Search This Blog

22.11.11

வானவியல் என்பது வேறு!ஜோதிடம் என்பது வேறு!-பல்கலைக் கழகத்தில் சோதிடமா?


பல்கலைக் கழகத்தில் சோதிடமா?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பற்றிய துறை தொடங்கப்படுகிறதாம். இதில் பட்டயப் படிப்பு, இளங்கலைப் படிப்பு, முதுகலைப் படிப்புப் போன்றவை இடம் பெறுமாம்!

இதைவிட ஒரு கேலிக் கூத்து உலகில் இருக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சாசனம் நாட்டு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது. (நான்காம் பாகம் A - அடிப்படைக் கடமைகள் 51A(h).

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் மாறான சோதிடத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போதிக்கிறது என்றால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வானவியல் (Astronomy) என்பது வேறு, ஜோதிடம் ((Astrology) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. மனிதன் தன்னைச் சுற்றி நிகழ்ந்த இயற்கையின் செயல்பாடுகள் அறிந்திராத கால கட்டத்தில், அச்சத்தின் காரணமாக மனதில் பட்டதைக் கிறுக்கி வைத்த காலம் ஒன்றுண்டு. அந்தக் கால கட்டத்தில் அவ்வளவு அறிவுதான்! அதனை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புவது என்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

முதற்கேள்வி சோதிடத்தில் பூமி என்பது நிலையானதாகும். அதைச் சுற்றியே கோள்கள் நகர்வதாகவும் கூறப்பட்டுள்ளதே. இதனை அறிவியல் ஏற்றுக் கொள்கிறதா? சோதிடத்தில் நவக்கிரகங்கள் என்று ஒன்பது கோள்களைப்பற்றிச் சொல்லப்படுகிறதே - அதில் இடம் பெற்றுள்ள சூரியன் என்பது நட்சத்திரம் அல்லவா? நட்சத்திரம் எப்படி கோள் ஆக முடியும்? கோள்களில் மிக முக்கியமானதான பூமிக்கு நவக்கிரகங்களில் இடம் இல்லையே - ஏன்? பூமியின் துணைக்கிரகமான சந்திரன் நவக்கிரகத்தில் முக்கிய இடம் பெற்றதை இன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? நவக்கிரகங்களில் ராகு, கேது என்று இரண்டு இடம் பெற்றுள்ளனவே - இப்படி ஏதாவது கோள்கள் உண்மையில் உண்டா? ராகு, கேது என்பவை இரண்டு பாம்புகள் என்றும் அவை சந்திரனை விழுங்குவதால் கிரகணம் ஏற்படுவ தாகச் சொல்லப்படுகிறதே - வாயால் சிரிக்கக் கூடிய தகுதி உடையது தானா?

1781ஆம் ஆண்டில் ஹெர்சன் கண்டுபிடித்த யுரேனஸ், 1841இல் லெவரியல் கண்டுபிடித்த நெஃப்டியூன் - இவைகளுக்கு ஜாதகத்தில் இடம் உண்டா? 1930இல் டோம்போ என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ என்ற கிரகம், இப்பொழுது நவக்கிரகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. (கோள் என்பதற்குரிய முழுத் தகுதி அதற்கு இல்லை என்று உறுதி செய்துள்ளனர்). ஜோதிடத்தில் இவ்வளவு முரண்பாடுகளும், அறியாமையும் கொழுந்து விட்டு எரிய, அதை ஒரு பாடமாக ஒரு பல்கலைக் கழகம் வைப்பது கல்வியையே கொச்சைப்படுத்துவதாகும்.

விஞ்ஞானியான அப்துல்கலாமிடம் அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் (பி.ஜே.பி.) தொடர்புகொண்டு கேட்டார்.

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் தாங்கள் எந்தத் தேதியில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றீர்கள்? பதில்: நீங்களும், மக்களும் எப்பொழுது நினைக்கிறீர்களோ, அதுவே சரியான தேதியாகும். கேள்வி: நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதா? பதில்: பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு - பகல் ஏற்படுகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால், ஓர் ஆண்டு மலர்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வானவியல் தொடர்பானது. சோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே! என்று ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நெற்றியடி பதில் அளித்தாரே!

அப்துல்கலாம் இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி அல்லவா! அதற்காகத்தானே குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆன்மீகவாதியான ஆச்சாரியார் (ராஜாஜி)கூட சோதிடர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தெரியுமா? காந்தியார் 125 ஆண்டு காலம் வாழ்வார் என்று பிரபல திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பவர் பாரத மாதா இதழில் (15.8.1947) எழுதி இருந்தாரே - அதன்படி காந்தியார் வாழ்ந்தாரா? தந்தை பெரியாருக்கு அவர் வீட்டார் ஜாதகம் எழுதி வைத்திருந்தனர். அதில் அவரின் ஆயுள் காலம் 67 என்று குறிக்கப் பெற்று இருந்தது. ஆனால் பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்து காட்டினாரே!

உண்மைகள் இவ்வாறு இருக்க, பொய்யான ஒன்றை மூடநம்பிக்கையின் குழந்தையான சோதிடத்தை பல்கலைக் கழகத்தில் வைப்பது குறித்து மறுபரிசீலனை அவசியம் - அவசியத்திலும் அவசியமாகும்.
-------------------"விடுதலை” தலையங்கம் 22-11-2011

0 comments: