Search This Blog

25.10.10

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும் -2


தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும்; தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் தள்ளி வைக்க வேண்டும்
பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விளக்கவுரை

- தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும், தமிழுக்கும்,கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் தள்ளி வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி பேசினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆதலால்தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற அப்பெரியார்களும், அவர்கள் போன்றோர் கற்றார் என்று உரைக்கின்றேன். தோழர்களே! எனக்கிட்ட கட்டளையும் ஏதேனும் ஒரு சிறுபாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப் பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைக்க வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்லுவது பற்றி நீங்கள் தவறாகக் கருதமாமல், என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்றுமற்றதைத் தள்ளி விடுங்கள்.

என் மீது கோபுமுறாதீர்கள்!

அதற்காக என்மீது கோபமுறாதீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். எவ்வளவு அருமையான முன்னுரை பாருங்கள். 13.1.1936 சென்னை-பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்ட பத்தில் மேலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை.

தமிழும்-மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது. இதுதான் நிலை. (காரணம் என்ன? ஒரு பண்பாட்டுப் படை எடுப்பு மிக வேகமாக உள்ளே நுழைந்து, அந்தப் பண்பாட்டுப் படை எடுப்பு பலவிதமான உருவங்களைப் பெற்று பல்வேறு கால கட்டங் களிலே அதை அழித்து தமிழுக்குத் தனித்தன்மையே கிடையாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூழல்கள் வந்தன.

சமயமென்ற சூளையிலே தமிழ்நாட்டால்...

எனவே அது ஓர் அளவோடு நிறுத்தப்பட வேண்டும். ஓர் இனத்தினுடைய குரல். எனவே ஓர் இனத்தினுடைய குரல் வளையை நெரித்தால் அதற்கப்புறம் அந்த உரிமை வெளிவராது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மிக மிக அழகாகச் சொன்னார். சமயமென்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று ஒரே வார்த்தையில் சொன்னார்.

ஒருவன் தமிழை வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றான். ஒருவன் தமிழ் என்ற செடியை சூளையில் கொண்டு போய் நட்டுவித்தால் வளருமா? வளராது. தந்தை பெரியாருடைய சிந்தனைதான் புரட்சிக் கவிஞருடைய சிந்தனை (கைதட்டல்). தந்தை பெரியாருடைய சிந்தனைதான் அண்ணா அவர்களுடைய சிந்தனை. அதுதான் திராவிட இயக்கம். தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

பெரியாருக்கு என்ன தமிழ் தெரியும்?

பொதுவாக என்ன சொல்லுகிறார்கள்? பெரியாருக்கு தமிழ் என்ன தெரியும்? என்று கேட்கிறார்கள். பெரியார் என்னய்யா எதை எடுத்தாலும் எதிர்த்துச் சொல்லக்கூடியவர். அவர் எல்லாவற்றிற்கும் ஓர் அழிவு வேலைக்காரர் என்று சிலர் நினைப்பார்கள்.

அய்யா மாதிரி சிந்தித்து கருத்து சொன்னவர்கள், தமிழ்ப்புலவர்களே கிடையாது (கைதட்டல்). அய்யா கட்டிலில் சாதாரணமாக உட்கார்ந்திருப்பார். பக்கத்தில் பார்த்தீர்களேயானால் பேரகராதி இருக்கும். அய்யா சும்மா இருக்கும் பொழுது என்ன செய்வார்? புரட்டிக்கொண்டிருப்பார். அகராதியில் ஒவ்வொரு சொல்லையும் அறிந்திருப்பார்.

பெரியார் படிக்காததா?

அபிதான சிந்தாமணி, அதே மாதிரி பழைய நூல்களான இராமாயணம், மகாபாரதம் இவைகளில் எத்தனை பதிப்பு இருக்கிறதோ அத்தனை பதிப்புகளையும் படித்திருப்பார். அவ்வளவும் அவர்கள் வரி, வரியாகப் படித் திருப்பார்.

கடைசி காலத்தில் 95 வயதில்கூட, அய்யா அவர்களுக்கு கண்பார்வை மங்கிப் போன நிலையிலே பொடி எழுத்துகளைக்கூட லென்ஸ் வைத்துக் கொண்டு படித்துக்கொண்டிருப்பார்.

விஞ்ஞானி கிருமியைத் தேடுவது போல....

ஒரு விஞ்ஞானி எப்படி கிருமிகளைத் தேடுவாரோ அந்த மாதிரி தமிழ் இன எதிரி நோய்க் கிருமிகள் எல்லாம் எங்கேயிருக்கிறது என்று பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டிருப்பார். மேலும் அய்யா அவர்கள் சொல்லுவதைப் படிக்கின்றேன்.

உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? (இங்கே அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். அய்யா அவர்கள் எவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார்கள், பாருங்கள். எப்பொழுது? 1936ஆம் ஆண்டில். பட்டென்று வந்து விழுகிறது பாருங்கள். பச்சையப்பன் கல்லூரியில்-அதுவும் எப்படிப்பட்டவர்கள் அய்யா பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்? நமச்சிவாய முதலியார் உட்கார்ந்திருக்கின்றார். இந்தப் பக்கம் திரு.வி.க. தலைமை தாங்குகிறார். அவர்கள் காலத்தில் அவர்களுடைய முன்னிலையில் இதைப் பேசுகிறார். சாதாரண முத்தன், முனியன், என்னை மாதிரி தமிழ் தெரியாதவனை வைத்துக்கொண்டு கூட பேசவில்லை.

நரகர் என்றால் யார்?

அய்யா கேட்டார் பாருங்கள். நரகர் என்றால் யார்? தேவர்கள் என்றால் யார்? விசயத்திற்கு வந்துவிட்டார் பாருங்கள் (பலத்த கைதட்டல்).

மேலும் அய்யா சொல்லுகின்றார்.) இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்கு, தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து (அதில் கூட அய்யா அவர்கள் பார்ப்பான் என்று வெளிப் படையாகச் சொல்லாமல், எல்லோரும் கலந்திருப்பார்கள் என்பதை அறிந்து-மற்றவர்களை சங்கடப் படுத்தக் கூடாது என்பதற்காக எவ்வளவு பண்போடு சொல்லுகிறார் பாருங்கள்)

மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றைய பண்டிதர்களுக்கு புராண ஞானங்கள்தான்

(இவ்வளவு துணிச்சலாக அய்யா அவர்கள் கேட்கின்றார்) இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விட புராண ஞானங்கள்தானே அதிகமாயிருக்கின்றன? (பலத்த கைதட்டல்).

(பண்டிதர்களை வைத்துக்கொண்டே அய்யா சொல்லுகின்றார்). மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும்.

ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா?

பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? (அய்யா அவர்களை ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லுகின்றார்கள். 1936லேயே அய்யா அவர்கள் ஆழமாக அவ்வளவு சிந்தித்துச் சொல்லுகின்றார். மக்களை இந்த மாதிரி சிந்திக்க வைத்த தலைவர் யாருமே கிடையாது. அடுத்து ஒரு கேள்வியைப் போடுகின்றார்)

இந்தியா வேண்டுமா? ராமாயணம் வேண்டுமா?

இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்! (பலத்த கைதட்டல்).

மேல்நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை

(எவ்வளவு அறிவாளியாக, தர்க்க ரீதியாக, உண்மையைத் தயக்கமின்றி, அதே நேரத்தில் மற்றவர்கள் சங்கடப்படாமல் ஒரு எக்ஸ்ரே கருவி காட்டுகின்ற மாதிரி ஒரு சமூக நுண்ணறிவோடு சொல்லுகின்றார். பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்பதற்கு இதுதான் அடையாளம். அய்யா சொல்லுகிறார்).

மேல்நாட்டு அறிவாளிகள்

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மன்னியில், கடவுள் சம்பந்த மன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்கான மேல்நாட்டு இலக்கியங்களும், பண்டிதர்களும் போற்றப்படு கிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப் படுகிறார்கள்? டாக்கூர் (ரபீந்திரநாத் தாகூர்) அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு பாஷையும், அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

கம்பராமாயணம் அரிய இலக்கிமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். (அய்யா கம்பராமாயணத்தைப் படிக்கவில்லை என்று தயவு செய்து மேலெழுந்தவாரியாக நினைக்காதீர்கள். அவர் எவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார் என்பதை, மற்ற புலவர்கள் கண்களில் படாத விசயத்தை ஒன்று, இரண்டு என்று சொல்லு கின்றேன். பொதுவாக நம்மவர்கள் மாதிரி புராணத்தையும், இலக்கியத்தையும் வேறு யாரும் படித்திருக்க மாட்டார்கள். (கைதட்டல்).

இன்றைய விடுதலையைப் பார்த்தால் பிள்ளையாருக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்பதைப் பார்க்கலாம்) இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது?

(தந்தை பெரியாரின் பார்வையைப் பாருங்கள். இலக்கியமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையிலே மானத்திற்கு முதலிடம் கொடுப்பவர். தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்)

தமிழரின் சரித்திர கால எதிரிகள்

தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா-இழிவு பரவிற்றா? என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்

(சுயமரியாதையை விரும்புகிறவர்கள் பார்க்க வேண்டும். கம்பராமாயணத்தில் குரங்கு என்று சொல்லுகின்றான். கேவலப்படுத்துகிறான். கதை நடந்ததா இல்லையா என்பது அப்புறம். அண்ணா சொல்லுவார், வில்லிருந்து புறப்பட்ட அம்பு எப்படி நேராகப் போகுமோ அது மாதிரி போகும் தந்தை பெரியார் அவர்களின் கேள்விகள் எவ்வளவு வேகமாகப் போகும் என்பதற்கு இவைதான் உதாரணம்)

இலக்கியம் பரவிற்றா? இழிவு பரவிற்றா?

இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா-இழிவு பரவிற்றா? என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர்நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அமைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கின தாலும், மறைக் கதவைத் திறந்ததாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது.

(அய்யா தேவாரம், திருவாசகத்தை எல்லாம் எவ்வளவு படித்திருக்கிறார்கள் பாருங்கள். அய்யா அவர்கள் இவைகளைப் பற்றி தரவாகப் படித்ததை ஒட்டித்தானே இவ்வளவு, விளக்கமாகச் சொல்லுகின்றார்.

தமிழ்ப் பாட்டு பாடினால் கதவு திறக்குமா?

சில இடங்களில் அய்யா அவர்களே சொல்லுவார். தமிழ் மறைக்கதவைத் திறந்தது என்று சொல்லுவதற்கு அழகாக இருக்கலாமே தவிர-வேண்டுமானால் கதவைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்; பாட்டுப் பாடுங்கள்; மூடின மறைக்கதவு திறக்கிறதா? என்று பார்ப்போம் என்று சொல்லுவார்.

அது மாதிரி முதலை உண்ட பாலகனை என்று சொல்லுகின்றார்கள். முதலை ஒருவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டால் தமிழ்ப் பாட்டு பாடினால் அந்த முதலை விட்டுவிடுமா? என்று பார்ப்போம் என்று அய்யா அவர்கள் ரொம்ப வேகமாகக் கேள்வி கேட்பார். இதில் ரொம்ப நாசுக்காக சொல்லுகின்றார்.) இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும், துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள் என்று சொல்லுகிறார்.

( பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ்; ஆதிசிவன் பெற்றெடுத்த மொழி என்றெல்லாம் சொல்லுகிறார்களே-அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தந்தை பெரியார் சொல்லுகின்றார் (சிரிப்பு-கைதட்டல்).

இந்தி மயமாக வேண்டுமென்று....

இன்று தமிழ்நாட்டில் வந்து, தமிழ்கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றிபெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை. தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும், பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்துகொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

செத்த பாம்பான சமஸ்கிருதத்தை....

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? (அய்யா அவர்கள் எப்படி உணர்ந்து சொல்கிறார்கள் பாருங்கள். மிகப்பெரிய ஆபத்து எங்கிருந்து வருகின்றது என்று பார்க்கின்றார்) பொதுப்பணம் சமஸ் கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்?

வானொலியில் சமஸ்கிருத பாடம்

இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அடுத்து முக்கியமாக நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் இப்பொழுது 22 மொழிகள் இருக்கின்றன. 8ஆவது அட்டவணையில் உள்ளது.

அந்த அட்டவணையில் தமிழும் இருக்கிறது; சமஸ்கிருதமும் இருக்கிறது. உலகத்திலேயே பேசாத மொழி சமஸ்கிருதம்தான். செத்தமொழி.

பயிருக்கு இறைத்த வாய்க்கால் தண்ணீரை புல்லும் உறிஞ்சக்கூடிய அளவிற்கு சமஸ்கிருதத்திற்கும் கிடைத்தது. இதுவரையில் சமஸ்கிருதத்தை சும்மா வாவது செம்மொழி, செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமஸ்கிருதம் செம் மொழி ஆனதே தமிழ் செம்மொழி ஆன பிறகுதான் உலகத்திற்குத் தெரிய வந்தது.

அகில இந்திய வானொலியைத் திறந்து கேளுங்கள். சமஸ்கிருத பாடங்கள் என்று சொல்லி தனியே ஒரு மணிநேரம் நடத்துகிறார்கள்-உஞ்சிவிருத்தி பார்ப்ப னர்கள் நடத்துகிறார்கள்.

தமிழுக்காகப் போராட வேண்டும்

வேலையே இல்லாமல் இருக்கிறார்கள் பாருங்கள். அந்தக் கிழடுகள் எல்லாம் உட்கார்ந்துகொண்டு எதையோ சொல்லிக்கொடுக்கிறார்கள். வானொலியில் அதை யாரும் கேட்பதில்லை. சமஸ்கிருத்திற்கு வானொலியில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். தமிழே எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இங்கு இருக்கின்ற பொழுது, தமிழ்நாட்டு வானொலி சமஸ்கிருதத்தின் நேர ஒதுக்கீடான அதே அளவிற்கு தமிழ் மொழிக்கு வானொலியில் ஒதுக்க வேண்டு மென்று நாம் போராட வேண்டும். (பலத்த கைதட்டல்).

நாங்கள் கேள்வி கேட்டபொழுது....

இந்தப் பிரச்சினையை கொஞ்ச நாள்களுக்கு முன்பு நாங்கள் எழுப்பினோம். அப்பொழுது என்ன சொன்னார்கள். சமஸ்கிருதத்திற்கு மட்டும் வேறு மொழிக்கு இல்லாத தனி சலுகையை அளிக்கிறீர்கள் என்று நாம் கேட்டபொழுது, இல்லை, சமஸ்கிருதம் செம்மொழி. அதனால் அதற்கு முக்கித்துவம் கொடுக்கிறோம்.

மற்ற மொழிகள் எல்லாம் அந்த அளவிற்கு வரவில்லை என்று சொன்னார்கள். இப்பொழுது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வந்தாகிவிட்டது. சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நேரம் நீங்கள் வானொலியில் ஒதுக்குகிறீர்களோ அதைவிட அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

தமிழ் உலகளவில் பேசப்படுகிறது

காரணம், தமிழ் மொழி உலகளாவிய அளவில் பேசப்படுகின்ற மொழி. உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தமிழ் பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருதம் உலகம் முழுவதும் பேசப் படுவதில்லை. மயிலாப்பூரிலேயே பேசுவதில்லை. (சிரிப்பு-கைதட்டல்). அப்படி இல்லை என்றாலும் இன்னமும் பழைய பந்தாவோடு இருக்கின்றான். (கைதட்டல்).

அவர்களுக்கு அதில் எவ்வளவு வசதி? எவ்வளவு வாய்ப்பு? தமிழ் செம்மொழிப் பாடம் என்பதை வானொலி மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் பரவவேண்டும். இதைக் கட்டாயமாக வலியுறுத்தி ஒரு தனி இயக்கம் நடத்துவோம். தேவைப்பட்டால் ஒரு கிளர்ச்சியும் நடத்தப்படும். (கைதட்டல்). தமிழர்களுக்குத் தேவையான ஒன்று.

மறைமலை இலக்குவனார் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி உணர்ச்சி பூர்வமாக இருக்கிறவர்கள் இல்லாமல் இல்லை.

சம்பள வேறுபாடு:பெரியார் போராடினார்

ஆனால், இன்று வரை இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு வருமானம் என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஆசிரியர் தொழில் உயர்ந்த தொழில் என்று நினைப்பதற்குப் பதிலாக அது ஏதோ தொழிற் சங்கத்தினுடைய இன்னொரு பகுதி என்று இருக்கக்கூடாது. தமிழ்ப் புலவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டுமென்று பெரியாரே போராடியவர். சமஸ்கிருத ஆசிரியருக்கு ஒரு சம்பளம்; தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாய முதலியாருக்கு ஒரு சம்பளமா? என்று போராடியவர் பெரியார்.

இந்த உணர்ச்சிக்கு அடித்தளம் யார்? பெரியார். எனவே, பெரியார் ஊட்டிய உணர்ச்சி எவ்வளவு காலம் உயிரோட்டமோடு இருக்கிறதோ, எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதுதான் நம்மை சிறக்க வைக்கும். ஆகவே, இலக்கியத்தில் புது வெள்ளம், புதுநோக்கு தேவை.

புதுநோக்கும், புது வெள்ளமும் வந்தால் புதிய பொறுப்பும் வரும். இந்த உரையை நிறைவு செய்து, அடுத்த பொழிவை அவர்கள் எப்பொழுது நினைக்கிறார்களோ-வாய்ப்பு ஏற்படும்பொழுது எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ, முடிப்போம்.

நான் எடுத்துக்கொண்டிருக்கின்ற செய்தியில் பகுதி கூட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. ஆகவே, வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------”விடுதலை” 25-10-2010

0 comments: