Search This Blog

19.11.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -19

திருந்தி விட்டனரா பார்ப்பனர்கள்?



அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் பார்ப்பனர்களை விரட்ட வேண்டும் என்றார்; கிளியும் குயிலும் மாடப் புறாவும், மைனாவும் ஒரே சோலையில் உல்லாசமாக வாழும். ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால், அதுவும் நம்மைப் போல் ஒரு பட்சி தானே என்று கருதாது. வட்ட மிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதை அறியும்.

அதேபோலவே திராவிட பெருங் குடிமக்கள் தம்மில் சிற்சில வேறுபாடு கொண்டவராயிருப்பினும், ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூறையாடும் ஆரியருடன் (பிராமணருடன்) வாழ இசையார் என்று அண்ணாதுரை அவரது பத்திரிகையில் எழுதினார் அறிஞர் அண்ணா அவ்வாறு எழுதியதில் என்ன தவறு? இன்றைக்குக் கூட தமிழ் நாட்டு மக்களின் வாழ் வோடு எந்த வகையில் ஒன்றிப் போயிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

மொழிப் போராட்டத்திலோ, கலாச்சாரப் போராட்டத்திலோ சமூக நீதிக் களத்திலோ, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்கும் உரிமைப் போரிலோ பார்ப்பனர்கள் ஒன்றிப் போராடியதுண்டா? போராடா விட்டாலும் பரவாயில்லை. குறுக்குச் சால் ஓட்டுவது - குதர்க்கம் செய்வது - காட்டிக் கொடுப்பது என்கிற வட் டத்துக்குள்ளே தானே இருக்கின்றனர் - மறுக்க முடியுமா?

தமிழ் செம்மொழி அறிவிப்பு; தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை என்று ஒரு நீண்ட வரிசையையே எடுத்துக்காட்ட முடியுமே!

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறவிருந்த அந்தக் கால கட்டத்திலே தினமணி (21.6.2010) என்ன எழுதிற்று?

செந்தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம் தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக, செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான். அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது! என்று தினமணி எழுதியதற்கு என்ன பொருள்?

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குத்தான் லாயக்கு என்று துக்ளக் (20.6.2010) இப்பொழுதுகூட எழுதவில்லையா?

விளம்பரப் பலகைகளில் தமிழில் இடம் பெற வேண்டும் என்றால் மொழி நக்சலிட்டுகள் என்று துக்ளக் எழுதுகிறதே! (15.9.2010)

கோவில்களில் தமிழில் வழிபாடு என்றால் மொழி ஆர்வமா? துவே ஷமா? என்று பற்களை நரநரவென்று கடித்துத் தலையங்கம் தீட்டுகிறாரே திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் (துக்ளக் 18.11.1998)

தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாக சொல்கிறாரே முதல் அமைச்சர் என்று கேள்வி கேட்டால் எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான் என்று கல்கி (27.1.2008) கதைக்கிறதே!

இப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டத்தோடு தமிழர்கள் எப்படி இணங்கி வாழ முடியும்?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் இப்படி எல்லாம் துவேஷ நஞ்சைக் கக்குவார்களா?

இப்பொழுது கூட கேட்கிறோம். பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்று சொல்ல முடியாது - குறைந்தபட்சம் தமிழர்கள் என்று கூட சொல்வ தில்லையே! (தேவைப்பட்டால் சந்தர்ப் பவாதமாக அவர்கள் சொல்வது கூடும்!)

கழகம் என்றால் சூதாடும் இடம் என்று எழுதுவார். ஆனால் அண்ணா தி.மு.க.வில் கழகம் இருந்தால் அதற்கு வேறு வியாக்கியானம் கூறத் தயாராகவே இருப்பார் சோ.

பெரியாரும், அண்ணாவும் பார்ப்பனர்கள் பற்றி தாக்கி எழுதுவதாகக் குதிக்கிறதே துக்ளக்

நீண்ட காலத்துக்கு முன்புகூட போக வேண்டாம் சென்னை அண்ணாநகர் ஸ்ரீகிருஷ்ணா கார்டனில் இதே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி (24,25-.12.2005) எப்படியெல்லாம் தமிழர்களுக்கு எதிராக வெறிக் கூச்சல் போட்டார்கள்?

அரிவாளைத் தூக்கிக் காட்டி மேடையில் எப்படி எல்லாம் வன்முறை நெருப்புத் துண்டங்களை அள்ளி வீசினார்கள்?

1967 பொதுத் தேர்தலில் ஆச்சாரி யாருடன் அண்ணா கூட்டுச் சேர்ந்தது பற்றியும் சிலாகித்துள்ளார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்வாள்.

பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரி யார் வேண்டுகோள் விடுத்தாரே _ அது எந்த அடிப்படையில்? ஆச்சாரியாரின் ஜாதி உணர்வை இன உணர்வை அது வெளிப்படுத்தவில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் ஆச்சாரியாரோடு அண்ணா ஏன் தொடர்ந்து உறவு கொண்டாட முடியவில்லை? தேனிலவு முறிந்துவிட்டது என்று ராஜாஜி கூற நேர்ந்தது ஏன்?

சாணக்கியரின் ராஜ தந்திரம் அண்ணாவிடம் புறமுதுகு காட்டித் தோற்று ஓடி விட்டது என்று ஒப்புக் கொள்வார்களா? மாட்டார்கள்.
தி.மு.க. என்பது பெருங்காயம் இருந்த பாண்டம் அதையெல்லாம் துடைத்து எடுத்து விட்டேன் என்று ஆச்சாரியார் எழுதவில்லையா?

அப்படியா? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் (தி.மு.க.) என் பக்கம் வந்த நிற்பார்கள் என்று தந்தை பெரியார் சொல்லவில்லையா? கடைசியில் அதுதானே நடந்தது. பதவியேற்குமுன்பே தமது தலைவர் பெரியார் இருந்த திருச்சி - புத்தூர் பெரியார் மாளிகையை நோக்கித்தானே பறந்தார் அறிஞர் அண்ணா!

1971 தேர்தல் என்னாயிற்று? தி.மு.க. ஆச்சாரியாரோடு கூட்டுச் சேர வில்லையே!

சேலத்தில் திராவிடர் கழகம் நடத் திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை மய்யப்படுத்தி பார்ப்பனர்கள் ஆச்சாரி யார் தலைமையில் ஆரிய - திராவிடப் போராட்டத்தை நடத்தவில்லையா?

இறுதியில் திராவிடத்துக்குத் தானே வெற்றிமாலை 1967 தேர்தலில் தி.மு.க.வுக்கு 138 இடங்கள் என்றால், வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஆரியர் _ திராவிட போராட்டமாக நடந்த 1971 பொதுத் தேர்தலில் தி.மு.க. 183 இடங்களில் அல்லவா அபார வெற்றி பெற்றது!

இந்த நாடே ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளவில்லையா? இந்த நாட்டை விட்டே வெளியேறப் போவதாக கையொப்பமிட்டு எழுத வில்லையா? (கல்கி 4.4.1971)

அப்பொழுது முதல் அமைச்சர் கலைஞர் எவ்வளவு அழகாகச் சொன்னார்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்போது ஆச்சாரியாரே துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே அம்சம் இதுதான் (3.3.1971) என்று குறள் போலக் கூறினாரே!

வி.பி. இராமன் பிராமணராக இருந்தாலும் நாவலரின் நண்பர் ஆனார். திமு.க.விலும் இணைந்தார் என்றெல்லாம் கல்கி எழுதுகிறதே - அந்த வி.பி. இராமன் ஏன் தி.மு.கவில் தொடர முடியவில்லை?

அவர் தி.மு.க.வுக்கு வந்து செய்த ஒரே காரியம் ஆச்சாரியாரையும் - அண் ணாவையும் சந்திக்கச் செய்ததுதானே? பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் இது போன்ற வேலைகளைத் தான் செய்வார்கள்; அதைத் தான் அவரும் செய்தார். ஆனாலும் ஒட்ட முடியவில்லை. மாடப்புறாவும் மைனாவும் தானே ஒரு சோலையிலே வாழ முடியும் என்றுஅண்ணா எழுதியதை லட்சுமிநாராயணய்யர் இந்த இடத்திலும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

பார்ப்பனர்கள் எல்லாம் சகோதரத்துவம் பேசும் பேர் வழிகள்; திராவிடர் இயக்கத்தவர்கள்தான் பிராமணத்துவேஷிகள் என்பது போல பம்மாத்து செய்கிறார்களே!

1971 தேர்தலின் போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம். சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியது என்ன?

இதோ படியுங்கள்.

பிராமண தர்மம் ஓங்குக!


பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்; இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!

ஸ்லோகம் சொல்வது போல் பெரிய வர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத் துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!

இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள லாம். தி.மு.க காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம்!

அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக் காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலை கிறார்கள், இந்த ஆட்சியில்!

அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக் களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?

சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!

இப்படிச் சொன்ன பிறகு பிராமணர் களாகிய நாம் பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்க லாமா?

சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்தி ரர்கள் ஆட்சி வரலாமா? சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும். இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.

இந்த சூத்ரர்களால்தான் நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் பிரபலமானது.

பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம் தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்ரர்கள் மனதை மாற்றி; நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட்டான்? அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்குப் பிறகுதான் ஆதரிப்போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது. காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?

மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும். இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.

சூத்ரன் கொட்டம் ஒடுக்க - நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க பிராமண தர்மம் ஒங்க, - மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய, -ஆரிய பாஷையான சமஸ்கி ருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்!

பிரியமுள்ள கே.எம்.சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்


இதற்கு என்ன பதில் திருவாளர் கே.சி. நாராயணன் அய்யர் அவர்களே!


ராஜாஜியின் அறிக்கையும் நாவலரின் பதிலடியும்

வி.பி. இராமனும் நாவலரின் நண்பர் பார்ப்பன எதிர்ப்பு பின்னர் கைவிடப்பட்டது என்றெல்லாம் அனிச்சம் பூவெடுத்து ஒத்தடம் கொடுத்து எழுதுகிறதே துக்ளக்

அந்தக் கால கட்டத்திற்குப் பிறகு 1971இல் நாவலர் இரா. நெடுஞ்செழியன் என்ன பேசினார்? (18.4.1971 அன்று சென்னையில் பேசிய உரையிலிருந்து ஒரு பகுதி இதோ)

நான் அப்போதே சொன்னேன் தேர்தல் முடிந்துவிடும்; நீங்கள் துவக்கிய உணர்ச்சி மறையாது என்று. இன்று பார்க்கிறோம்; தேர்தல் முடிந்ததும் அது அடங்கியதா?

நெடுஞ்செழியனுக்குத் தோல்வி என்றவுடன் பார்த்தசாரதி கோவில் பக்கம் வெடிகள் போட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களே, தித்திப்பு வழங்கினார்களே, அதற்கு என்ன அடையாளம்? அதன் பின்னால் இருந்தவர் யார்?

ஒரு சில இடங்களில் இந்த உணர்ச்சி பயன்பட்டாலும் மொத்தத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட உங்கள் தோல்வியைக் குறித்து உணர்ந்தீர்களா? கிளப்பி விடுவது சுலபம். ஆனால் இன்று கொழுந்து விட்டெரிகிறது!

ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ் வொரு உணர்ச்சிக்கும் பொருள் என்ன? எல்லாம் சேர்ந்த ஒரு இனம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை அடி யோடு அழிக்க தடுக்க விரும்புகிறது என்பதுதானே?

டெஸ்ட் பண்ணினீர்களே என்ன ஆயிற்று? மூட்டிவிட்ட தீ இன்று எங்கே போய் நின்று இருக்கிறது?

நாங்கள் வெற்றி பெற்றால் தர்மம் தோற்றுவிட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் தர்மம் வென்றது என்றாரே அது நேர்மையா?

தேர்தல் முடிந்தபிறகு இன்னமும் ராஜாஜி விஷத்தைக் கக்குகிறாரே கல்கித் தலையங்கத்தை நண்பர் வீரமணி படித்துக் காட்டிப் பேசினாரே எனக்கு முன்பு!

மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள் தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங் கப்படுத்திக் கொள்பவரின் திருமுன் னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப்பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை என்று எழுதுகிறார் ராஜாஜி. அவைகள் இல்லாத தந்தை பெரியாரோ 93 வயது வாழுகிறார்! தினம் தினம் சுற்றிப் பிரச்சாரம் செய்கிறாரே!

ஆஸ்திகர்களோ, ராஜாஜியோ இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? அவர் மேலும் எழுதினார்:

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது; இந்த ராஜ்யத்தைவிட்டே வெளியேறி விட வேண்டும் என்று சிலமகா புருஷர்கள் உட்பட பலர் எண்ணத் தொடங்கி விட்டார்கள் என்று எழுதுகிறாரே!

நண்பர் வீரமணி கேட்டது மாதிரி எப்போது புறப்படப் போகிறீர்கள்? அது எப்போது எங்கே புறப்படப் போகிறீர்கள்?

அமைதி தவழும் மேற்கு வங்காளத்திற்கா? ஸ்திரமான அரசியல் நடக்கும் கேரளத்திற்கா? ஆந்திரத்திற்கா? இந்து, முஸ்லீம் ஒற்றுமை பொங்கும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கா? எங்கே போகப் போகிறீர்கள்? நீங்கள் இப்படி எழுதினால் மற்றவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்களா?

யார் யார் அந்த மகா புருஷர்கள் பட்டியலிலே இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா? சங்கராச்சாரியாரும், ராஜாஜியும் அந்தப் பட்டியலில் உண்டா?

எங்களுடன் சேர்ந்து வாழ்வது என்றால் அவ்வளவு அருவருப்பு ஏன்? எங்களோடு சேர்ந்து வாழ முடியாது என்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆபத்து என்ன ஏற்பட்டது? ஏன் நீங்கள் இவ்வளவு இழிந்த நிலைக்குப் போனீர் கள்? இதற்கு முழுப் பொறுப்பையும் ராஜாஜிதானே ஏற்று ஆக வேண்டும்? ராஜாஜி, அவர் குரலை ஒலித்த பத்திரிகை, அவரது கட்டளையை - வேதவாக்காக ஏற்றுக் கொண்டு நடந்த அவரது இனத்தவர்களான பிராமணர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

ஜாதி அடிப்படையிலே மனிதனை அவனது செயல்களை எடை போடக் கூடாது என்பது எங்கள் கொள்கை, நீங்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அதனை இப்படிக் கிளப்பிவிட்டு எங்களைத் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தீர்கள், நாங்கள் தோற்றுவிட்டோம் என்றால் எங்க ளுக்கு என்ன நட்டம்! இந்தக் கொள்கை மடிந்து போகுமா? நாங்கள் மூலையில் போய் முக்காடு போட்டுக் கொள் ளுவோமா? என்று நாவலர் பேசினாரே!

நாவலரின் இந்த உரைக்கு என்ன பதில்? பார்ப்பன உணர்வோடு பார்ப்பனர்கள் நடந்து கொள்வதை மறைத்துவிட்டு, அதனை எதிர்த்துப் பதிலடி கொடுக்கும் போது பதறுவது ஏன் பார்ப்பனரே என்பது தான் எங்கள் கேள்வி.

---------------------தொடரும் --- கலி.பூங்குன்றன் அவர்கள் 19-11-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: