரு பகுத்தறிவு பகலவன் தோன்றியிருக்காவிட்டால் இருள், அறியாமை நம்மை என்றைக்குமே கவ்விக்கொண்டிருக்கும் என்ற காரணத்திற்காகத் தான் அவருக்கு எல்லா இடங்களிலும் இன்றைக்கு நன்றி காட்டுகின்ற மக்கள் உலகளாவிய நிலையிலே பாராட்டுகிறார்கள்.

மனித நேயத்தை மனித உரிமைகளுக்காகப் போராடியதை அவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார்கள். அதே போல இங்கே பார்க்கின்றோம், நம்முடைய சகோதரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வந்திருக்கின்றார்கள்.

ஒரு காலத்திலே ஆண்களுக்கிருந்தது பதவி

ஒரு காலத்திலே ஆண்கள் மட்டுமே இருந்த பதவி பெண்கள் உள்ளே போக முடியாது என்று கருதிய பதவி இன்றைக்கு நாற்காலியிலே பெண்கள் துணிச்சலாக வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஊராட்சி மன்றத்திலே, மாநகராட்சி வரையிலே இருக்கிறார்கள்; சட்டமன்றத்திலே இருக்கிறார்கள்.

பெரியார் அவர்களுடைய தொண்டிற்கு என்ன கனிந்த பலன் என்று சொன்னால் இவைகள் எல்லாம் எடுத்துக்காட்டுகள். பெண்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் பெரியாருடைய பெருவெற்றி!

ஒரு காலத்திலே ஆண்களுக்கு முன்னாலே பெண்கள் அமரமாட்டார்கள்; நாற்காலியிலே அமரமாட்டார்கள். செருப்புப் போட்டுக்கொண்டு கிராமத்திலே நடக்க முடியாது. எவ்வளவு திமிர் பாத்தாயா? என்றெல்லாம் சொல்வார்கள்.

1924இல் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆனால் இந்த மாதிரி இன்றைக்கு உச்சரித்தால் யாராவது சும்மா இருப்பார்களா? அவ்வளவு துணிச்சலோடு சந்திக்கக் கூடிய அளவுக்கு வந்தி-ருக்கிறார்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். சமுதாய மாற்றத்திற்கு.

1924லே ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய நூலைப் படித்தேன். தென்னார்க்காடு மாவட்டம் எங்களுடைய மாவட்டம். இப்பொழுது கடலூர் மாவட்டம் என்று அழைக்கப்-படக் கூடிய அந்தப்பகுதியிலே ஒரு கிராமம். அக்கிரகாரத்தைச் சார்ந்தது. 1924இலே ஒரு தபால்காரர் தபால் கொண்டு போய் கொடுப்பதற்காக உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் யாரும் அனுமதிக்கவில்லை.

இது நீதிக்கட்சிக்கு முன்னாலே இருந்த நிலை. ஏனென்றால், தபால்காரர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். இவருடைய கை தபாலில் பட்டுவிட்டதால் தீட்டுப் பட்டுவிட்டது. எனவே அதை ஒரு கயிறிலே கட்டி இவர் கொண்டு போய்த் தூக்கிப் போடுவார்.

அக்கிரகாரத்திற்குள் தபால்காரர் நுழைய முடியுமா?

தபால்காரரை அக்கிரகாரத்திற்குள் உள்ளே விடுவதில்லை. யாராவது இந்த அளவுக்கு அழுத்திச் சொல்ல முடியுமா? ஆனால் நண்பர்களே, இன்றைக்கு எவ்வளவு மாற்றம் தந்தை பெரியார் அவர்களாலே, வந்திருக்கிறது என்று சொன்னால், இந்தியா முழுவதற்கும் தபால் துறை அதிகாரிகளையும் நியமித்து தபால் துறையையும் கண்காணிக்கிற பொறுப்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு ஆ.இராசா அவர்களைக் கொண்டு போய் அமர வைக்கக் கூடிய அளவிற்குக் கலைஞர் அவர்களுடைய தொண்டனாக, தோழனாக இருந்து அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதனுடைய அடிப்படை என்ன?

இன்றைக்கு ஆ.இராசா உத்தரவு போடுகிறார்

ஒரு காலத்திலே அக்கிரகாரத்திற்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் தபால்காரராகப் போக முடிய-வில்லை.






ஆனால், இன்றைக்கு எல்லோருக்கும் உத்தரவு போடக் கூடிய வகையிலே அதே சமு-தாயத்தைச் சார்ந்த ஆ.இராசா அவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். அதே மாதிரி இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு சிலையைத் திறக்க முடியவில்லை. இந்தியாவினுடைய இராணுவ அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களாலே காசியிலே. அங்கே ஒரு சிலை.

ஜாதியைச் சொல்லி எதிர்ப்பு

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பூர்ணானந்த் சிலை. பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் இராணுவ அமைச்சர். முப்படைகளுக்கும் அவர்தான் தலைவர். அவர் சம்பூர்-ணானந்த் அவர்களுடைய சிலையைத் திறக்கச் சென்றார்.

அப்பொழுது வாரணாசி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஜெகஜீவன்ராம் அவர்களுடைய ஜாதியைச் சொல்லி கோஷம் போட்டார்கள். நீங்கள் எல்லாம் அமைச்சராகி-விட்டால் எங்களுடைய செருப்புகளைத் தைப்பதற்கு யார் ஆள் கிடைப்பார்கள்? என்று இப்படியே சொல்லி ஒலி முழக்கமிட்டார்கள்.

ஜெகஜீவன்ராமை அவமானப்படுத்தினர்

யார்? படிக்காதவர் அல்ல. பட்டமேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் இப்படி ஜெகஜீவன்ராம் அவர்களை அவமானப்படுத்தினார்கள். ஜெகஜீவன்ராமினாலே ஒன்றும் செய்யமுடிய-வில்லை. பொத்தானை அழுத்தி அவர் சிலையைத் திறந்தார். சிலை அருகில் நின்று ஒன்றும் அவர் திறக்கவில்லை.

சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்லி, கங்கைத் தண்ணீர் ஒரு பத்து குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்து சம்பூர்ணானந்த் சிலை தீட்டுப் பட்டுவிட்டது. அதைப் போக்கத் தண்ணீரை ஊற்றுகிறோம் என்று ஆணவமாகச் சொல்லி ஊற்றினார்கள்.

தீட்டு மின்சாரம் வழியாக

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஜெகஜீவன்ராம். அதுவும் ஜாதித் தீட்டு எதன் வழியாகப் போயிருக்கிறதென்று சொன்னால் மின்சாரத்தில் கைவைத்தாலே அது ஷாக் அடிக்கும். ஆனால் ஜாதியைக் கண்டவுடனே மின்சாரமே பயந்து கொண்டது.

ஆகவே இவர் பொத்தானைத் தான் அழுத்தினார். ஆனால், உயர் ஜாதிக்காரருடைய சிலையைத் திறக்க உரிமை இல்லை. நேராகப் போய் அந்தச் சிலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். ஜெகஜீவன்ராம் அவர்கள் ரொம்ப வேதனையோடு திரும்பி வந்துவிட்டார்.

விடுதலையில் தான் எழுதினோம்

நாங்கள் தான் விடுதலையில் அந்தக் காலத்தில் எழுதினோம். அட மண்டுகளே! அந்த கங்கா ஜலத்திற்குத் தீட்டைப் போக்கக் கூடிய அளவிற்கு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அந்த பத்துகுடம் தண்ணீரை ஜெகஜீவன்ராம் தலையில் ஊற்றி அவரை உயர்ஜாதியினராக ஆக்கியிருக்கலாமே என்று எடுத்துக் கேட்டோம்.

அந்த ஜெகஜீவன்ராம் தமிழ்நாட்டிற்கு அடுத்த நாள் வந்தார். இங்கு பேசினார். பெரியார் பிறந்-தமண்தான் சுயமரியாதை தந்த மண். இந்த மண்ணிலே இருக்கிறவர்கள்தான் பாக்கியம் பெற்றவர்கள். நாங்கள் வடபுலத்திலே மிகப் பெரிய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னார்கள்.

சபாநாயகர் மீராகுமார்

இன்றைக்கு உயர்ஜாதிக்காரர்கள் உட்கார்ந்த இடத்தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாபு ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் அவர்கள் அய்.எஃப்.எஸ் படித்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகி, இன்றைக்கு நாடாளுமன்ற சபாநாயகராக ஆகியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் தான் அனுமதி கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் பேச அனுமதியில்லை, உட்காருங்கள்! என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்றைக்கு அதிகாரம் படைத்தவராகத் திகழ்கின்றார் மீராகுமார் அவர்கள். ஒரு பக்கம் பெண். இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்.

பெரியார்-அண்ணா-கலைஞர் உழைப்பல்லவா?

இந்த மாறுதல் எல்லாம் எப்படி வந்தது? சத்தியசாயிபாபா கையைத் தூக்கியவுடன் பொத்தென்று கீழே விழுந்ததா? அல்லது முப்பத்து முக்கோடி தேவர்களாலே ஏற்பட்டதா? நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளால் வந்ததா? அல்ல. முழுக்க திராவிடர் இயக்கம் தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா இன்றைக்கு அவருடைய வழியிலே நடந்துகொண்டிருக்கக் கூடிய தலைவர் கலைஞர் போன்றவர்களுடைய அயராத பல்வேறு உழைப்புகளும், வியூகங்களும்தான் இந்த சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். சாதாரணமல்ல சாதனைகள்.

நம்முடைய பிள்ளைகளுக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். ஆனால், இன்னமும் இந்த இயக்கம் தேவைப்படுகிறது. இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். இவ்வளவு பெரிய அறிவியல் காலம் இருக்கிறது. இங்கே உட்கார்ந்திருக்கின்றவர்கள் பாதிப் பேர் கையிலாவது செல்ஃபோன் இருக்கும். இதற்கு முன்பு யாராவது தனித் தனியாகப் பேசினால் சந்தேகப்படுவோம். அவ்வளவு செல்ஃபோன் வந்தாகிவிட்டது.

செல்ஃபோனால் எத்தனை பலன்?

ஒரு ஃபோனில் பாட்டு வருகிறது. வசனம் வருகிறது. ஃபோட்டோ எடுக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்கிறார்கள். இன்னும் குறுஞ்செய்தி, நெடுஞ்செய்தி எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுக்கிறார்கள். இவ்வளவு வசதி வந்துவிட்ட பிற்பாடு செல்ஃபோனில் உருவமும் வந்துவிட்டது.

முன்பெல்லாம் யாராவது ஃபோன் பண்ணினால் நாம் ஃபோனை எடுத்து பேசும்பொழுது இல்லிங்க, அவர் வெளியே போயிருக்கிறார் என்று சொல்வோம். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாத அளவுக்கு உருவமே வந்துவிடும். பொய் சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு உருவம் ஃபோனில் வந்தாகிவிட்டது. செல்ஃபோனிலேயே செய்தியைப் பதிவு பண்ணக் கூடிய அளவுக்கு வந்தாகிவிட்டது.

இவ்வளவு அறிவியல் வந்திருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சரசுவதிக்கும், நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஆனால், நம்மாள் என்ன பண்ணுகிறான்? இன்னமும் சரசுவதி பூஜை கொண்டாடிக் கொண்டிருக்கின்றான்.

அவ்வளவு அறிவியல் வளர்ந்த காலம். இங்கே ஒலிபெருக்கி இருக்கிறது. வீடியோ எல்லாம் எடுக்கிறார்கள். இது அவ்வளவும் பதிவாகிறது. இந்த ஃபேன் சுற்றுகிறது.

------------------------"விடுதலை" 31-7-2009

4 comments:

அசுரன் திராவிடன் said...

aha arumaiyaana katurai ....atharpoorvamana katurai ......

asiriyar avarkalin karuthagal endraikume thani sirapum atharamum kondathaga irukkum....

நம்மால் முடியாதது யாராலும் முடியாது .யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் -ஆசிரியர் வீரமணி .அதை நிருபித்த வரும் கூட .எதிர் காலத்தில் நிருபிபவரும் கூட

அசுரன் திராவிடன் said...

aha arumaiyaana katurai ....atharpoorvamana katurai ......

asiriyar avarkalin karuthagal endraikume thani sirapum atharamum kondathaga irukkum....

world best website http://www.thamizhoviya.blogspot.com

நம்மால் முடியாதது யாராலும் முடியாது .யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் -ஆசிரியர் வீரமணி .அதை நிருபித்த வரும் கூட .எதிர் காலத்தில் நிருபிபவரும் கூட

அசுரன் திராவிடன் said...

paha arumaiyaana katurai ....atharpoorvamana katurai ......

asiriyar avarkalin karuthagal endraikume thani sirapum atharamum kondathaga irukkum....

world best website http://www.thamizhoviya.blogspot.com

நம்மால் முடியாதது யாராலும் முடியாது .யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் -ஆசிரியர் வீரமணி .அதை நிருபித்த வரும் கூட .எதிர் காலத்தில் நிருபிபவரும் கூட

படிக்க படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு இன்னும் இதுபோல நிறைய கட்டுரை களை தமிழோவியா வெளி இடவேண்டும்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி