Search This Blog

2.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சுவீடன்-சுவிட்ஜர்லாந்து




சுவீடன்

1397இல் சுவீடன், நார்வே, டென்மார்க் ஆகியவை இணைக்கப்பட்டு வலுமிகுந்த நாடுகளாகத் திகழ்ந்தன. எனினும் சுவீடனுக்கும் டென்மார்க்குக் கும் பிரச்சினைகள் ஏற்பட்டுப் பிரிவு ஏற்பட்டது. 1520இல் டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடன் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டார். அத்துடன் சுவீடன் நாட்டுப் பெரிய மனிதர்களைக் கொன்று குவித்தார். ஸ்டாக்ஹோம் குருதிக் குளியல் என்று இப்படுகொலையை வரலாறு பதிவு செய்துள்ளது.

1523இல் சுவீடனின் அரசரான கஸ்டாவ் வாசா காலத்தில் டென்மார்க் நாட்டின் பிடியிலிருந்து சுவீடன் தன்னை விடுவித்துக் கொண்டது. 30 ஆண்டுப் போர் என வருணிக்கப்படும் 1618 முதல் 1648 முடிய நடைபெற்ற போரின் விளைவாக விடுதலை கிட்டியது. போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி பல புதிய பகுதிகள் சுவீடனோடு இணைக்கப்பட்டன.

அய்ரோப்பாவின் வட பகுதியின் ஃபின்லாந்துக்கும் நார்வேக்கும் இடையில் பால்டிக் கடலோரத்தில் உள்ள சுவீடனின் பரப்பு 4 லட்சத்து 49 ஆயிரத்து 964 சதுர கி.மீ. மக்கள் தொகை 91 லட்சம். கிறித்துவ லுத்தரன் பிரிவைச் சேர்ந்தவர்கள் 97 விழுக்காடு. மீதிப் பேர் பலவகை கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சுவீடிஷ் மொழியுடன் சாமி ஃபின்னிஷ் மொழிகளும் பேசப்படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

குடிக்கோனாட்சி முறை நாடு. மன்னர் நாட்டுத் தலைவர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் ஆட்சித் தலைவர். 6 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சுவிட்ஜர்லாந்து

பழங்காலத்தில் ஹெல்வெடியா என்று அழைக்கப்பட்ட சுவிட்ஜர்லாந்து ரோமானிய சாம் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1648ஆம் ஆண்டில் அதிலிருந்து விடுதலை பெற்றது. 1798இல் பிரெஞ்ச் புரட்சிப் படையினர் இந்நாட்டைக் கைப்பற்றி ஹெல்வெடிக் குடியரசு நாட்டை நிறுவினர். இருப்பினும் 1803இல் நெப்போலியன் பழைய ஆட்சியை ஏற்படுத்தித் தந்தார். பிரெஞ்ச் மொழி பேசும் மக்களும் இத்தாலி மொழி பேசுவோரும் சம உரிமை படைத்தவர்களாக 19 ஆம் நூற்றாண்டில் நிலை உருவானது.

நாடுகள் மன்றத்தில் (League of Nations) 1920 இல் உறுப்பு நாடானது. அதனால் ஜினீவா நகரம் உலக நாடுகள் மன்றத்தின் தலைநகரானது. இரண்டு உலகப் போர்களிலும் சுவிட்சர்லாந்து பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

அய்ரோப்பாவின் நடுப்பகுதியில் பிரான்சுக்குக் கிழக்கேயும் இத்தாலிக்கு வடக்கேயும் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பரவு 41 ஆயிரத்து 290 சதுர கி.மீ. மக்கள் தொகை 75 லட்சத்து 50 ஆயிரம். மக்களில் ரோமன் கத்தோலிகர் 42 விழுக்காடு. புரொடஸ்டன்ட் 35 விழுக்காடு. மதமே இல்லாதவர்கள் 11 விழுக்காடு.

ஜெர்மனி மொழி பேசுபவர்கள் 64 விழுக்காடு. பிரெஞ்ச் மொழி பேசுபவர்கள் 19 விழுக்காடு. இத்தாலி மொழி பேசுபவர்கள் 8 விழுக்காடு. ரோமான்ஷ் மொழி பேசுபவர்கள் ஒரு விழுக்காடு. இந்த நான்கு மொழிகளுமே ஆட்சி மொழிகள்.

மக்களில் 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். அய்ரோப்பாவின் உயரமான மலையான ஆல்ப்ஸ் இந்த நாட்டின் தென்பகுதியில் உள்ளது

------------------"விடுதலை" 2-8-2009

0 comments: