பகுத்தறிவு சங்கம்
பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப் பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம் செலுத்துவதில்லை. நான்கு வருஷங்களுக்கு முன்வரை எனது முழுக் கவனமும் அதிலேயே இருந்து வந்தது உண்மைதான். பல நூற்றுக் கணக்கான சங்கங்களும் மாதந்தோறும், வாரந்தோறும் மாநாடுகளும் இருந்தும் நடந்தும் வந்தன. பகுத்தறிவு உணர்ச்சி ஆசை மேலீட்டால் அய்ரோப்பா கண்டம் பூராவும் ஒரு வருஷ காலம் சுற்றி பல விஷயங்கள் அறிந்து வந்தேன்.
அதன்பிறகு அவ்வியக்கத்தின் வளர்ச்சியானது சர்க்காராலேயே அடக்க வேண்டிய அளவுக்கு பல கொள்கைகளுடன் வேகமாக வேலை செய்ய வேண்டியதாய் இருந்தது.
அப்படிப்பட்ட இயக்கமும், உணர்ச்சியும் நான் அரசியல் துறையில் இறங்கி வேலை செய்ய வேண்டி இருந்ததாலும் இம்மாகாண பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற இயக்கமாகிய ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பன சூழ்ச்சியாலும், பாமர மக்கள் தொடர்பைப் போதுமானபடி கொண்டிராததாலும், சற்று தளர்வடையும்படி ஆகி விட்டதால் அதில் சிறிது கவனம் செலுத்த வேண்டி வந்ததாலும் பகுத்தறிவு இயக்கம் மிக்க தளர்வுற்று விட்டது என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதிலும் நான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவனாக ஆன பின்பு இன்னும் அதிகமான கஷ்டம் ஏற்பட்டு விட்டது.
ஏனெனில், இந்தத் தலைமைப் பதவியால் எதிரிகள் தொல்லையும், பொறாமையாளர் முட்டுக்கட்டை யும் எனது உணர்ச்சி ஊக்கம் பூராவையும் கவர்ந்து கொள்ளுகிறது. இப்படிப்பட்ட சமயத்தில் நீங்கள் ஒரு சங்கம் இங்கு ஏற்படுத்தி இவ்வளவு மேன்மை யாக நடத்துவது எனக்குப் பழைய உற்சாகத்தை ஊட்டக்கூடிய உணர்ச்சியைத் தருகிறது. எனது தொல்லைகள் கூடிய சீக்கிரம் ஒழிந்து எனது முழுக் கவனத்தையும் பழையபடி பகுத்தறிவு இயக்கத்திற்குச் செலுத்தும் படியான காலம் வெகு சீக்கிரத்தில் வருமென்றே நினைக்கிறேன். இப்போது நான் விழலுக்கு நீர்ப் பாய்ச்சுவதாகவே கருதுகிறேன். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியமான காரியம். அது இல்லாததனாலேயே நம்மில் பலர் இன்னமும் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள். பகுத்தறிவு இருப்பவனுக்குத்தான் ஒழுக்கம், மானம் முதலிய அருங்குணங்கள் ஏற்படும். அதில்லாதவன் எப்படியாவது வயிறு வளர்த்தால் போதும் என்றுதான் கருதுவார்கள்.
இன்று உலகத்திலுள்ள மற்ற தேசங்கள் பகுத்தறிவின் பயனாய் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எவ்வளவு அதிசயம், அற்புதங்களைக் கண்டுபிடித்திருக்கிறது; வாழ்க்கைத் துறையில் எவ்வளவு திருப்தியான முறையில் முன்னேறி வருகிறது என்பதை உலகத்தைத் திரும்பிப் பார்ப்பானே யானால் எவனும் உணருவான். நாம் சாணிக்கும், மூத்திரத்துக்கும் மோட் சத்தைச் சம்பந்தப்படுத்துவதிலும் சாமிக்கும், அம்மனுக்கும் கல்யாணம் செய்வதிலும் நமது ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.
உமது சீர்திருத்த வண்டியை பழைய காலத்துக்குத் திருப்பி விட்டோம். மற்ற நாட்டார் புதிய காலத்துக்குத் திருப்பி விட்டார்கள். அதை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதற்கு ஆகவே பகுத்தறிவு இயக்கம் ஏற்பட்டதாகும்.
தனிப்பட்டவர்கள் சுயநலத்தை விட்டும், பொது ஜனங்கள் என்ன சொல்லுவார்கள் என்கின்ற பயமில்லாமலும் உங்களுடைய ஆராய்ச்சிக்குத் தோன்றும் அறிவுப்படி நடந்தீர்களேயானால் நீங்கள் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள். நாட்டுக்கும், மனித சமூகத்திற்கும் அருந் தொண்டாற்றினவர்களாவீர்கள் .
-----------------23.10.1940 அன்று கரூரில் பகுத்தறிவு சங்க பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை குடிஅரசு 29.10.1940
0 comments:
Post a Comment