Search This Blog
2.8.09
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஜாதியைக் காப்பாற்றுமா?
சில அறிவாற்றல் அற்றவர்களும், தங்கள் (சாதி) ஜன எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தை விட அதிக எண்ணிக்கையான பதவி, உத்தியோகம் அனுபவிக்கும் ஜாதியாரும், நான் போராடும் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை,ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் ராமசாமி ஜாதியைக் காப்பாற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கிறார்
என்று சொல்லுகிறார்கள். இப்படிக் கூறுகிறவர்களைப் பற்றி நான் உண்மையாகவும், உறுதியாகவும் கூறுவது என்னவென்றால்,இவர்கள் அறிவு ஆற்றல் இல்லாத பேதைகளாக இருக்க வேண்டும்; அல்லது சமுதாயத்தில் தங்களை மேல்ஜாதி என்று சொல்லிக் கொண்டும், அதிகமான பதவிகளை அனுபவித்துக் கொண்டும் இருப்பதற்குப் பங்கம் வரக்கூடாது என்று கருதி, அவ்வுரிமையைத் தடுக்கும் சூழ்ச்சி செய்யும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவேன்.
ஏன் எனில், மனித சமுதாயத்தில் பிரபு - தரித்திரன், செல்வர் - வறியர், பணக்காரர் - ஏழைகள் என்பதாக இரு பிரிவு (ஜாதி) மக்கள் ஒரு நாட்டில் இருப்பார்களானால், அவர்கள் இருவரையும் சம அளவு செல்வமுள்ள (ஜாதியாக) ஆக்க வேண்டும். ஆனால், பிரபு-செல்வர்-பணக்காரர் என்பவர்களிடம் இருக்கும் சொத்துகளைப் பகிர்ந்து - தரித்திரர், வறியர், ஏழைகள் என்பவர்களான பிரிவினருக்கு (ஜாதியருக்கு) - சமவிகிதம் கொடுத்தால்தானே, ஏழை மக்கள் செல்வவான்களுக்குச் செல்வம் சேர்க்க என்னென்ன வழி உண்டோ அவற்றையும் ஏழையாக இருக்கும் மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்தால்தானே சமநிலையில் இருப்பதற்குத் தகுதி செய்ததாகும்? இப்படிச் செய்வதை விட்டு விட்டு, (பேத நிலையை ஒழிப்பது என்றால்) பேதநிலை என்ற ஓர் உருவம் செய்து அதை உடைத்து நொறுக்கித் தூள் ஆக்குவது, அல்லது ஏழை-பணக்காரன் ஒழிக என்று ஒரு காகிதத்தில் எழுதி அதை நெருப்பில்போட்டுக் கொளுத்தி சாம்பலாக்குவதா? என்று கேட்கிறேன்.
அது போலவே மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற ஓர் அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும் போது, மேல்ஜாதி - கீழ்ச்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிக பங்கையும் உரிமையையும் போக போக்கியத்தையும் கீழ் நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேனே ஒழிய, மற்றப்படி விவசாயி, குடித்தனக்காரன், கூலி ஆள், கொல்லன், தட்டான், நெசவாளி, கொல்லத்திக்காரன், செருப்பு தைப்பவன், பறை அடிப்பவன், கக்கூசு எடுப்பவன், கோயில் பூசை செய்கிறவன், வர்த்தகன், செட்டு பண்ணுகிறவன், யுத்த வீரன், சாவு - மணச்சடங்கு செய்கிறவன், அரசுப் பணி புரிகிறவன் முதலிய தொழில்களையோ, தொழிலாளி களையோ ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லையே! அறிவினால் ஒருவன் மேல்ஜாதியானால், அறிவில்லாத கீழ்ச்ஜாதியானுக்கும் அறிவு கொடுத்து கீழ்ச்ஜாதித் தன்மையை ஒழி என்கிறேன்.
உத்தியோகத்தினால் ஒருவன் மேல்ஜாதியானால், கீழ்ச்ஜாதிக்காரருக்கும் மேல்ஜாதியார் பெற்றிருக்கும் அளவுப்படியே உத்தியோகம் கொடுத்து, கீழ்ச்ஜாதித் தன்மையை ஒழி என்கிறேன். தகுதியால் ஒருவன் மேல்ஜாதியானால், மேல்ஜாதியான் பெற்றிருக்கும் தகுதியை முறையே கீழ்ஜாதியானும் பெறும் அளவுக்குத் தகுதியைக் கொடுத்து கீழ்ச்ஜாதித் தன்மையை ஒழி என்றுதான் நான் கேட்கிறேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நான் மேல்ஜாதி- கீழ்ச்ஜாதி என்று சமவிகித உரிமை கேட்பதால், கீழ்ச்ஜாதி-மேல்ஜாதி முறையை, அமைப்பை நான் காப்பாற்றுகிறவனாவேனா? இது புரியாமல் முட்டாள்களும், புரிந்த அயோக்கியர்களும் நான் ஜாதி ஒழிப்பதாகக் சொல்லிக்கொண்டு ஜாதியைக் காப்பாற்றுகிறேன் என்றால், நான் அதற்குப் பயந்து கொண்டு அந்த முயற்சியை விட்டு விடுவதா?
இந்தப் பிரகஸ்பதி யோக்கியர்களாவது, இந்தப் படியான நிலைமையை, மேல்ஜாதி-கீழ்ஜாதியை ஒழிக்க ஏதாவது வழி சொல்லிவிட்டு என்னைக் குற்றம் சொல்லுகிறார்களா?
யோக்கியமான காரியத்தைக் கேட்கும் நான் சாதியைக் காப்பாற்றுகின்றவனா?
ஆறு பேர்களில் நான்கு பச்சைப் பார்ப்பனரும், ஒரு பஞ்சமரும், ஒரு முஸ்லிமும் கூடி, பார்ப்பனர் அல்லாத சூத்திரர் நாலாம் சாதியாருக்குப் பிரதிநிதியே இல்லாத ஒரு குழு (நான்கு பச்சைப் பார்ப்பனர்கள்) சேர்ந்து, சூழ்ச்சிகரமாய்ச் சிந்தித்துச் சிந்தித்து, அரசமைப்புச் சட்டத்திலேயே நாலாம் வகுப்பாரை - சூத்திரரைத் தவிர்த்து மற்ற அய்ந்தாம் வகுப்புக்கு வகுப்பு வாரி (ஜாதிவாரி) பிரதிநிதித்துவம் எண்ணிக்கைப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த (வகுப்புவாரி பிரதிநிதித்துவ) முறையை, ஜாதியைக் காப்பாற்று என்று கருதித்தானே ஏற்படுத்தினார்கள்? இதை எந்த அறிவாளியோ, எந்த முட்டாளோ அந்த நான்கு பார்ப்பனர்களையும் அல்லது அரசாங்கத்தையும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டவில்லையே! அப்படி இருக்க, அதைவிட யோக்கியமும், அவசியமுமான காரியத்தைக் கேட்கும் நான், ஜாதி காப்பாற்றுகிறவனாவேனா? பெரிய, பெரிய நிலச் சொந்தக்காரர்களிடம் இருக்கும் பூமி ஏழை விவசாயிகளுக்கும், பூமி இல்லாதவர்களுக்கும் பூமி கிடைக்கும்படியாகச் செய்ய ஒவ்வொருவருக்கும் (மிராசுதாரருக்கும், மற்றவருக்கும்) இவ்வளவு விகிதம்தான் பூமி இருக்க வேண்டும் என்று சட்டம் செய்ததானது, மிராசுதார்-விவசாய வித்தியாசங்களை (மற்றவர்கள் என்ற) பேதங்களைக் காப்பாற்றுகிறது சர்க்கார் என்று எந்த அறிவாளியும், மடையனும் கூறவில்லையே!
இந்த நாட்டில் ஜாதியினால் கேடு இருக்கிறது என்றால், அதற்கு ஆக்கம் கொடுப்பது எது? படிப்பும், உத்தியோகமும் - அவற்றில் இருக்கும் இமயமலை வித்தியாசம் (கம்மி-ஜாஸ்தி)தானே! அதை சரிப்படுத்திக் கல்வியும் உத்தியோகமும் சமவிகிதமாக ஆக்கிவிட்டால் ஜாதியினால் ஏற்படும் நன்மை-கேடு (இழிவு-பெருமை) மறைந்து சமநிலை ஏற்பட முடியுமா? இல்லையா? அதற்குப் பள்ளியில், உத்தியோகத்தில் ஜாதி விகிதம் சமமாக (விகிதப்படி) இருக்கவேண்டும் என்று கேட்பதில் தவறு என்ன? இதனால் ஜாதி, அதாவது ஜாதிக் கொடுமை, கேடு எப்படி நிலைத்துவிடும் என்பது எனக்குப் புரியவில்லை!
ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்று நான் ஆசைப்படுவதன் காரணம் எல்லாம், அதனால் ஏற்படும் கேடு ஒழியவேண்டும், நலம் எல்லா ஜாதிக்கும் கிடைக்க வேண்டும் என்கின்ற கருத்தே அல்லாமல் வேறு என்ன என்று மற்றவர்களை மறுபடியும் கேட்கிறேன்.
------------- தந்தைபெரியார்-"விடுதலை" தலையங்கம், 17.1.1964
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அருமையான கட்டுரை தமிழோவியா அவர்களுக்கு நன்றி
Post a Comment