Search This Blog

21.11.11

அய்யப்பன் சீசன்! வியாதி கிளம்பிவிட்டது!


கிளம்பிவிட்டது அய்யப்பன் சீசன்!

அய்யப்பன் வியாதி கிளம்பிவிட்டது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் இருமுடி தரித்துக் கிளம்பி விடுவார்கள். இப்பொழுதே தமிழ்நாட்டில் உள்ள ஏடுகள், இதழ்கள் சிறப்பிதழ்களை வெளியிட ஆரம்பித்து விட்டன. பிரஸ் கவுன்சில் தலைவர் - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கஜேந்திர கட்ஜு அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மூட நம்பிக்கையைப் பரப்பும் தொழிலைக் கைவிட அவர்கள் தயாராக இல்லை. மகரஜோதி என்பது உண்மையல்ல; செயற்கையானதுதான். கேரள மின்வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள்தான் பொன்னம்பல மேடு என்ற பகுதி யிலிருந்து சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டது. தேவசம் போர்டினர் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆமாம், தெய்வீக சக்தியல்ல, செயற்கையானதுதான் என்று கூறிய பிறகும், ஆண்டு தோறும் மகரஜோதி பித்தலாட்டம் அரங்கேற்றப்படுகிறதே, அது எப்படி? நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டும், நீதிமன்றமும் நேரிய முறையில் இதுவரை சரியான தீர்ப்பினை வழங்காதது அதிர்ச்சிக் குரியதாகும்.

மதம் என்று வந்துவிட்டால் உண்மைக்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும், அறிவுக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. பித்தலாட்டத்தின் மறு பெயர்தான் மதம் என்பது மகரஜோதி விடயத்திலிருந்தே அம்பலமாகி விட்டது.

இதற்கிடையே அய்யப்பப் பக்தி பற்றி ஏடுகளும், இதழ்களும் அவிழ்த்துக் கொட்டும் செய்திகளும், தகவல்களும் படு நகைச்சுவைகளாகும்.

அய்யப்பன் விரத காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவையாகக் கூறப்படுபவை இதோ:

தாயைத் தவிர மற்ற பெண்களிடம் (மனைவி உள்பட) இருந்து தூரமாக விலகி இருக்க வேண்டும்.

சபரிமலையில் இருக்கும்போது ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்கக்கூடாது.

பொய் சொல்லுவது, திருடுவது, பிறர்மனதை நோகச் செய்வது, மது அருந்துவது, சூதாடுவது, புகை பிடிப்பது, புறம் பேசுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும் என்றெல்லாம் பட்டியலிடுகிறார்கள்.

இதில் ஒன்றை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. ஒழுக்கமாக இருப்பது, கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பது என்பதெல்லாம் நல்ல அம்சங்கள்தாம். அதே நேரத்தில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் கால கட்டத்தில்தான் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டுமா? மற்ற நேரங்களில் கெட்ட பழக்கங்களில் ஈடுபடலாமா?

பக்தி என்று சொன்னால் அது ஒழுக்கத்தை நிரந்தரமாகக் கொடுத்தால் அதைப் பற்றி பரிசீலிக்கலாம். அப்படி இல்லாமல் விரதம் இருக்கும் காலகட்டத்தில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லுவது ஏற்கத் தக்கதுதானா? பொதுவாக அய்யப்பப் பக்தர்கள் பற்றிச் சொல்லப் பட்டாலும், அய்யப்பப் பக்தர்கள் போதைப் பொருள் கடத்துவது உட்பட பல குற்றங்களில் கைது செய்யப் பட்டுள்ளனரே! குடிபோதையில் உருண்டு கிடந்த அய்யப்பப் பக்தனை கரூர் திராவிடர் கழகத் தோழர்கள் அல்லவா அவரைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் உள்ள பரிதாபம் என்னவென்றால் குருசாமிகள் ஆங்காங்கே ஜூனியர் பக்தர்களை உருவாக்கி, அவர்களின் செலவில் சபரிமலை பயணத்தை மேற்கொள்கின்றனர். விரதம் இருந்து, இருமுடி தரித்து அய்யப்பன் கோவிலுக்குச் சென்றால் நல்லது நடக்கும் என்று உண்மையில் நம்பிச் செல்லும் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை திராவிடர் கழகத்தவர்களும், பகுத்தறிவாளர்களும் முடுக்கி விடுவதன் மூலம்தான் பரிதாபத்துக்குரிய இம் மக்களை மீட்க முடியும்.

மக்கள் நலன் கருதி பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்!

---------------------------- “விடுதலை” தலையங்கம் 21-11-2011

0 comments: