
தென்கொரியா
பொது ஆண்டுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சோசோன் வமிச ஆட்சியில் இருந்த கொரியாவை சீனா பொது ஆண்டுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பிறகு 1392 முதல் 1910 வரை யி வமிசம் ஆட்சி செய்தது. 1910இல் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேசநாடுகள் கொரியாவை ஜப்பானின் பிடியிலிருந்து விடுவித்தன. கொரியாவின் வடபகுதியை சோவியத்தும் தென் பகுதியை அமெரிக்காவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
1948இல் (வட) கொரியக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. 1950இல் தென்கொரியா தனது சுதந்திரத்தை அறிவித்தது. இருநாடுகளும் மோதிக் கொண்ட நிலையில் 1953இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த முன்றாண்டுச் சண்டையில் மாண்டவர்கள் 40 லட்சம்.
1961இல் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ராணுவச் சட்டம் அமல் செய்யப்பட்டது. 1972இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் கலவரங்களும் எதிர்க்கலவரங்களும் ஏற்பட்டன.
2000ஆம் ஆண்டில் வடகொரியத் தலைநகரில் நடந்த பேச்சு வார்த்தைகளின்படி தென் கொரியாவுக்கு எதிர்ப்பாக வடகொரியா பரப்புரை செய்வதில்லை என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடுகளின் எல்லையில் இணக்கநிலை ஏற்படுத்த அலுவலகங்கள் திறக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்காகத் தென் கொரிய அதிபர் கிம் டே ஜங்குக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
ஜப்பான் கடலுக்கும் மஞ்சள் கடலுக்கும் இடைப்பட்ட கொரியத் தீவுக் குறையின் தென்பகுதி நாடான இதன் பரப்பு 98 ஆயிரத்து 480 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 89 லட்சம். கிறித்துவர்கள் 26 விழுக்காட்டினர். பவுத்தர்கள் 26 விழுக்காடு உள்ளனர். மதம் அற்றவர்கள் 46 விழுக்காடு இருக்கின்றனர்.
கொரிய மொழியும் இங்கிலீஷும் பேசப் படுகிறது. 99 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். தலைநகர் சியோல். 15-.8.-1945இல் விடுதலை நாளைக் கொண்டாடும் குடியரசு நாடு. அதிபரும் பிரதமரும் உள்ளனர். 15 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
சிறீலங்கா
இந்நாட்டின் ஆதிக்குடியினர் தென்னிந்தியத் திராவிட இனத்தவரான புரோடோ ஆஸ்ட்ரலாயிடு இன மக்கள் என வரலாறு கூறுகிறது. பொது ஆண்டுக்கு 500 ஆண்டுக்கு முன்பு இந்திய ஆரியர்கள் இங்கு நுழைந்தனர். 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காகத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு, மலாயா, சீனா போன்ற நாடுகள் இலங்கையின் மீது படையெடுத்தன. 1505இல் போர்த்துகீசியர் வந்திறங்கி 1619ஆம் ஆண்டில் ஏறத்ழ நாடு முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் டச்சு நாட்டு உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். 1796இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அதிகாரத்தைப் பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக இலங்கை ஆகியது.
1948 பிப்ரவரி 4 இல் இலங்கைக்கு விடுதலை அளிக்கப்பட்டது. 1972இல் நாட்டின் பெயரை சிறீலங்கா என்று மாற்றிக் கொண்டனர்.
இந்தியாவுக்குத் தெற்கே இந்திய மாக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இதன் பரப்பு 65 ஆயிரத்து 610 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 3 லட்சம். பவுத்தர்கள் 70 விழுக்காடு. இந்து மதத்தினர் 15 விழுக்காடு. கிறித்துவர்கள் 8 விழுக்காடு. முசுலிம்கள்7 விழுக்காடு உள்ளனர்.
ஆரிய இனத்தவரான சிங்களர்களின் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி. தமிழ் நாட்டு மொழி மட்டுமே. சிங்களம் 74 விழுக்காடு மக்களால் பேசப் படுகிறது. மக்களில் 92 விழுக்காடு பேர் படிப்பறிவு பெற்றவர்கள். குடியரசு ஆட்சி முறை. நாட்டின் தலைவரான அதிபரே ஆட்சியின் தலைவரும் கூட.
வறுமைக்கோட்டுக்குக் கீழே 22 விழுக்காடு மக்கள் உள்ளனர். 9 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
---------------------"விடுதலை" 31-7-2009
3 comments:
Good start,and very useful notes for students..
Greeting
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Hi
எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.
இப்படிக்கு
செய்திவலையம் குழுவினர்
Post a Comment