Search This Blog

31.10.11

சூரசம்ஹாரமாம்! இது நியாயமா - சரியா? சிந்திப்பீர்!


சூரசம்ஹாரமாம்!

இன்று சூரசம்ஹாரமாம். சூரபத்மனை முருகன் கொன்ற நாளாம். கடவுள் ஒருவனைக் கொலை செய்கிறது என்கிற தீய நடவடிக்கைகள் எல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம்.
நாகப்பட்டினத்தையடுத்த சிக்கலில் உள்ள சிங்கார வடிவேலனிடம் (முருகனிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரிலே சூரபத்மனை முருகன் வதம் செய்தானாம். கந்தசஷ்டி என்று சொல்லி முருகனுக்காக ஆறு நாள் விரதம் இருந்து ஆறாவது நாள் முருகன் இருக்கும் கோயில்களில் அசுரனை முருகன் வேல் கொண்டு தாக்கி அழிப்பதுதான் சூரசம்ஹாரம் என்று சொல்லப் படுகிறது.

இதற்காகக் கூறப்படும் கதைகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை துக்கடாக்களாக இருக்கும்.

சிவனின் மாமனாராகிய தட்சன் யாகம் ஒன்றை நடத்தினானாம். தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும் யாகத்திற்காக அழைக்க வில்லையாம். ஆனால் மற்ற மற்ற கடவுள்களையும், தேவர்களையும் அழைத்துத் தடபுடலாக யாகத்தை நடத்தினானாம். கோபம் கொண்ட சிவனும், பார்வதியும் அந்த யாகத்தை அழித்து விட்டார்களாம். (அவமதிப்பு - கோபம் - அழிப்பு - இவைதான் கடவுள் சங்கதிகளா? இவற்றில் உயர்ந்த ஒழுக்கம், முன்மாதிரியான குணங்கள் ஏதாவது இருக்கின்றனவா?) மகளாகிய பார்வதி ருத்ரகாளியாகவும், மருமகனாகிய சிவன் வீரபத்திரனாகவும் உரு கொண்டுதான் அந்த யாகத்தை அழித்தார்களாம். அதோடு விடவில்லை. மாமனாருக்கே சாபம் கொடுத்தான் சிவன். நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக - மறுஜென்மத்தில் உனக்கு அசுர குணங்கள் ஏற்படுவதாகுக. உன்னை அடக்க என்னில் பிறந்த ஒரு சக்தி வரும். என் மகனாகிய சுப்பிரமணியன்தான் அந்த சக்தி - அவன் உன்னை வதம் செய்வான் என்று சிவன் சாபம் கொடுத்தானாம். சூரனின் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை தனது வாகனமான மயிலாகவும், இன்னொரு பகுதியினை சேவலாக்கி தனது கொடியாகவும் ஆக்கிக் கொண்டான் முருகன்.

என்று புராணங்களையும், தல புராணங்களையும் எந்தக் காலத்திலோ அறிவுக்குப் பொருந்தாத வகையில் கிறுக்கியவற்றிற்கெல்லாம் கோவில் வடிவம் கொடுத்து இப்படி ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் என்றும், தேர் என்றும், திருவிழா என்றும், காவடி என்றும் முழுக்கு என்றும் மக்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் உழைத்துச் சேர்த்த பொருளையும், பயனுள்ள பொழுதையும், உழைப் பையும் சுரண்டி மக்களின் சிந்தனா சக்தியைச் சிதறடித்து ஒன்றுக்கும் உதவாத மவுடிகளாக மாற்றுவதற்குச் செய்யப்பட்டவை தான் இந்த ஏற்பாடுகள்.

இந்தக் கதைகளை ஊசி முனை அளவுக்காவது நம்பும்படியாக ஏதாவது இருக்கிறதா? இவற்றை நம்புவதால், சூரசம்ஹாரத்தைப் பார்ப்பதற்காக செலவு செய்வதால் நமக்கு ஏற்படப் போகும் பலாபலன்கள் என்ன? ஏற்கெனவே பலன்கள் ஏற்பட்டுள்ளனவா? இப்பொழுதாவது ஏற்பட்டு வருகிறதா? பக்தர்களின் வறுமை ஒழிந்ததா? நோய் - நொடிகள் அகன்றனவா? நிம்மதியான வாழ்க்கை தான் அவர்களுக்குள் கிடைத்ததா? குறைந்தபட்சம் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் இவற்றிற்காவது ஏதாவது பயன் உண்டா? கந்தபுராணத்திற்கு விஞ்சிய புராணம் வேறு எந்தப் புராணத்திலும் கிடையாது என்று பக்தர்களே கூறும் அளவுக்குத்தானே அதன் யோக்கியதை அமைந்திருக்கிறது. அதுவும் கந்தன் என்று கூறப்படும் அந்தச் சுப்பிரமணியனின் பிறப்பு ஆபாசக் கடலாக அல்லவா இருக்கிறது? நூறு தேவவருட காலம் சிவன் தன் மனைவியைப் புணர்ந்தான் என்று சொல்லுவ தெல்லாம் எத்தகைய அருவருப்பு! ஒரு தேவ வருடம் என்றால் 365 ஆண்டுகள்; நூறு தேவ வருடங்கள் என்றால் 36500 ஆண்டுகள் மனைவியைப் புணர்ந்தான் என்பது எவ்வளவு காட்டு விலங் காண்டித்தனம்! பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பதால் இத்தகைய ஆபாசங்களையும், அருவருப்புகளையும் கண்ணில் ஒத்திக் கொள்கிறார்களே - இது நியாயமா - சரியா? சிந்திப்பீர்!

-------------------"விடுதலை” தலையங்கம் 31-10-2011


0 comments: