Search This Blog

16.11.11

மற்ற மதங்களில் மூடநம்பிக்கை இல்லையா? பெரியார் பதில்


சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம்

எனக்கு முன் பேசிய மூன்று கனவான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல ஒரு தொண்டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக்கின்றது என்று சொன்னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணாசிரம தர்மமும் ஒழிந்தாலல்லது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காக தனியாய் பிரசாரம் செய்கின்றேன்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்றார். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரிடம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணாசிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வதோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் இதைக் கேட்ட பிறகு அவரை ‘மகாத்மா’ என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான். ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலக்ஷியமாய் பேசினதற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்கு பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன். யார் என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலையில்லை. அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்கு தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டு மென்பதையும் அதற்கு விரோதமாய் உள்ள மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்தி கொண்டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த கூட்டத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும் என்றும் சொல்லிவிட்டு ஸ்ரீமான் திருநாராயண அய்யங்கார் பேசியதற்கும் மற்றதற்கும் பொதுவாக நீண்ட பதில் உரைத்ததாவது:- ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து “நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே இது சரியா” என்றார்.

உடனே ஸ்ரீமான் நாயக்கர், “ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகின்றேன்” என்று மேஜை மீதிருந்த கைத் தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிரூபர்) “அந்த கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது.”

நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கும் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ - எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்கும் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் “இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவது தானே” என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத் தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்பதானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண்டாமா என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்.

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே. உங்களுக்கு லக்ஷ லக்ஷமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்க கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சுவல்ப வரும்படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்கு சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்த தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்த பிரசார செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தைதான் படிக்கின்றது.

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும் கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது:- இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம் தான். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பிரசாரங்கள் ஏற்படுகின் றதோ அவ்வளவுக்கவ்வளவு எனது வேலை சுலபமாகும். எனது எண்ண மும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலை கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள் களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. “ராமராஜ்ய”மாகவோ “பாண்டிய ராஜ்ய” மாகவோ இருந்தால் நான் இதுவரை ‘ஒரே’ பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய்விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாக பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் ஒயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்கு பிரவேசித்திருக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாக பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும் தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல், வெறும் கல். நமது தேசீய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசீயமும் எனக்குத் தெரியும் அதை வெளியிடும் தொண்டு தான் இது” என்று பேசி உட்கார்ந்தார்.

உடனே அக்கிராசனர் இனி யாராவது பேச வேண்டுமா என்றும் இதற்கு யாராவது பதில் சொல்லுகிறீர்களா என்றும் கேட்டார். 2 நிமிஷம் நிஸ்சப்தமாய் இருந்தது. ஒருவரும் பேசவில்லை என்று சொல்லிவிட்டு ஒரு கனவான் ராயல் கமிஷன் பகிஷ்கார விஷயமாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதைச் சிலர் பகிஷ்காரத்திற்காக இக்கூட்டம் கூட்டவில்லை என்று ஆட்சேபித்தார்கள். ஸ்ரீமான் நாயக்கர் எழுந்து அதைப்பற்றி கவலையில்லை என்றும் தான் அதையும் எதிர்ப்பதாகவும் சொல்லி அதைப் பற்றி சில விஷயம் பேச அக்கிராசனரை அனுமதி கேட்டார். மணி சுமார் பத்தாய் விட்டதால் சீக்கிரம் சொல்லி முடிக்கும்படி சொன்னார். ஸ்ரீமான் நாயக்கர் வெகுவேகமாக அரசியல் புரட்டையும் பகிஷ்காரப் புரட்டையும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் காப்பிக்கடை திரு.நாராயணய்யங்கார் பேசி ஓட்டுக்குவிட்டார். சிலரே கை தூக்கியதால் தோல்வி உற்றதாக அக்கிராசனர் சொன்னார். மறு படியும் ஓட்டு எடுக்க கைதூக்கச் சொல்லும்படி அக்கிராசனரை அய்யங்கார் வேண்டிக் கொண்டார். அக்கிராசனர் மறுபடியும் தீர்மானத்திற்கு சாதகமானவர்களை கை தூக்கும்படி சொன்னார். வெகு சிலரே கைதூக்கினார்கள். பாதகமானவர்களை தூக்கும்படி சொல்லாமலும் முடிவு சொல்லாமலும் அக்கிராசனர் முடிவுரை துவக்கி கூட்டத்தை முடித்து விட்டார். பிறகு வந்தனோபசாரம் கூறப்பட்ட சுமார் 6 மணி முதல் 10 மணிக்கு மேலாக அதாவது 4.30 மணி நேரம் மக்கள் சுமார் 1000 பேருக்கு மேல் அசையாமல் பொறுமையுடன் உட்கார்ந்து கேட்டுகொண்டு இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இம்மாதிரி கூட்டம் பொறுமையாக 4.30 மணி நேரம் உட்கார்ந்து கேட்ட தில்லை என்று சொல்லலாம். இனியும் 2 மணி நேரம் பேசினாலும் இருக்க ஜனங்களுக்கும் பிரியம் தானே யொழிய யாரும் நேரத்தை கவனிக்கவில்லை. தவிர பேசியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவருக்கொருவர் கண்ணியமாயும், யோக்கியமாயும், பேசிக் கொண்டார்களேயொழிய நியாயத் தப்பாய் யாரும் பேசிக் கொள்ளவில்லை. கூட்டம் முடிந்து திரும்பிப் போகும்போது மாத்திரம் வழியில் பார்ப்பனர்களைப் பற்றியும் அவர்கள் சூழ்ச்சியைப் பற்றியும் அவர்கள் கையாளாய் இருக்கும் பார்ப்பனர் அல்லாத ஆட்களைப் பற்றியும் பத்திரிகைகளைப் பற்றியும் மிக கேவலமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் வரவால் சிதம்பரம் ஒருவித புத்துயிர் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.

---------------26.02.1928 அன்று சிதம்பரத்தில் தந்தைபெரியார் சொற்பொழிவு. "குடி அரசு" - 04.03.1928

0 comments: