Search This Blog

10.10.10

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று நீதிபதி கூறலாமா?

புண்ணுக்குப் புனுகு பூசுவதா?
அலகாபாத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர்

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (8.10.2010) இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதி தேவன்களின் மயக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சாரப் பிழிவு.

தொடக்கத்திலேயே இவ்வாரம் வெளிவந்த அவுட் லுக் (11.10.2010) இதழினைக் கையில் எடுத்துக்கொண்டு தமது விவாதத்தினைத் தொடங்கினார்.

First or Last? எனும் தலைப்பில் வினோத் மேத்தா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதியை எடுத்து விளக்கினார்.

ராமஜென்ம பூமியை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற நப்பாசையுடன் காய்களை நகர்த்திய சங் பரிவார்க் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு படிப்படியாகக் குறைந்தே வந்திருக்கிறது. அதன் ஆசையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர்.

1999 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது அது வாங்கிய வாக்குகள் 23 சதவிகிதம்; இதன் பொருள்- 77 சதவிகித மக்கள் ராமன் கோயில் பிரச்சினையில் எதிராக இருந்தனர் என்பதே! 2009 ஆம் ஆண்டில் பி.ஜே.பி. பெற்ற வாக்குகள் வெறும் 18 விழுக்காடுதான்; இதன் பொருள்- 82 விழுக்காடு மக்கள் ராமன் ஜென்மபூமிக்கு எதிராக வாக்களித்து விட்டனர்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினை என்று பெரிதுபடுத்தி குளிர் காயலாம் என்று நினைத்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது முஸ்லிம்களுக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே உள்ள பிரச்சினை தான் என்று அவுட்லுக் எழுதியுள்ளதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

(உண்மையைச் சொல்லப்போனால், பி.ஜே.பி.யோ, சங் பரிவார் வட்டாரமோ அனைத்து இந்துக்களுக்கும் பிரதிநிதிகள் என்று யார் சொன்னார்கள்? யார் ஏற்றுக் கொண்டனர்? கோடானு கோடி தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிவிட்டு, அவர் களுக்கும் சேர்த்து இவர்கள்தான் பிரதிநிதிகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா? இந்து என்று சொல்கிறார்களே, அதில்தான் எத்துணை எத்துணைப் பிரிவு! பாபர் மசூதிப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு சமரசம் செய்யச் சென்றபோது நீ சைவப் பிரிவைச் சேர்ந்த ஆசாமி; ராமர், வைணவர் பற்றிய சமாச்சாரம் - உம் வேலையைப் பாரு! என்று ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் கூறவில்லையா? இந்த நிலையில், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று பி.ஜே.பி.யோ, சங் பரிவார்களோ எப்படி மார் தட்டிக்கொண்டு முன்வர முடியும்?)

ராமனைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்பது இனி நடக்காத காரியம். நீதிபதி களுக்குத்தான் மயக்கம்; சில அரசியல் தலைவர்களுக்கோ தயக்கம். ஆனால், மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் - மக்களைத் தெளிவுபடுத்த எங்களைப் போன்ற இயக்கம் இருக்கிறது.

1992 இல் பாபர் மசூதியை இடித்துக் கலவரத்தை உண்டாக்கியதுபோல இப்பொழுதும் செய்யலாம் என்று நினைத்தால், அதில் தோல்வி நிச்சயம். அப்பொழுது இருந்ததைவிட இப் பொழுது மக்கள் முதிர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றார் தமிழர் தலைவர்.

உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா - சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அதிலும் குறிப் பாகத் தமிழ்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமானது என்றும் சட்ட ரீதியாக எடுத்துக்காட்டினார்.

We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic என்று கூறப்பட்டுள்ளது.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானமாகும். இதில் யாரும் கை வைக்க முடியாது.

ஆனால், அலகாபாத் நீதிபதிகளின் தீர்ப்பு இதனைத் தகர்க்கும் நிலையில் உள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா? அதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் தீர்ப்பு அளிப்பதற்கு ஆவணங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் (Court of Law) செயல்படவேண்டிய நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் (Court of Faith) மத ரீதியில் ராமன் பிறந்த இடம் என்று கூறியிருப்பது கண்டிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிரான செயலேயாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞரான தமிழர் தலைவர்.

8700 பக்கங்களைக் கொண்டது மூவரின் தீர்ப்பு. தீர்ப்புகள் அதிக பக்கங்களில் இருந்தாலே அதில் குழப்பங்கள் அதிகம் என்று பொருள் - தடுமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தையும் எடுத்துக்காட்டத் தவற வில்லை தமிழர் தலைவர். நீதிமன்றங்கள் சட்ட கோர்ட்டுகளே தவிர, நியாயக் கோர்ட்டுகள் அல்ல என்பார். இப்பொழுது அந்த நிலைக்கும் ஆபத்து வந்து நீதிமன்றம் நம்பிக்கை அடிப்படை யானதாக ஆகிவிட்டது என்று தமிழர் தலைவர் சொன்னபோது அரங்கம் மிகவும் ரசித்தது.

பாபர் மசூதி பிரச்சினையாக்கப்பட்டு சிக்க லாக்கிய பின்னணி என்ன? அதற்குக் காரணம் யார் என்பதை சர்வபல்லி டாக்டர் கோபால் (மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் மகன்) ‘‘Anatomy of a Confrontation’’ (1990) என்ற நூலை ஆதாரப்படுத்தி அதிலிருந்து பல தகவல்களை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.

1528 ஆம் ஆண்டிலேயே பிரச்சினை கிளப் பப்பட்டது (1853-இல் அயோத்தியில் முதன் முதல் வன்முறை வெடித்தது - 75 பேர் பலி!).

1949 இல் மிக மோசமான அத்துமீறல் என்பது பாபர் மசூதிக்குள் அவ்வாண்டு டிசம்பர் 22 இரவு நேரத்தில் குழந்தை ராமன் பொம்மையைக் கொண்டு போய் வைத்தது ஒரு கும்பல்.

பிரதமர் நேரு அதிர்ந்து போனார்; உடனடியாக அந்தப் பொம்மைகளைத் தூக்கி எறியச் சொன்னார். அப்பொழுது துணைப் பிரதமராக சர்தார் பட்டேல், உ.பி. முதல் அமைச்சராக இருந்த கோவிந்த வல்லபாய் பந்த் அதற்கு ஒத்து ழைப்புக் கொடுக்கவில்லை. மாவட்ட மாஜிஸ்டிரேட்டாக இருந்த நய்யார் என்பவர் ராமர் சிலையை எடுத்தால் பிரச்சினைகள் ஏற்படும், கலவரம் வெடிக்கும் என்று கூறினார். (ஆதாரம்: சர்வபல்லி டாக்டர் கோபால் நூல் - ஏ.ஜி. நூராணி கட்டுரை).

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தப்பும் வாய்ப்பு

அலகாபாத் தீர்ப்பின் காரணமாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகளானவர்கள் தண்டனையி லிருந்து தப்பித்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதைத் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

தாம் நடத்திய ர(த்)த யாத்திரையை அத்வானி நியாயப்படுத்திப் பேச ஆரம்பித்துவிட்டார்.

(லிபரான் ஆணையம், முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உள்பட 68 பேர்களை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது) நாடாளுமன்றத்தி லேயே பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர், சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாக ஆமாம், நாங்கள் தான் இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று பேசும் துணிவு ஏற்பட்டுவிட்டதே!

பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார் என்றால் என்றால், அதனை ஆதாரமாகக் கொண்டு, பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்த மாட்டார்களா குற்றவாளிகள்? இதற்கு இடம் அளித் துள்ளதா, இல்லையா அலகாபாத் உயர்நீதிமன் றம்? 1994 இல் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?

It was an act of National shame தேசிய அவமானம் என்று சொல்லவில்லையா?

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது, அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் அப்படியே அதிர்ந்து போனார்கள்.

இதுபற்றி நான் மட்டுமல்ல, பிரபல வழக்கறி ஞர்கள் எல்லாம் சுட்டிக் காட்டியும் உள்ளார்கள்.

அத்துமீறி இரவோடு இரவாக இன்னொரு மத வழிபாட்டு இடத்தில் தமது கடவுள் சிலைகளை வைப்பதும், அந்தக் குற்றத்தைக் கண்டு கொள்ளாமல், அப்படி வைக்கப்பட்ட சிலையை வழிபடுவதற்கு வழி செய்து கொடுப்பதும், அதற்குப் பின்னர் அந்த சிலை வைக்கப்பட்ட இடம்தான் அவர் பிறந்த இடம் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் சட்ட சம்மதமானது - நியாய வழிப்பட்டது என்பதைத் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக, கல்லும் உருகும் வண்ணம் எடுத்துக் கூறினார்.

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ரொமீலா தாப்பர் இந்து ஏட்டில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை முக்கியமாக எடுத்துக்காட்டினார்.

தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஏ) நடத்திய அகழ்வு ஆய்வுகளும், அதனுடைய முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பிற தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் இதனைப் பலமாக மறுதலித்துள்ளனர் என்று ரொமீலா தாப்பர் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டினார்.

இந்த வரலாற்றுப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள இன்னொரு முக்கிய கருத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

அலகாபாத் தீர்ப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது தங்களை ஒரு சமூகம் என்று கூறிக் கொள்ளும், ஒரு வணங்கப்படும் ஒரு புனிதமான அல்லது ஓரளவு புனிதமான ஒரு நபரின் பிறந்த இடம் என்று கூறி, அந்த நிலத்தின் மீது உரிமை கொண் டாடுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்து கிறது. ஒரு பொருத்தமான சொத்து காணப்பட்டால், அல்லது தேவைப்படும் ஒரு தகராறை உருவாக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய பல ஜென்ம பூமிகள் இப்பொழுது தோன்றும். வரலாற்று நினைவுச் சின்னங்களை திட்டமிட்டுத் தகர்ப்பது கண்டனம் செய்யப்படாததால், மேற்கொண்டு அத்தகையவற்றை தொடர்ந்து தகர்ப்பதை எது தடுத்து நிறுத்த முடியும்? என்று வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் கூறியது உண்மையிலும் உண்மையே!

இப்பொழுது அடுத்த கலவரத்துக்குக் கத்தியைத் தீட்ட ஆரம்பித்துவிட்டனர். சுப்பிரமணிய சாமி என்ற அரசியல் தரகர் அடுத்து எங்களது பயணம் மதுரா, காசி என்று கூறியுள்ளாரே - கிருஷ்ண ஜென்ம பூமி, விசுவநாதர் ஜென்மபூமியை மீட்போம் என்று வி.எச்.பி. தயாராகி விட்டதே! இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தைத் தந்ததுதான் அலகாபாத் தீர்ப்பு என்றார் விடுதலை ஆசிரியர்.

இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள ஒரு பெரிய ஆபத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ராமன் பெயரைச் சொல்லி முடக்கப்பட்டுள்ளது. அலகாபாத் தீர்ப்புக்குப் பின் அதன் நிலை என்னவென்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நீதிபதிகளே கடவுள்கள் தானாகத் தோன்றும் (சுயம்பு) என்று கூறும் நிலையில், சட்டத்துக்கும், ஆதாரங்களுக்கும் என்னதான் மரியாதை?

மசூதிக்குரிய இலக்கணத்தில் கட்டப்படவில்லை என்று ஒரு நீதிபதி சொல்கிறார் என்றால் என்ன பொருள்?

மெயின் வழக்கைத் தள்ளுபடி செய்தபின் நிலத்தைப் பங்கீடு செய்து கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூராணி சொல்கிறார் - 17 ஆம் நூற்றாண்டுவரை எந்த இடத்திலும் ராமன் கோயில் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படியிருக்கும் பொழுது ராமர் ஜென்மபூமியில் கோயில் எங்கே இருந்து வந்து குதித்தது?

1993 இல் என்ன முடிவு எடுக்கப்பட்டது - ஏற்கெனவே எந்த நிலையில் வழிபாட்டு நிறுவனங்கள் இருந்தனவோ அதில் மாற்றம் கூடாது என்று எடுக்கப்பட்ட முடிவு என் னாயிற்று? அதைச் சரியாக மத்திய அரசு கடைபிடித்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

இன்னொரு முக்கியமான தகவலை நினைவுபடுத்திப் பேசினார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 146 இன்படி குடியரசுத் தலைவரால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலைப்பாடுபற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறினார்கள்? இது போன்ற பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளிக்கப்பட்டதே. உச்சநீதிமன்றமே மறுத்துவிட்ட ஒன்றின்மீது ஒரு உயர் நீதிமன்றம் எப்படி தீர்ப்புச் சொல்லலாம் என்று ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வினா எழுப்பினார் ஆசிரியர்.

அரசமைப்புச் சட்டம் 25 ஆவது பிரிவையும் தவறான முறையில் நீதிபதிகள் பயன்படுத்தியதையும் திராவிடர் கழகத் தலைவர் விளக்கினார். மொத்தத்தில் புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் செய்துள்ளது.

இறுதியாக தமிழர் தலைவர் கூறியது:

எந்த மதத்துக்காகவும் வக்காலத்து வாங்கி நாங்கள் பேச வரவில்லை. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள் நாங்கள். நாட்டின் நலன் கருதி ஒரு தீர்ப்பு, பிற்காலத்தில் புதிய அபாயம் ஏற்படும் வகையில் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடும்தான் பேச முன்வந்தோம். உச்சநீதிமன்றம் - ஏற்பட்டுள்ள ஒரு இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அந்தக் கடமையைச் செய்யவேண்டும் என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தொடக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், மறுநாளே திராவிடர் கழகத் தலைவர் விடுத்த அறிக்கையையும், அலகாபாத் தீர்ப்பு வெளியானதற்கு மறு நாளே காலந் தாழ்த்தாது தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையையும் எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார்.

பல துறைகளைச் சார்ந்த பெருமக்கள் ஏராளம் வந்திருந்தனர். நடிகவேள் ராதா மன்றமே நிறைந்து வழிந்தது.

வருகை தந்தோர்

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன், சட்டத்துறை செயலாளர் வீரமர்த்தினி, மாநிலப் பகுத்தறிவு இலக்கிய அணியின் தலைவர் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், செயலாளர் கி. சத்திய நாராயணன், வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கந்தசாமி, செயலாளர் பா. தட்சிணாமூர்த்தி, சென்னை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் ஞானசேகரன், திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேட்டவலம் பா.பட்டாபிராமன், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ச. இன்பலாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, திருமகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.பி. பாலு, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் உ. பலராமன், தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.டி. சீதாபதி, பாவலர் மறைமலையான், புலவர் வீரமணி, பேராசிரியர் முனைவர் மங்கள முரு கேசன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


வாஜ்பேயியின் கருத்தென்ன?

ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் (24.9.1989) ஏட்டிலிருந்து சர்வபல்லி டாக்டர் கோபால் நூலில் (பக்கம் 161) எடுத்துக்காட்டியுள்ளார்.


மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல நாடாளுமன்றவாதியும், பொதுவுடைமை இயக் கத்தின் மூத்த தலைவருமான பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, வாஜ்பேயி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பதில் எழுதிய வாஜ்பேயி ராமன் இந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதை குறிப்பிட்டு ஒரு இடத்தைச் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டு இருப்பதைத் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரின் கருத்தே இப்படி இருக்கையில், ராமன் பிறந்த இடம் அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடம்தான் என்பது அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

- சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர், 8.10.2010


நீதிபதியே சுயம்பு என்று சொல்லலாமா?

பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமன் பிறந்தான் - அவன் சுயம்புவாகத் தோன்றினான் என்று ஒரு நீதி பதி சொல்லலாமா? இப்படியே போனால், நாளைக்கு நாடாளு மன்றக் கட்டடத்துக்கே ஆபத்து வந்துவிடுமே! சுயம்புவாகக் கடவுள் அங்கு மட்டும் தோன்றமாட்டாரா?

இப்படித்தான் 1970 செப்டம்பரில் சென்னை தியாகராயர் நகரில் சிவாவிஷ்ணு ஆலயத்தின் பக்கத்தில் ஒரு சுயம்பு பிள்ளையார் என்று கதை கட்டினார்கள். ஏடுகள் எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

பக்தர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். அப்பொழுது தந்தை பெரியார் சென்னையில் இருந்தார். மக்களை இப்படி மடமையில் ஆழ்த்துகிறார்களே என்று கோபப் பட்டார் அய்யா. உடனே அந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசப் போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். அப்பொழுது நமது கலைஞர்தான் முதலமைச்சர். முதலில் உண்டியலைப் பறிமுதல் செய்தார்; அதன்பின் அந்த சுயம்புப் பிள்ளையாரையும் அப்புறப் படுத்தினார்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுயம்புவாகக் கடவுள் தோன்றுவார் என்று வக்காலத்து வாங்கினார்.

பறிமுதல் செய்ததோடு முதல்வர் கலைஞர் விட்டு விடவில்லை. எப்படி நடந்தது? யார் பின்னணி? என்பதை விசாரிக்க உத்தரவிட்டார்.

24 மணிநேரத்திற்குள் உண்மை அம்பலமாகி விட்டது. தியாகராயர் நகரில் இருந்த கவுன்சிலர் கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் - அவரின் தூண்டுதலால் செல்வராஜ் என்ற ஹெட்கான்ஸ்டபுள் 80 ரூபாய்க்கு அந்தப் பிள்ளையார் பொம்மையை யாரிடம் வாங்கினார் என்பது வரை கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட செல்வராஜ்கள்.

- சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர், 8.10.2010


பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் தீர்ப்பு

இப்போது தீர்ப்பில் கூறியுள்ளது போல் சர்ச்சைக்குரிய நிலத்தைப் பிரித்துப் பங்கிட வேண்டும் என்று தீர்ப்பை, இந்த மசூதி இடிக்கப்படாமல் இருந் திருந்தால், அப்போது நீதிமன்றம் அளித்திருக்குமா?

அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கவனிக்கத் தகுந்த ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், 1992 டிசம்பர் 6 ஆம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வன்முறைக் கலவரத்தைக் கண்டித்து எந்தக் கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க வில்லை என்பதுதான்.

மசூதி இடிப்பு பற்றி 1994 இல் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது: மிகக் குறுகிய காலத்தில் இந்த மசூதியின் மொத்தக் கட்டுமானமும் இடித்துத் தள்ளப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது. இது இந்திய நாட்டுக்கே நேர்ந்த மிகப் பெரிய அவமானமாகும். இடிக்கப்பட்டது ஒரு பழைய கட்டடம் மட்டுமல்ல, பெரும்பாலான மதத்து மக்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற சிறுபான்மை மக்களின் நம்பிக்கையும் அத்துடன் சேர்த்து இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

மசூதி இடிப்பு பற்றி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை கூறுகிறது: ராமஜன்மபூமி என்று கூறிக்கொண்டு பாபர் மசூதிக் கட்டடம் 1992 டிசம்பர் 6 ஆம் தேதியன்று இடிக்கப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உரிய இழி செயலாகும். இச்செயலைச் செய்தவர்கள் ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் நமது அரசமைப்புச் சட்டத்தின் உறுதி அளிக்கப்பட்டுள்ள அரசின் மதச் சார்பற்ற தன்மை, மக்களாட்சியின் மாண்பு மற்றும் சட்டப்படியான ஆட்சி ஆகிய கொள் கைகளின் மீதும் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலே ஆகும். மிகவும் வெட்கப்படத் தக்க, திடீரென மேற்கொண்ட ஒரு செயல், ஒரு சில ஆயிரம் மக்கள், அனைத்து மதங்களையும் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களைக் கோபமடையச் செய்ததுடன், மிகுந்த ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் இந் நிகழ்ச்சிக்கு அவர்களை எதிர்வினையாற்றச் செய்துவிட்டது.

மசூதி இடிக்கப்பட்ட செயல் எந்த அளவுக்கு அவமானத்தையும், வேதனையையும் உருவாக்கியது என்றால், 1992 டிசம்பர் 7 அன்றும் டிசம்பர் 27 அன்றும் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும் என்று பிரதமரும், மத்தியஅரசும் அறிவிக்கும் அளவுக்கு உருவாக்கியது என்றே கூறலாம்.

1992 டிசம்பர் 6 ஆம் தேதியன்று நடைபெற்ற வன்முறைக் கலவரங்கள் பற்றி அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு எதனையும் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் காலி நிலமாக இருப்பது என்ற அளவில் மசூதி இடிக்கப்பட்ட செயலை - செய்து முடிக்கப்பட்ட செயல் என்றும், இனி அது பற்றி எதுவும் செய்ய இயலாது என்றும் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. முன்பிருந்த மசூதியின் மத்திய அரைக்கோள வடிவ கோபுரத்தின் கீழே உள்ள நிலம்தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால், அந்த இடம் இந்துக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பு அளித்த பின், ராம் சபுதாரா மற்றும் சீதா ரசாய் இருந்த பகுதி நிர்மோகி அஹராவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். சர்ச்சைக்கு உரிய நிலத்தின் எஞ்சியுள்ள பகுதியை மூன்று பங்காகப் பிரித்து இரண்டு பங்குகளை இந்து பிரதிவாதி களுக்கும், ஒரு பகுதியை முஸ்லிம் பிரதிவாதிக்கும் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்துக் களுக்கு தகுதியற்ற, நியாயமற்ற பரிசாகவும், முஸ்லிம் களுக்கு செய்யாத குற்றத்துக்குத் தண்டனையாகவும் இந்த தீர்ப்பு விளங்குகிறது. இவ்வாறு இந்த தீர்ப்பு 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படியும், சட்டப்படியானதாகவும் ஆக்கி விட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது இன்று மசூதி இல்லை என்பதன் அடிப்படையினை வைத்துக் கொண்டே வழக்கை அணுகியதால், நீதிமன்றம் இவ்வாறு செய்துள்ளது.

( தி ஹிந்து அக்டோபர் 5, 2010
திரு டி.ஆர். அந்தியார்ஜூனா)

பலம் மிக்க பெரும்பான்மை மக்களின் மறைமுக மான அரசியல் செயல்பாடுகளுடன் கூடிய ஒரு இந்து கலாச்சார தேசியம் பற்றிய வரலாறு திரும்புவதற்கான புறக்கடை வழி ஒன்றினை அலகாபாத் தீர்ப்பு திறந்து விட்டு விட்டது. சர்ச்சைக்குரிய இடம்தான் கடவுள் ராமர் பிறந்த இடம் என்றும், இந்த இடத்தில் பிறந்தவர் ஒரு நீதிமானும், ஒரு கடவுளும் ஆவார் என்றும் கூறப்பட்டது உள்ளிட்ட இத் தீர்ப்பு பொது அரங்கில் இந்து புராணக் கதைகளை அனுமதித்தது மட்டுமன்றி, ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அயோத்யா சர்ச்சைக்குரிய இந்த இடம்தான் என்று, எந்தக் கேள்வியையும் கேட்க இயலாதபடி ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய மனப்பான்மை - மதம் சார்ந்த ஒரு நாட்டுக்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம்; ஆனால் நவீன மக்களாட்சி நாட்டிற்கு ஏற்றதாக இருக்க முடியாது.

பொருத்தமான பெரும் அளவிலான சொத்துக் களும், மதத்தின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை எழுப்பி வழக்காடும் வாய்ப்புகள் உள்ள பல ஜன்ம பூமிகள் இனி பல தோன்றக்கூடும் என்ற கவலையை ரொமீலா தாப்பர் தெரிவித்தார்.

(தி ஹிந்து அக்டோபர் 4, 2010
மாலினி பார்த்தசாரதி)

மேற்கண்ட குறிப்புகளை தமிழர் தலைவர் கூட்டத் தில் எடுத்துக்காட்டிப் பேசினார்.

- சென்னைக் கூட்டத்தில்
தமிழர் தலைவர், 8.10.2010


ராமன் பிறப்பு

வால்மீகி ராமாயணம்தான் மூல நூல். அதில் உள்ள பாலகண்டம், உத்தரகாண்டம் என்பவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே. பால காண்டத்தில்தானே ராமன் பிறப்புப்பற்றிக் கூறப்படும்- அதனையே பிற்காலத்தில் இடைச்செருகலாகக் கொண்டு வந்தனர் என்றால், ராமன் பிறப்பு எங்கிருந்து வந்தது?

இராமாயணத்தைப்பற்றி தந்தை பெரியார் அளவுக்கு ஆய்வு செய்தவர்கள் யாருமில்லை. அவர் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் நூல் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்தியில் சச்சு இராமாயண் என்ற பெயரில் இருந்ததை, ஆங்கிலத்தில் சுயஅயலயயே - ஹ கூசரந சுநயனபே என்று மொழி பெயர்க்கப்பட்டது. இந்த இரு நூல்களையும் உத்தரப்பிரதேச அரசு தடை செய்தது.

அதனை எதிர்த்து உ.பி. மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உ.பி. அரசின் தடை செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் சென்றது உத்தரப்பிரதேச அரசு. நீதிபதி வீ.ஆர். கிருஷ்ண அய்யர், உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று, உ.பி. அரசின் தடையைச் செல்லாது என்று தீர்ப்புக் கூறினார் (17.9.1976).

தந்தை பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் நூலுக்கு இதுவரை எவரும் மறுப்பு எழுதியது கிடையாது.

---------- சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர், 8.10.2010





2 comments:

Thinaa said...

அய்யா பகுத்தறிவு புலிகளே, நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள்? விநாயகரை வைத்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டு காலம் அரசியல் செய்துவிட்டீர்கள். வாழ்க உங்கள் பகுத்தறிவு. அறிவுதான் கேள்விபட்டிருக்கிறேன். அது என்ன பகுத்தறிவு? தண்ணீர் எது, சாராயம் எது என்று மோந்து பார்த்து பகுத்து அறிவதா?

நம்பி said...

//Thinaa said...

அய்யா பகுத்தறிவு புலிகளே, நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள்? விநாயகரை வைத்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டு காலம் அரசியல் செய்துவிட்டீர்கள். வாழ்க உங்கள் பகுத்தறிவு. அறிவுதான் கேள்விபட்டிருக்கிறேன். அது என்ன பகுத்தறிவு? தண்ணீர் எது, சாராயம் எது என்று மோந்து பார்த்து பகுத்து அறிவதா?
October 10, 2010 9:27 PM //

என்ன பண்ணுவது அரை நூற்றாண்டுகாலம் பேசியும் இப்போது தான் பகுத்தறிவு என்றால் என்ன? என்ற அளவுக்கே வந்திருக்குது...

...இதுவரைக்கும் என்ன தினந்"தினா"ம் திண்ணை அரசியல் பேசிக்கிட்டிருந்தா எப்படி இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?

"ஈ" ன்னும் "பீ" ன்னும் எப்படி உடனடியாக வித்தியாசம் தெரிந்து கொள்ள முடியும்?.

மோந்து பார்த்து தான் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும். மோந்து பார்க்கும் போது மூக்கில ஒட்டி அதை துடைக்கப்போய் மூஞ்சிப்பூரா, கைமுழுக்க, உடம்பு முழுக்க "பீ" "ஆயி"..."ஆயி" "ஆயி" ஊரே நாற்றமெடுத்தப் பிறகு தான் ஆமா இது "பீ" நமக்கு பார்த்த உடனேயே தெரியலையே..(சில பேருக்கு நக்கி பார்த்தப் பிறகு கூட தெரியாது)...என்று வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்.

இதுவே தெரியாதப்ப...

மத்ததைப் பத்தியெல்லாம் எப்படி வித்தியாசம் தெரிந்து கொள்ள முடியும்.