Search This Blog

24.10.10

தீபாவளி- திடுக்கிடும் உண்மைகள்!



தீபாவளியைக் கொண்டாடாத தீரர்கள் பட்டியல் என்று குடிஅரசு, விடுதலைகளில் வெளிவந்ததுண்டு. தீபாவளிபற்றிய உரத்த சிந்தனைகள் மக்கள் மத்தியில் எழுப்பிடும் பணிகளில் நமது தோழர்கள் விறுவிறுப்புடன், ஊக்கத்துடன் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

தீபாவளியை முழுமையாகப் புறக்கணித்த கிராமங்கள்கூட உண்டு.

பழைய நிலையைவிட, முன்னிலும் வேகமாக மூடத்தனங்களை முறியடிக்கும் ஆக்க ரீதியான பணிகள் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில்தான் நாடு இருக்கிறது.

அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சிகள், ஏடுகள், இதழ்கள் போன்ற ஊடகங்கள் அறிவு நாணயமற்ற முறையில் அறிவுக்கும், பகுத்தறிவுக்கும் முரணான மூடப் பண்டிகைகள்பற்றி போட்டி போட்டுக் கொண்டு காதும், கண்ணும் வைத்து பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கி வருகின்றன.

நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழிக்கேற்ப அவை நடந்துகொண்டு வருகின்றன. அரசுகளும் மூடப் பண்டிகைகளுக்கு விடுமுறைகள் விட்டு, அந்த நாள்களில் அரசுப் பணியாளர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வீட்டில் பேன் குத்திக் கொண்டிருக்கும் வேலையில் இறக்கிவிடப்படுகின்றனர். இன்னொரு வகையில் இதுபோன்ற பண்டிகைகளுக்குப் போனஸ் தொகையை வழங்கி காசைக் கரியாக்கும் வேலைக்கு ஊக்கம் தந்து கொண்டும் இருக்கின்றனர்.

இதுபோன்ற தொகைகளை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் பருவத்தில் வழங்கலாம் என்று எத்தனையோ முறை இடித்துச் சொல்லியும் பயனில்லை. மக்களின் பாமரத்தனம் என்கிற பாதையில் சென்றால்தான் வாக்குப் பெட்டிகள் நிரம்பும் என்ற கணக்கு இதன் பின்னணியில் இருக்கிறது.

இந்த நிலையில், மக்களின் உழைப்பையும், அறிவையும், தன்னம்பிக்கையையும், காலத்தையும், பொருளையும் நாசப்படுத்தும் மூடத்தனங்களின் கடும் சிறைகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பகுத்தறிவுப் பெரும் பணியில் ஈடுபடவேண்டிய மகத்தான பணி திராவிடர் கழகத்தின் தோள்களில் விடிந் திருக்கிறது.

அந்தப் பணியை நாம் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறோம். நூற்றுக்கணக்கான சிறுசிறு நூல்களையும், துண்டு வெளியீடுகளையும், பெரியாரியல் நூல்களையும், தொகுதிகளையும் திட்டமிட்டவகையில் வெளியிட்டு வருகிறோம்.

நாடு தழுவிய அளவில் புத்தகச் சந்தைகளையும் நடத்தி வருகிறோம். நமது இயக்க நூல்கள் பெரும் அளவில் பொதுமக்களைச் சென்றடைந்துகொண்டு தான் இருக்கின்றன.

மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துகள் பரவிட, பேச்சுப் போட்டிகள், வாகை சூட வாரீர்! போன்ற நிகழ்ச்சிகளுக்கு நமக்கே உற்சாகம் அளிக்கும் வகையில் வரவேற்புகள் இருந்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கழகம் வெளியிட்ட துண்டு அறிக்கைகள் நாட்டை ஒரு கலக்குக் கலக்கி விட்டன. பொதுமக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைப் பொறுக்க முடியாத இந்து முன்னணி வகையறாக்கள் -தாங்கள் நம்புவதாகக் கூறிக் கொண்டிருக்கும் கடவுள்களிடம் கோரிக்கை மனு போடாமல் காவல்துறையிடம் காவடி எடுத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிற அரசமைப்புச் சாசனத்தின் சரத்து நமக்கு அரணாக இருக்கும் நிலையில், காவல் துறைதான் என்ன செய்ய முடியும்? நீதிமன்றம்தான் என்ன தீர்ப்பு வழங்க முடியும்?

விநாயகர் சதுர்த்தி துண்டறிக்கையைத் தொடர்ந்து தீபாவளிபற்றியும் தலைமைக் கழகம் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி - திடுக்கிடும் உண்மைகள் என்பது தலைப்பு.

இந்து மதப் பண்டிகைகள் எல்லாம் அசுரனை அழிப்பதை மய்யமாகக் கொண்டு புனையப்பட்டிருப்ப தன் சூழ்ச்சி இத்துண்டறிக்கையில் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இறுதியாக தந்தை பெரியார் எழுப்பும் அறிவியல் ரீதியான பத்து கருத்துகளுடன் துண்டறிக்கை முற்றுப் பெறுகிறது.

கழகத் தோழர்களே, இளைஞரணியினரே, மாணவரணி தோழர்களே, தொழிலாளர் கழகத்தினரே, மகளிரணியினரே, பகுத்தறிவாளர் கழகத் தோழர்களே! இத்துண்டு அறிக்கையினை, கையில் கழகக் கொடியினைக் கம்பீரமாக ஏந்தி, வீட்டுக்கு வீடு கொண்டு போய் சேர்ப்பீர்!

துண்டு அறிக்கையைக் கொண்டு சேர்ப்பதுதான் நமது கடமையும், வேலையும்! மற்றபடி அத்துண்டறிக்கை அதன் வேலையை ஒழுங்காகச் செய்து முடித்தே தீரும் என்பதில் அய்யமில்லை.

ஆயிரம் துண்டறிக்கைகள் அனுப்பும் செலவு சேர்த்து வெறும் ரூ.225/- தான்.

செயல்படுவீர்!

துடிப்புடன் செயல்படுவீர்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

-------------------- “விடுதலை” தலையங்கம் 23-10-2010

0 comments: