சபாஷ், சரியான தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மிகச் சரியான மிக உயர்ந்த தீர்ப்பினை அளித்துள்ளனர். அதன்படி பொது இடங்களில் எந்தவித ஆக்கிரமிப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற மத வழிபாட்டுச் சின்னங்களையும் நிறுவக் கூடாது. அப்படி நிறுவினால் அவற்றை உடனடியாக அகற்றிவிடலாம் (இடிக்கலாம்) என்று திட்டவட்டமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசின் சுற்றறிக்கைகளும், மாநில அரசின் ஆணைகளும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாட்டில்கூட மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர் பி.டி. தினகரன் அவர்கள் நடைபாதைக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவு பிறப்பித்தார். மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அதற்குத் தடையாணை அளித்துவிட்டனர். அது இல்லாதிருந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றிட அன்று எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கும்.
இப்பொழுது தீர்ப்பு அளித்திருப்பது உச்சநீதிமன்றம் என்பதால், கண்களை மூடிக்கொண்டு பொதுமக்கள் நலன் கண்ணோட்டத்திலும் ஆங்காங்கே மதவாதப் பிரச்சினைகளுக்கு இடமில்லாத தன்மையிலும், பொது இடங்களில் மதச் சின்னங்கள் அகற்றப்படுவது மிகவும் சரியான நடவடிக்கையே ஆகும்.
நடைபாதைகளில் இருந்த சில்லறைக் கடைகள் அகற்றப்பட்டன; குடியிருப்புகளும் இடிக்கப்பட்டன. ஆனால், கோயில்கள் மட்டும் ஆங்காங்கே செங்குத்தாக இன்னும் நின்றுகொண்டிருக்கின்றன. பார்க்கும்பொழுதே பளிச்சென்று தெரிகிறது. இது வேண்டுமென்றே விடுபட்டுள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களே, பக்திமான்கள்கூட விமர்சனம் செய்வதைக் கேட்க முடிகிறது.
தொடக்கத்தில் சிறிதாக ஒரு செங்கல்லை நட்டு வைப்பார்கள். அதன்பின் அதன்மேல் குங்குமத்தைத் தடவி, பூவையும் சாத்துவார்கள். நாளடைவில் அது ஒரு சிறிய கோயிலாகும். கோயிலின்முன் கண்டிப்பாக உண்டியல் வந்துவிடும். அதன்பின் கோயிலை எடுத்துக்கட்ட நிதி வசூல், குடமுழுக்கு இவ்வளவும் நடந்த பிறகு திடீரென்று புரோகிதப் பார்ப்பான் வந்து குதித்துவிடுவான்.
நடைபாதைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைக் கோயிலின் முன் பக்தர்கள் கூட்டம்.
இந்தக் கோயில்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையின்கீழ் வராதவை ஆகம அங்கீகாரமும் கிடையாது.
அன்றாட உண்டியல் வசூல் கல்லா கட்டப்படும். இரவு நேரங்களில் அங்கெல்லாம் கும்மாளம்தான். சமூகச் சீரழிவுக் கலாச்சாரங்கள் எல்லாம் அரங்கேற்றம்தான்.
சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. மக்கள் பெருக்கம், வாகனங்கள் எண்ணிக்கையில் அதிகம், இவற்றின் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளைக் கடப்பதற்கு வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது.
இந்த நிலையில், நடைபாதைகளில் கோயில்கள் என்றால், வழிபாடு என்றால் அது பொதுமக்களுக்குத் தொல்லையான ஒன்றுதானே.
விபத்துகள் அதிகம் நடப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. புறநகர்ப் பகுதிகளில் சாலையோரக் கோயில்கள் சில விளம்பரம் பெற்றவை. பேருந்துகள் அந்த வழியாகச் செல்லும்போது பேருந்தை நிறுத்தி, ஓட்டுநரும், நடத்துநரும் கீழே இறங்கி அந்தச் சாமிக்கு ஒரு வணக்கம் போட்டு வருகின்றனர். பயணிகளும் கீழே இறங்கி கோயில் உண்டியலில் பணம் போடுவதும் உண்டு. அவசரத்தில் ஊர் போய்ச் சேரவேண்டிய மற்ற பயணிகளுக்கு இதனால் நேர இழப்பு வேறு.
எல்லா வகைகளிலும் இடையூறாக இருக்கக் கூடிய, பொது இடத்தில் எழுப்பப்படும் இத்தகு கட்டடங்கள் உடனுக்குடன் அவ்வப்பொழுது இடித்துத் தள்ளப்படவேண்டும். இதனை மாநகராட்சியோ, நகராட்சியோ, ஊராட்சியோ சரிவர செய்ய ஆரம்பித்தால், அதன்பின் பொது இடத்தில் கோயிலோ, வேறு ஆக்கிரமிப்புகளோ எழுப்பும் எண்ணமும் மக்களிடமிருந்து அகன்றுவிடும்.
சிறப்பான தீர்ப்பினை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம். நீதித்துறை கூறிவிட்டது நிருவாகத் துறை செயல்படட்டும்!
------------------ நன்றி:-"விடுதலை" 1-8-2009


2 comments:
இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத குற்றத்திற்காக முதலில் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்
இந்தக் கோவில் பெருச்சாளிகள்.அதற்கு ஆதரவு தரும் அதிகாரிகள்.இந்திய அரசியல் சட்டத்தை ஒழுங்காகப் படிக்காமல்,அமல் படுத்தாமல்,
இதைப் போன்ற திருட்டுத் தொழில் நடத்துவோருக்கு உடந்தையாக இருப்பவர்கள்.
குடிசைகளைப் பிரித்து எரியும் போது இல்லாத இரக்கம் காளானாகப்,புற்றீசல்களாக முளைக்கும் கோவில்களுக்கு மட்டும் ஏன்?
அரசியல் வாதிகள் ஓட்டுக்கு அலைகிறார்கள்.இவர்கள் அலையவோ அடங்கவோ வேண்டியதில்லையே.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா
Post a Comment