Search This Blog

3.8.09

கடவுள் சிலைகள் கடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையாம்!




மனிதனைநினை!


தமிழ்நாட்டில் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க கோயில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட உள்ளது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (ADGP) திலகவதி தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாவட்டம் தோறும் வேலை, வாய்ப்பகம் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்றும் மேலும் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்று நீட்டி முழங்குகிறார்கள். ஒவ்வொரு ஊர் கோயில் பற்றியும், அதன் வீர, தீரப் பிரதாபங்கள் குறித்தும் தலப்புராணங்களை எழுதியும் வைத்துள்ளனர்.

சில கோயில்களில் சாமி சிலைகளின் கைகளில் சூலாயுதம், வேலாயுதம், எல்லாம் கூட இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன.

சிவபுரம் நடராசன் சிலை கடத்தப்பட்டு அமெரிக்காவின் தொழிலதிபர் நாட்ரன்துரை வீட்டில் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டது. வரவேற்பு அறையில் இப்படி வேடிக்கையான, பொம்மைகள் எல்லாம் வைக்கப்படுவதுண்டு. அதுவும் காலைத் தூக்கி ஒரு பொம்மை ஆடுகிறது என்றால் விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்கும் அல்லவா! இதெல்லாம் மேல்நாடுகளில் ரசிக்கத்தக்க பொழுதுபோக்காகும்.


அந்த நடராசன் சிலையில் கையில் ஒரு சிறிய தட்டைக் கொடுத்து சிகரேட் தூளை தூவிடப் (ASH TRAY) பயன்படுத்தப்பட்டதாகக்கூட செய்திகள் வெளிவந்தன.


இவற்றையெல்லாம் அறிந்த பிறகு கடவுளுக்குச் சக்தி உண்டு சிலைகள்தான் என்றாலும் மந்திரங்களால் அதில் சக்தி ஊட்டப்பட்டு இருக்கிறது என்று வியாக்கியானம் செய்யும் வேதியக்குலத்தோர்கள், ஆஸ்திக சிகாமணியினர்; இந்து மகா சமுத்திரம் எழுதும் சோ கூட்டத்தினர்; என்ன சொல்லப் போகிறார்கள்?


கடவுள் சிலைகள் கடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படை ஏற்படுத்துவதெல்லாம், அசல் நாஸ்திகச் செயல்; கடவுளைக் கேவலப்படுத்தும் போக்கு என்று உச்சநீதிமன்றம் செல்லப் போகிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தில் ராமனைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் செல்லவில்லையா!

ராமன் ஏவிய அம்பு ஏழு கடலைத் துளைத்துச் சென்றது என்றெல்லாம் கதை அளந்தவர்கள் ராமனைக் காப்பாற்ற உச்சநீதிமன்றத்தில் தவம் இருக்கத்தானே நேர்ந்தது.

ஒன்று மட்டும் உண்மை யார் எங்கு சுற்றினாலும் கடைசியில் வந்து சேர வேண்டிய இடம் ஈரோட்டுச் சந்திப்புதான்.

கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.

கடவுளைக் காப்பாற்ற மனிதர்களைத்தானே தேட வேண்டியதாகி விட்டது. அதுதான் தந்தை பெரியார் சொன்ன கடவுளைமற மனிதனை நினை என்பது!

---------------- மயிலாடன் அவர்கள் 2-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

4 comments:

அசுரன் திராவிடன் said...

அருமையான கட்டுரை தமிழோவியா அவர்களுக்கு நன்றி

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
வந்தியத்தேவன் said...

கடவுளுக்கே பாதுகாப்பில்லை.

Thamizhan said...

தங்கள் நேரத்தைக் கட்டுரைகள் பதிவிடுவதில் செலவு செய்யுங்கள்,அத்ற்கே நேரமில்லை.
நோண்டு நோண்டுன்னு நோண்டும்
வஞ்சகச் சிகாமணிக்கெல்லாம் பதில் எழுதுவதில் அர்த்தமில்லை.
யானையைக் கண்ட குருடர்கள் மாதிரி,எதையாவது உளறி ஊளையிடும் நரிக்கும்பல்.
அவர்கள் ,அவர்கள் அப்பா,மாமி,அத்திம்பேர்,அவாளுடைய அடிமைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பெரியார் விளக்கமாகப் பதில் சொல்லி விட்டார்.
அதைப் படித்து அல்லது தங்கள் கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பெரியார் கேட்ட கேள்விகளுக்குத் தான் இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

இரட்டைக் குவளை,சாதி வன்முறை,இந்தி எதிர்ப்பு,மதக் கலவர்ங்களில் முதலாவதாகச் சென்று அடக்குதல் என்று இதெல்லாம் அவாளுக்குக் கண்ணிலே படாது.
பெரியார் கல்வி நிறுவனங்கள் போல அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இசை,நாடகம்,விளையாட்டு என்று என்று எங்கே இளையவர்கள் சாதியின்றி ஒன்று சேர்ந்து பழகிப் படைத்து இணைந்து வெற்றி காண முடியுமோ அது தான் சாதி ஒழிப்புக்கு அடிக்கல்..
இங்கே தூண்டி விட்டு,நெய் விட்டு பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் என்று சூழ்ச்சியில் பிரித்து அடி தடி வரும் முதலிடமே கோவில்களும்,திருவிழாக்களும் அங்கு தூண்டிவிடும் நூல் மாமாக்களுந்தான்.
இணையத்தில் இந்த சூழ்ச்சியை மற்றவர்கள் நன்கு புரிந்து நோண்டுகளையும்,நண்டுகளையும்,குஞ்சுகளையும் சரியாக வைத்துத் தான் உள்ளார்கள்.
அதுகளே அதுகளுக்குப் பின்னூட்டம்,முன்னூட்டம்,சபாஷ் இந்த வேடமெல்லாம் நன்னா காட்டப்பட்டதை மறக்கல்லியோன்னா!