Search This Blog

3.11.11

சீனாவைப் போல இந்தியாவிலும் கிரிக்கெட் தடை செய்யப்படுமா?


சபாஷ், நீதிபதி மார்கண்டேய கட்ஜு!

பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சியில் கரன்தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியிட்ட கருத்துகள் மிகவும் முற்போக்கானவை. நிதர்சனமானவை - மிகவும் வரவேற்கத்தக்கவையுமாகும்.

கேள்வி: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் பற்றி மக்களுக்குப் போதையேற்ற ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறீர்களா?

நீதிபதி பதில்: ஆமாம், கிரிக்கெட் நமது மக்களுக்கு ஒரு போதைப் பொருள் - ஓபியம் மாதிரி! ரோமாபுரி பேரரசன் சொல்வானாம். மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை யென்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்! என்று. இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியாவிட்டால், அவர்களைக் கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய அலைவரிசைகளில் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் ஒரே பிரச்சினை மாதிரி என்று கூறியுள்ளார் நீதியரசர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் - அதுவும் பிரஸ்கவுன்சில் தலைவர் என்கிற மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், மக்கள்மீது கொண்ட மகத்தான மதிப்பீட்டால் இப்படி புகுந்து விளாசி இருப்பது சாதாரண மானதல்ல. இப்படியும் பெரிய மனிதர்கள், சமூகத்தின் மீது மிகப் பெரிய அளவில் அக் கறையும், கவலையும் கொண்ட அறிவு ஜீவிகள் இருப்பது கண்டு இறும்பூதெய்துகிறோம்.

உண்மையான திறமைக்கு சீட்டுக் கிழித்து விட்டு, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட உப்பு சப்பற்ற ஒரு விளையாட்டை விளம்பரப் போதையூட்டி, உழைக்கும் மக்கள் சக்தியை வெட்டிப் பொழுது போக்கிற்கு இரையாக்கும் கொடுமை நாட்டில் அன்றாடம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுள்ளது. இந்திய மண்ணுக்குரிய ஹாக்கி சவலைப் பிள்ளையாக ஒதுக்கப்பட்டு விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கோடியில் புழங்கிக் கொண்டுள்ள நிலையில், ஹாக்கி வீரர்கள் கூலி வேலைக்காரர்களாக நடத்தப்படும் கொடுமை!

உண்மையான திறமை என்றால் அது தமிழர்களின் வீர விளையாட்டான சடுகுடு என்கிற கபடி தான். அதை வெளி உலக வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டதில் இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும், ஊடகங்களுக்கும் முக்கியப் பொறுப்புண்டு. பல தடைகளையும் தாண்டி இவ்வீர விளையாட்டு உலக அரங்கில் தலை நீட்டியுள்ளது - மன நிறைவையளிக்கிறது.

சீனாவில் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தனர் - அதுவும் 5 நாள் விளையாட்டு! சீன அரசாங்கம் கிரிக்கெட்டைத் தடை செய்து நல்ல காரியத்தைச் செய்து விட்டது!

கிரிக்கெட் என்றால் சூதாட்டம் என்று பொருள் படும்படி அன்றாடச் செய்திகள் வந்து கொண்டுள்ளன. வறுமைக்கோட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதற்கு ஆயிரம், அய்ந்நூறு என்று டிக்கெட் விற்பனை! கடன் வாங்கியாவது கிரிக்கெட் பார்க்கும் ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தி விட்டதே!

கிரிக்கெட் சங்கத்திற்குத் தலைவராக பெரும் பெரும் தொழில் அதிபர்கள் பெரும் பொருள் செலவு செய்து எப்படியாவது அந்தப் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் பதவி என்பதைவிட சரத்பவார் கிரிக்கெட் போர்டு தலைவராகவே பெரும் ஆர்வம் காட்டும் நிலை! பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் இடமாக அது உள்ளது. அதிலும் ஏகப்பட்ட ஊழல்கள் - வழக்குகள் - நீதிமன்றங்கள் என்ற நிலைப்பாடு.

சீனாவைப் போல இந்தியாவிலும் கிரிக்கெட் தடை செய்யப்படுமா?

---------------------"விடுதலை” தலையங்கம் 3-11-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

ஊடகங்கள் திருந்துமா?

இந்தியாவின்பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய மார்கண்டேய கட்ஜு, கரன்தாப்பரிடம் அளித்த செவ்வி முழுமையான அளவிற்குச் சிறப்பாக இருந்தது என்றாலும், ஊடகங்களின் பிற்போக்குத்தன - மூடநம்பிக்கைப் பரப்பு தலை மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்ததற்காக அவரை எவ்வளவுப் பாராட்டி னாலும் தகும் - தகும்!

அய்ரோப்பாவில் ரூசோ, தாமஸ், பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்திற்குத் தயார் செய்தார்கள்! இந்த நாட்டில் உள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதைக் கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்க விடும் வரையில், மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்காது என்று முழங்கினான் பிரெஞ்சு சிந்தனையாளன் திதரோ என்று எடுத்துக்காட்டிய நீதியரசர், இந்தியா வில் ஊடகங்கள் எந்தத் தரத்தில் செய்திகளை வெளியிடுகின்றன என்பதை யதார்த்தக் கண்ணோட் டத்தோடும், மிகவும் செறிவுடனும் தெளிவுபடுத் தினாரே!

அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களைப் பரப்புகின்றன ஊடகங்கள்.

ஏற்கெனவே நமது நாட்டில் 80 சதவிகித மக்கள் ஜாதி, மத, மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின் தங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளிலிருந்து விடுவித்து, ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக ஊடகங்கள் தூண்டுதலாக இருக்க வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலைகளை அல்லவா நமது ஊடகங்கள் செய்து வருகின்றன?

பல தொலைக்காட்சிகளில் பெரும்பாலான நேரங்களில் ஜோதிடம் ஓடுகிறது. இந்தக் கல் மோதிரம் அணிய வேண்டும்; இந்த நிறத்தில் சட்டை அணிய வேண்டும்; நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்ன உளறல் இது! என்று மிகச் சிறப்பாக அறிவியல் கண்ணோட்டத்தோடு பேட்டி அளித்துள்ளார் பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பேட்டியளித்தால் என்னென்ன கருத்துகளை, எந்த வகைகளில் எடுத்துக் கூறியிருப்பாரோ அதேபோல உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சொல்லுகிறார் என்றால் சாதாரணமா? இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டும்; சீர்திருத்த எண்ணங்களை விதிக்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தச் சாரத்தைப் புரிந்து கொண்டு - விஞ்ஞான கருவிகளான தொலைக் காட்சிகள், ஏடுகள், இதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் செயல்பட வேண்டாமா?

நீதியரசர் சொல்லியுள்ளது போல மக்களை மடையர்களாக்கும் வேலைகளைச் செய்யும் ஊடகங்கள் சட்டப்படியும் நியாயப்படியும் தண்டிக்கப்பட வேண்டாமா?

இந்த வகையில் ஊடகங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்கினால் கூட நல்லதுதான்.

மக்கள் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்து கிறார்கள். - அனுபவிக்கிறார்கள் - அதே நேரத்தில் விஞ்ஞான மனப்பான்மை உடையவர்களாகச் சிந்திக் கிறார்களா - செயல்படுகிறார்களா? வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களா என்பது முக்கியமான வினா அல்லவா!

மக்களை மதத்தின் பள்ளத்தில் தள்ளுவதால் அவர்களின் அறிவு நாசம், உழைப்பு வீண் - காலக் கேடு - பொருளாதார இழப்பு - தன்னம்பிக்கை வீழ்ச்சி என்கிற மிகப் பொல்லாத கேடுகளுக்கு அல்லவா ஆட்படுத் தப்படுகிறார்கள்?

மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமும் ஒழிந்தாலொழிய இந்தியப் பொருளாதாரத் துறை எந்த நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்

(பகுத்தறிவு 1.12.1936) என்று தந்தை பெரியார் கூறிய கருத்து கருத்தூன்றத் தக்கதாகும்.

மக்களின் அறிவை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதும் கவனிக்கத்தக்கதாகும்.

அறியாமை, மூடத்தனங்களை வளர்ப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அது கடுமையான குற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே பிரஸ் கவுன்சில் தலைவர் அளித்த செவ்வியின் சாரமாகும்.

ஊடகங்கள் தங்கள் போக்குகளை மாற்றிக் கொள்ளுமா?
-----------”விடுதலை” தலையங்கம் 4-11-2011