Search This Blog

12.10.10

எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்! - பெரியார்


எனக்கு என்னைப் பற்றி என் காரியங்களைப் பற்றி விளம்பரப்படுத்த முடியவில்லை என்றாலும்கூட என்னுடைய எதிரிகளாலேயே நானும் என்னுடைய கொள்கைகளும் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் உதாரணம் சொல்லுகிறேன். ஒரு முறை திருவண்ணாமலைக்கு என்னுடைய காரில் போய்க் கொண் டிருந்தேன். கார் உளுந்தூர்பேட்டை அருகில் சென்றதும் ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. அதற்காக வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்போது ஒரு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன் என்னிடத்தில் வந்தான். அவன் கிராமத்துப் பையன் நீங்கள் எங்குப் போகிறீர்கள் என்று என்னைக் கேட்டான். நான் திருவண்ணா மலைக்குச் சாமி தரிசனத்திற்காகப் போகிறேன் என்று சொன்னேன். அவன் கேட்டான் உங்களுக்குத்தான் சாமி - கிடையாதே! என்றான். நான் ஏன் என்று கேட்டேன். அவன் நீங்கள் பெரியார்தானே! ஆகவே உங்களுக்குச் சாமி கிடையாதே என்று பதில் சொன்னான். அந்த அளவுக்கு என்னை விளம்பரப்படுத்தியுள்ளனர் எதிரிகள். இன்று பாருங்களேன் -எங்காவது திண்ணையில் இரு பார்ப்பனர்கள் அடித்துக் கொண்டு பேசினாலும் அது எங்களைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும்! இவ்வளவு இருட்ட டிப்புத்தான் என்றாலும் எங்கள் எதிரிகளால் எங்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தை யாராலும் தவிர்க்க முடியாதே _ ஏன்? அந்தச் சரக்கு எங்களிடத்தில்தான் இருக்கிறது. மற்றவன் எவனும் அந்தச் சரக்கை விற்கக்கூட முன்வர மாட்டேன் என்கிறானே? விடுதலையானதிலிருந்து சுமார் 120 நாள் கிட்டத்தட்ட ஆகிறது. இதுவரை சுமார் 150 ஊர்களுக்குப் போய் இருக்கிறேன். சுமார் 200 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஒவ் வொரு ஊரிலும் ரூ.1000 _ 2000 செலவு செய்து ஆடம்பரமான ஊர்வலங்கள் செய்கிறீர்கள்; ஏன் வீண் செலவு செய்கிறீர்கள் என்று நான் கேட்டால், உங்களுக்காக அல்ல; நம்முடைய கொள்கைகளை விளம்பரப்படுத்துவதற்கு இதுதானே நமது வழி என்று எனக்குச் சொல்லுகிறார்கள்.

---------------- மஞ்சை நாயக்கன்பட்டியில் 14.10.1958 அன்று பெரியார் உரையிலிருந்து -"விடுதலை" 19-10-1958

0 comments: