Search This Blog

1.1.09

2009 ஆம் ஆண்டை நோக்கி...! ஒரு பகுத்தறிவுப் பார்வை..




2009 புத்தாண்டு இன்று பிறந்தது. தமிழ்ப் புத்தாண்டும் தை ஒன்றில் பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்கும் நிலையில் கடந்து வந்த பாதைகளையும் அரிமா நோக்கோடு பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, பல சோதனைகளையும், சாதனைகளையும் கடந்து வந்துள்ளோம். கடந்த ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் புத்தாண்டில் சோதனைகளைச் சாதனைகளாக ஆக்கிட உறுதி கொள்ளவேண்டும்.

சமூகநீதியைப் பொறுத்தவரையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று, உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும் (10.4.2008). அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களில் கிரீமி லேயர்களை பொருளாதார அடிப்படையில் வெளியேற்றுவது என்பது வலது கையில் கொடுத்ததை இடது கையால் பறிக்கும் அநீதியாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை வரவேற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், மற்றொரு பகுதிக்குத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முடிவடையும் காலத்தில்கூட, திராவிடர் கழகம் இதற்காகத் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை நடத்தி (29.12.2008) ஆயிரக்கணக்கில் கறுஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்!

சமூகநீதிப் பிரச்சினை என்று வரும்பொழுது தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட மக்களில் அருந்ததியர்க்கான இட ஒதுக்கீடும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சட்டங்களாகும்.


தமிழ்ப் பண்பாட்டுத்தளத்தில் தைத் திங்களே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற அறிவிப்பு வரலாற்று மகுடமாகும். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்த மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பமாகும்.

வரும் தைமுதல் நாள் என்பது சட்ட ரீதியாகத் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் புத்தாண்டுப் பொங்கலாகும். அந்த வீரியத்துடனும், மகிழ்ச்சிப் பெருக்குடனும் இவ்வாண்டுப் பொங்கலைத் தமிழர்கள் கொண்டாடவேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முக்கிய வேண்டுகோளாகும்.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ்நாட்டில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லத்தக்கதே என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அமலுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு இருப்பதை வேதனையுடன் நினைக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

எந்தக் காலத்திலோ யாரோ எழுதி வைத்த அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு புராணக் கதையின் பாத்திரத்தைக் காரணம் காட்டி, மக்களுக்கான ஒரு வளர்ச்சித் திட்டத்தை முடக்குவதும், இதற்கு அதிகம் படித்த நீதிபதிகளே காரணமாக இருப்பதும் கவலைப்படவேண்டிய ஒன்றாகும். அறிவியல் காலக் கட்டத்தில் மதவாதம் தன் கோர முகத்தைத் தூக்கிக் காட்டுகிறதே என்று துக்கப்படவேண்டிய நிலை இது.

மதவாதமும், பயங்கரவாதமும் மிரட்டும் ஆண்டாகவே 2008 இருந்திருக்கிறது. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு - அது தொடர்பான குற்றவாளிகள் கண்டுபிடிப்பு - இந்துத்துவா தீவிரவாதிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டிற்று - குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 12 பேருக்குத் தூக்குத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் அளித்ததுமூலம் குஜராத்தில் இந்துத்துவா ஆட்சியின் அரசப் பயங்கரவாதம் அம்பலமாகிவிட்டது.

இந்திய இராணுவத் துறையிலும் இந்துத்துவா பயங்கரவாதிகள் ஊடுருவல் என்ற தகவல் குருதியை உறையச் செய்யக் கூடிய ஒன்றே!

மும்பை ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில்கூட இந்தியாவை நோக்கிக் கவனம் செலுத்தவேண்டிய ஒரு அவல நிலையை ஏற்படுத்தி விட்டது.

பாகிஸ்தானை மய்யமாகக் கொண்டு இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றாலும், அதற்கும்கூடக் காரணம் குஜராத்தில் திட்டமிட்ட வகையில் சிறுபான்மையினர்க்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளே ஆகும் என்று தெரியவந்துள்ளது.

பயங்கரவாதம் எந்த மதத்தின் பின்னணியில் வெடித்தாலும் அது ஒரு அருவருக்கத்தக்கதே - அது மனிதநேயத்துக்கு எதிரானதே!

16 ஆண்டுகளுக்குமுன் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப் படவில்லை என்பது அபாயகரமானதாகும். சட்டத்தின்மீதும், நீதியின்மீதும் மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்வதாகும். எதிர்வினை பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடியதாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல - உலக அளவிலும் மதவாதப் பயங்கரம் தலைதூக்கி நிற்கிறது. இந்த நிலையில், மதமற்ற உலகம்பற்றிய புது சிந்தனைக் கீற்றுகள் உதிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தந்தை பெரியாரியல் உலகுக்கே வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

பகுத்தறிவுப் பகலவனின் வெளிச்சத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கத் திட்டமிடுவோம் - வெற்றி பெறுவோம்!

--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம்- 1-1-2009

0 comments: