Search This Blog

24.10.10

திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்கள்


அலகாபாத் தீர்ப்பு அறிவார்ந்த ஒன்றல்ல; பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீதான தண்டனையை உறுதிபடுத்துக! வெளிநாட்டுத் தமிழர்களுக்காக மாநிலத்தில் தனி அமைச்சகம் தேவை! திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு; வைக்கத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு! திருப்பத்தூர் திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்கள்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசில் தனி அமைச்சகம் தேவை என்ற தீர் மானம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருப்பத் தூரில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

23.10.2010 சனியன்று காலை திருப்பத்தூர் ஜி.பி மகாலில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராசகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம் (3 ஆம் பக்கம் காண்க)

தீர்மானம் 2(அ):

அயோத்திப்பிரச்சினையும்-அலகாபாத் தீர்ப்பும்

450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,

அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறு பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடிய தாகும்.

சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான நீதிமன்றம் என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன் படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!

யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ் சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வரலாற்றில் பின்னோக்கிப் பயணத்தைத் தொடங்கி னால், அது வேண்டத் தகாத புதிய தலைவலிகளை ஏற்படுத்தும் என்பதையும், குறிப்பாக ஆயிரக்கணக் கான புத்த விகார்கள் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டுள்ள நிலையைப் பரிசீலித்து இந்துக் கோயில்களை பழையபடி புத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையும், போராட்டமும் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 2 (ஆ):
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை

450 ஆண்டு வரலாறு படைத்த முஸ்லிம் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கடந்த 18 ஆண்டுகாலமாக எவ்விதத் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மாகத் திரிந்து வருகிறார்கள். இவர்களில் பலரும் மத்திய - மாநில அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படும் நிலையில், இதில் மேலும் காலம் கடத்தாமல் உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனைக்கு உட்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுவதன்மூலம் நீதி, நிருவாகம் இவற்றின்மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையை இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும், வன்முறைக்கு ஊக்கம் தருவதற்கு இந்தக் காலதாமதம் பெரிதும் உதவிடும் அபாயத்தையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 3:
திருச்சிராப்பள்ளியில் உலக நாத்திகர்கள் மாநாடு

2011 ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும் திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து உலக நாத்திகர்கள் மாநாட்டினை பல வகைகளிலும் சிறப்பான வகைகளில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன் கூடிய பேரணி உள்ளிட்ட சகல அம்சங்களும் நிறைந்து காணப்படும் வகையில் வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கழகத் தோழர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

உலகிலேயே நாத்திக நெறியைப் பின்பற்றும் மக்கள் இயக்கம் ஒன்றை நிறுவி, பிரச்சாரம் செய்து வெற்றி கண்ட தந்தை பெரியார் மண்ணில் நடைபெறுவதில் நாத்திகர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு பெரு வெற்றியடையவும், மற்ற வெளிநாட்டு - வெளி மாநிலப் பிரதிநிதிகள் வியப்படையும் வண்ணமும் ஒத்துழைப்புத் தருவது அவசியம் என்பதையும் இப்பொதுக் குழு வற்புறுத்துகிறது!

நாத்திக இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தந்தை பெரியார் உருவாக்கிய பாங்கை உலகம் அறிந்துகொள்ளச் செய்திட கிடைத்த அரிய வாய்ப்பாக இதனைக் கருதி ஒத்துழைக்குமாறு கழகக் குடும்பத்தினரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 4:
வைக்கத்தில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு விழா

இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப்பெரிய திருப்பம் தரும் வகையில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை வைக்கத்தில் நடத்தி வெற்றி கண்டவர். வைக்கம் வீரர் என்று வரலாற்றில் போற்றப்படும் தலைவர் தந்தை பெரியார் ஆவார்கள்.

தந்தை பெரியார் ஆணையை ஏற்று ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஜாதி பாதுகாப்புப் பிரிவைக் கொளுத்தி, மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை திராவிடர் கழகத் தோழர்கள் சிறைத் தண்டனை ஏற்ற போராட்டம் நடத்தப்பட்ட நவம்பர் 26 (1957) ஒரு வரலாற்றுக் குறிப்பு என்கிற கண் ணோட்டத்தில், வரும் நவம்பர் 26 அன்று வைக்கத்தில் முழுநாள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடாக - பல்வேறு சிறப்பான அம்சங்களை உள்ளடக்கிய விழாவாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:
நீதிக்கட்சி 95 ஆம் ஆண்டு விழா நடத்துதல்

பார்ப்பனர் அல்லாதார் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஏற்றம் பெறுவதற்குக் காரணமான நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தோன்றி (1916 நவம்பர் 20) 94 ஆண்டுகள் கடந்து 95 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நாளில் (2010 நவம்பர் 20) வரலாற்றுச் சிறப்புக் கருதி அறிவார்ந்த முறையில் சென்னை பெரியார் திடலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துடன் இணைந்து திராவிடர் கழகம் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம்

அரசு பயங்கரவாதமாகப் பெரும் போர் நடத்தி, ஈழத் தமிழின மக்களை முற்றாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டு, பல லட்ச ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லற்படும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக் குரியதாகும்.

முள்வேலி முகாமுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்கும் தமிழ் மக்கள் பல்லாயிரவர் ஆவர். முகாம்களிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பபடும் ஈழத் தமிழர்களும் போதிய வாழ்வு ஆதாரமின்றி அல்லற்படும் அவல நிலையிலேயே உள்ளனர்.

வாலிப வயதில் உள்ள ஈழத் தமிழர்கள் கடத்தப்பட்ட நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாகிவிட்டது. பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் இன்னொரு பக்கம் அரசு உதவியுடன் நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த அடிப்படைப் பிரச்சினைகளின் ஆணிவேரை நோக்காமல், மேல் பூச்சாக இலங்கை அரசு புனருத்தாரண பணிகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த நிலையிலும், மத்திய அரசு சம்பிரதாய ரீதியாக இலங்கை அரசுக்கு வார்த்தையளவில் வேண்டு கோள் வைப்பது - உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், மனிதநேயர்கள் மத்தியிலும் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை இப்பொதுக்குழுப் பட்டாங்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசு நேரிடையாக உள்ளார்ந்த நிலையில் இதில் தலையிட்டு, எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை இவற்றிற்கு உத்தரவாதம் உறுதியாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை அழுத்தமாக மேற் கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 7 (அ):
தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் - தூதர்களாக தமிழர்கள் நியமனம் - தனி அமைச்சகம் உருவாக்க வேண்டுகோள்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடு களுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்கவேண் டும் என்று மத்திய அரசையும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச்சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு பலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண முயல்வது அதன் பணியாக அமைதல் சிறப்பாகும். பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் இப்படி ஒரு தனி அமைப்பு உள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 7 (ஆ):
கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

தனியார் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பல்கிப் பெருகிவரும் நிலையில், இந்நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரு வதற்குத் தனி சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இதுகுறித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தவேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தேவையற்ற சாக்குப் போக்குகளைக் கூறிக் காலம் கடத்தக் கூடாது என்றும், நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி அடுத்த ஆண்டுக்குள் அதனைத் துல்லியமாக நடைமுறைப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7 (இ):
பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவுக்கு சட்ட அங்கீகாரம் கோருதல்

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்குச் சட்ட அங்கீ காரம் அளிக்கவேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டோ ருக்கு நாடாளுமன்றக் குழு அமைப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை இப்பொழுது சுட்டிக்காட்டி, பிரதமர் அளித்த உறுதிமொழியை உடனடியாகச் செயல்படுத்து மாறும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறது.

தீர்மானம் எண் 8 :
மத்திய தேர்வாணையத் தேர்வுகளை தமிழில் எழுதிட வாய்ப்பளிக்கக் கோருதல்

மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழில் எழுதிட வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில், அதே தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் (ளுவயகக ளுநடநஉவடி) பட்டதாரிகள் அல் லாதவர்கள் மட்டும் தமிழில் தேர்வு எழுதலாம்; அதே நேரத்தில், பட்டதாரிகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் படுவது புரியாத புதிராக உள்ளது. எனவே, பட்டதாரிகளும் தமிழில் அத்தகைய தேர்வுகளை எழுதிடும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறு மத்திய தேர்வாணையத்தையும், பணியாளர் அமைச்சகத்தையும் (ஆளைவநச கடிச ஞநசளடிநேட) இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:
மாணவர்களிடையே பேச்சுப் போட்டி

மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பேச்சுப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு முதல் போதிய அவகாசம் தந்து, முன்கூட்டியே திட்டமிட்டு கிராமம், ஒன்றியம், மாவட்ட அளவில் போட்டிகளைச் சிறப்பாக நடத்தி மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் சிந்தனைகள் குறித்த புத்தெழுச்சியை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 10:
இளைஞர்கள் இயக்கம் உருவாக்கம்

மாணவர்கள் மத்தியில் தனி நபர் ஒழுக்கம், பொது ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவை நாளும் குலைந்துவரும் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஜாதி, மதம், மது, பதவிப் போதைகள் - வெறிகள், தீவிரவாதம், கிரிக்கெட் மோகம், அறிவியல் சாதனங்களான அலைப்பேசிகள், இணைய தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி இளமைப் பருவத்தைப் பாழாக்கிக் கொள்ளும் அவலம் தலைவிரித்தாடுகிறது. சின்னத் திரைகளும், சினிமாவும், ஊடகங்களும், விளம்பரங்களும் இவற்றிற்கு ஊட்டச் சத்தை அளித்துக்கொண்டு இருக்கின்றன.

நுகர்வுக் கலாச்சாரம் என்பது மிகப்பெரிய அளவில் தனி வாழ்வையும், குடும்ப அமைப்பையும், பொதுவாகச் சமூகச் சீர்மையையும் நாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

16.4.2010 அன்று சென்னையில் நடைபெற்று திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஊர்தோறும் இளை ஞர்களைக் காப்பாற்றும் இயக்கம் (ளுயஎந டிரச லடிரவாள அடிஎநஅநவே) ஒன்றினை உருவாக்கும் பணியினை உடனடி யாகத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தை விரிவாக்கி தமிழர்களின் வீர விளையாட்டுகளான சடுகுடு - உடற் பயிற்சி தொடர்பான சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை ஊக்குவிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 11:
பெண்களை இழிவுபடுத்தும் தொலைக்காட்சித் தொடர்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

தொலைக்காட்சிகளில் சீரியல் என்ற பெயரில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அடிபடுவது, உதைபடுவது, சதா அழுவது என்கிற வகையிலும், குடும்பங்களைக் குலைக்கும் கொடூரர்கள் போலவும் சித்தரிப்பது வாடிக்கை யாகிவிட்டது. பெண்ணுரிமை, ஆளுமை என்பதற்கும், பெண்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையைப் பெண்கள் மத்தியில் உருவாக்கும் இந்த நிலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், பொதுவாக தொலைக்காட்சிகளின் போக்குகள் கலாச்சார சீரழிவை ஊக்கப்படும் நிலையில் இருப்பதால், ஒரு குழுவை ஏற்படுத்தி, அதில் பெண்கள், இளைஞர்கள், பகுத்தறிவு வாதிகள் உள்ளிட்டோர் இடம்பெறும் ஒரு ஏற்பாட்டை உருவாக்கவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பிரச்சாரம்

2006 ஆம் ஆண்டில் அய்ந்தாம் முறையாக ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு சமூகச் சீர்திருத்தம், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், அரசுப் பணியாளர்கள் பாதுகாப்பு, அடித்தட்டு மக்களுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல துறைகளிலும் சாதனை பொறித்து வருவதால், இந்தத் திராவிடர் ஆட்சியே மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கும் தீவிர பிரச்சாரத்தை 2011 பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை மேற்கொள்வது என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் எண் 13:
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்திய குவைத் பெரியார் பற்றாளர்களுக்குப் பாராட்டு

தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைப் பெரு விழாவாக, சிறப்பாக நடத்திய குவைத் பெரியார் நூலகப் பொறுப்பாளர்களையும், கழகத் தோழர் குவைத் செல்லபெருமாள் மற்றும் பெரியார் பற்றாளர்களையும் இப்பொதுக்குழு பாராட்டி மகிழ் கிறது. அதேபோல, துபாயில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு விழா என்ற பெயரில் பெரியார் பற்றாளர் களையும், பகுத்தறிவாளர்களையும் ஒருங்கிணைத்துப் பகுத்தறிவு விழாவாக நடத்திய துபாய் வாழ் பெரியார் பற்றாளர்களுக்கும் இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

2010 ஆம் ஆண்டுக்கான - சமூகநீதிக்கான வீரமணி விருதினை குவைத் பெரியார் பெருந் தொண்டர் செல்லபெருமாள் அவர்களுக்கு அளிக்கும் விழாவை ஏற்பாடு செய்தும் - குவைத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் பெரியார் பன்னாட்டு அமைப்பினை உருவாக்கியும், தந்தை பெரியார் கொள்கைகளை பல வகைகளிலும் பரப்பி வரும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இப்பொதுக்குழு நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 14:
மலேசிய திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்தும் - பாராட்டும்!

மலேசிய திராவிடர் கழகத்திற்குப் புதிய பொறுப் பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசியத் தலைவர் பி.எஸ். மணியம், தேசியப் பொதுச்செயலாளர் இரா. பாலகிருஷ்ணன், தேசிய அமைப்புச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இப்பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இடையில் ஏற்பட்ட தொய்வினை நீக்கி, சிறப்பாகச் செயல்படவேண்டும் என்ற வேட்கையினையும் இப் பொதுக்குழு வெளிப்படுத்திக் கொள்கிறது.

தீர்மானம் எண் 15:
தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் நெருக்கடி

இந்திய நாட்டின் பருத்தி, பஞ்சு நூல் உற்பத்தி 45 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. அதன் தொடர்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னாலைகள் ஆயத்த ஆடைகள், ஆடைகள் ஏற்றுமதி ஆகிய தொழில்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை கொடுக்கும் துறையாக ஜவுளித் துறை உள்ளது. கடந்த 6 மாத காலமாக ஒட்டுமொத்த ஜவுளித் துறை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. காரணம், ஒரு கண்டி பஞ்சின் விலை ரூ.28,000/-மாக இருந்தது. தற்சமயம் ரூபாய் 43,000/- என உயர்ந்துவிட்டது. நமது நாட்டின் பஞ்சு உற்பத்தி 335 லட்சம் பேல்கள் என்றும், நாட்டின் தேவை 280 லட்சம் பேல்கள்தான் என பஞ்சின் பருவ காலத்திற்கு முன்பே ஊகமாக கணக்கிட்டு அதிகமாக உள்ள 55 லட்சம் பேல்களை ஏற்றுமதிக்கு அனுமதிப்பதென்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.

இதனால் ஜவுளி துறைக்கு சம்மந்தமில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்குப் பஞ்சை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு, செயற்கையான விலை உயர்வை உண்டாக்கி உள் ளார்கள். இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கோ, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. தற்சமயம் நிலவும் ஜவுளி துறையின் பெரும் நெருக்கடிக்கு தீர்வாக நடுவண் அரசு பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்யவேண்டும். உள்ளபடியே உள்நாட்டு தேவைக்குமேல் பஞ்சு இருந்தால், வரும் ஜனவரி மாதத்திற்குமேல் மாதா மாதம் அளவை பங்கிட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்கவேண்டும் என்று மத்திய அரசினை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

------------------- "விடுதலை” 23-10-2010

0 comments: