கடவுள் - ஓர் சுவாரஸ்யமான விவாதம்
நான் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியை. ஒரு நாள் அய்ந்தாம் வகுப்பு குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். நான் நடத்தத் தொடங்கியது தமிழ்ப்பாடம். தமிழ்ப் பாடத்தில் செய்யுள் பகுதிகளில் இருந்த இறைவாழ்த்துப் பகுதியை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஆரம்பித்தேன். அப்போது அமைதியாக இருந்த வகுப்பறையில் சாமியெல்லாம் இல்ல டீச்சர் என்று ஒலித்த ஒரு குரலால், நான் அதிர்ந்து போனேன். எனது வகுப்பறையில் இதுவரை பல்வேறு தலைப்புகளில் விவாதங்களையும், கலந்துரையாடலையும், குழந்தைகளை வைத்து நடத்தியுள்ளேன்.
நாம் ஏன் இதைப்பற்றி விவாதிக்கக் கூடாது என்ற எண்ணம் உடனே எனக்குள் தோன்றியது. இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று விவாதிக்கிற அளவுக்கு முதிர்ச்சி இந்த அய்ந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு இருக்குமா? என்கிற வழக்கமான எனது பாழாய்ப் போன ஆசிரிய மூளை சந்தேகித்தது.
சரி! இருக்கட்டும் முயன்றுதான் பார்ப்போமே! என்று பெரியவர்கள்கூட பேசத் தயங்குகிற ஓர் தலைப்பை விவாதமாக அறிவிக்க, கடவுள் பற்றி உற்சாகமாக பேசத் தொடங்கினார்கள் குழந்தைகள், என்னை மிகுந்த ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நிகழ்ந்த அவர்களது கடவுள் குறித்த விவாதம் எனது புரிதலையும், மூடநம்பிக்கையையும் மாற்றத் தொடங்கியிருந்தது. அய்ந்தாம் வகுப்புக் குழந்தைகளின் கடவுள் குறித்தான விவாதத்தில் ஒரு சிலவற்றை நீங்களும் பாருங்களேன்!
1. நம்மை மீறிய ஒரு சக்தியுண்டு, அது தான் கடவுள், அது நம்மை வழி நடத்தும்.
உன்சக்தி உனக்குள்ளே ஒளிந்து உள்ளது. அதை வெளிக்கொணர முயற்சிப்பதுதான் வெற்றியின் திறவுகோல்.
2. பூமியின் இயக்கமே கடவுள் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டும்.
அறிவியல் பூர்வமாக ஆய்ந்து பார்த்ததில் அது ஈர்ப்பு விசையால் சுழல்கிறது.
3. நாம் செய்யும் பாவம், புண்ணியங்களை கடவுள் கண்காணிக்கின்றார்.
அவர் மட்டும் நம்மைப் பார்க்கிறார். நம்மால் மட்டும் ஏன் அவரைப் பார்க்க முடிவதில்லை?
4.பொன், பொருள், செல்வம், அறிவு எல்லாம் இறைவன் தந்த வரம்தான் நமக்கு.
எனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல சிந்தனை, மூலம்தான் அவை கிடைக் கின்றன. இறைவனால் கிடைப்பதில்லை.
5. அன்பான உறவு முறைகளையும் தாய், தந்தை மற்றும் குரு போன்றவர்களின் ரூபங்களில் கடவுள் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.
கடவுள் ஏன் அவருக்கு உரிய ரூபத்தில் வரவில்லை? எப்போதுதான் வருவார்? என்தாய் மட்டும்தான். கடவுளின் பயமில்லை.
6.கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் ஆன்மாவோடு கலந்து இருக்கிறார். நம் நல்ல பழக்க வழக்கம் மூலம் வெளிப்படுவார்.
வடிவம் இல்லாத, உருவமற்ற, பார்க்க முடியாத ஒன்றைத் தொழுவது சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு நல்லது அல்ல.
7. கடவுள் வந்து அருள் தரும்போதுதான் நம்மை மீறி நம் உடல் ஆடும். அது கடவுளின் அருள்.
ஏன் மனிதர்கள் ஆடுகிறார்கள். கற்சிலையான சாமியே ஆடலாமே! வேப்பமரம்தான் சாமி என்றால் அது ஆடட்டுமே.
8. அம்மனுக்குக் கூழ் சமைத்து ஊற்றினால், அம்மை நோய் வராது.
எதனாலே, எதனாலே! பாடத்தில் வைரஸ் கிருமி பாதிப்பதால்தான் அம்மை நோய் வருகிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக சொல்லப்படுகிறது. நம்ம ஆசிரியரும் அதையேதான் சொன்னாங்க என்று காரசாரமாகவும், பதிலுக்கு பதிலாக பல விவரங்களை முன்வைத்து பேசிய மாணவர்களின் கற்றல்திறனை நினைத்து மகிழ்ந்தேன்.
மேலும் அவற்றைக் கல்வியோடு தொடர்புபடுத்தி பேசிய, அவர்களின் மனவளத்தையும், சிந்தனையையும், சமூக அக்கறையினையும் பார்த்தபோது என் உடல் சிலிர்த்தது. கோபம், கலவரம், கொந்தளிப்பு, சண்டை இவை இல்லாத அழகான விவாதம் நான் எதிர்ப்பார்க்காத வழியில் என் மனதைத் தொடர்ந்தது. இது மாணவர்களுக்குப் புரியாத விஷயம் என்ற கண்ணோட்டத்தில் இருந்த என்னைப் பெரிய அளவிற்கு தெளிவாக்கிப் புரிய வைத்தனர் குழந்தைகள்.
------------------------நன்றி: "புதிய புத்ககம் பேசுது", அக்டோபர் 2011
0 comments:
Post a Comment