
பெரியாருடைய இயக்கம் தொண்டறத்தை மனிதநேயத்தை பேணுகின்ற இயக்கம் கண்ணுகுடிமேற்கு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
தந்தை பெரியாருடைய இயக்கம் தொண்டறத்தை, மனித நேயத்தை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம் என்று கண்ணுகுடி மேற்கு பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
என்னுடைய சகோதரருக்குத் தான் இந்த அனைத்து சொத்துகளும் சொந்தம். இது மக்களுக்கு சொந்தமல்ல.
காரணம் என்ன என்று வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அதற்கு பகவான் வெங்கட்ட ரமண ரிஷி நான் சந்நியாசமே வாங்கவில்லை என்று சொல்லி விட்டார்.
சந்நியாசிக்கு எப்படி சொத்து இருக்க முடியும் என்று கேட்டார். நானாக வந்து இந்த மடத்தக் கட்டினேன் என்று பகவான் ரமணரிஷி சென்னார்.
சாதாரண வெங்கட் ரமணன் வெங்கட்ட கட்பண்ணி, ரமணனாகி ரமணன் பிறகு ரிஷியாகி ரமணரிஷி பகவான் ரிஷியாகி பகவான் ரமணரிஷி ஆனார்.
மற்றவர்கள் கொடுத்த பொருளை எல்லாம் என்னுடைய பொருள் என்று சொல்லி தன் குடும்பத்திற்கே சொத்தாக்கி உயில் எழுதிவிட்டுப் போனார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் தன் குடும்பத்துப் பாரம்பரியமான சொத்துகளையும் சேர்த்து தன்னிடத்திலே மக்கள் கொடுத்த 101 காலணாவையும் பத்திரப்படுத்தி வைத்தார்.
கையெழுத்துப் போடுவதற்கு நான்கணா வாங்கினார்களே! அதையும் பத்திரப்படுத்தி முடிச்சுப் போட்டு வைத்து அதைத்தான் இன்றைக்குப் பெரிய அறக்கட்டளையாக்கி, அதைத்தான் பல்கலைக்கழகங்களாக கல்லூரிகளாக, இன்றைக்கு மருத்துவமனைகளாக மக்களுக்குத் தொண்டாற்றக் கூடிய பணி நிலையங்களாக ஆக்கியிருக்கின்றார்கள்.
பெரியார் மனிதனை நினைத்த காரணத்தால் தான் விடுதலை போன்ற ஏடுகள் அறியாமையைப் போக்கி, அறிவை வளர்க்க ஆக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் நண்பர்களே!
கடவுளை மற! மனிதனை நினை! என்று சொன்ன தத்துவம் தந்தை பெரியாருடைய தத்துவம்.
அவதாரம் என்று சொன்னவர்கள் பொது மக்கள் கொடுத்த சொத்தை தனதென்று சொன்னார்கள். பகவானாக ஆக்கிக் கொண்டவர்கள்.
நான் பகவானும் இல்லை. அவதாரமும் இல்லை நான் மனிதன் என்று சொல்லி அறிவுறுத்-தினாரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் அவர் இன்றைக்குத் தன்னிடமிருந்ததெல்லாம் மக்களுக்கே கொடுத்தார். இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆகவேதான் இந்த சுயமரியாதை இயக்கம் மக்களுக்குத் தொண்டாற்றக் கூடிய இயக்கம். தொண்டறத்தை சொல்லிக் கொடுக்கக் கூடிய இயக்கம். அந்த வழிவழியாக வந்தவர் தான் பேரறிஞர் அண்ணா. அவர்களுடைய கொள்கை இன்றைக்கும் செயல்படுத்தக்கூடியவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
இந்த இயக்கம் ஆற்றுகின்ற பணிகள் ஆகவே பாரம்பரியமாக இந்த இயக்கம் செய்கின்ற அற்புதமான பணிகள் காரணமாகத்தான் மனித நேயம் இந்த நாட்டிலே அனைவருக்கும் உரிமை என்று ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாமும் என்று சொல்லக் கூடிய அந்த சூழல் பெற்றிருக்கிறது என்பதை புரிந்த இந்தக் கொள்கைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நூலகத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிப்பகத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். ஒரு நூலகம் ஒரு பள்ளிக் கூடம் இவைகள் திறக்கப்படுகிறதென்று சொன்னால் பல சிறைச் சாலைகளை மூடுவதற்கு அது சமம் என்று சொல்லக் கூடிய அளவிலே நல்ல வண்ணம் அதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லி இவ்வளவு அருமையான ஏற்பாடுகளை செய்த தோழர்களைப் பாராட்டி விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்..
---------------------"விடுதலை" 2-8-2009


1 comments:
அருமையான கட்டுரை தமிழோவியா அவர்களுக்கு நன்றி
Post a Comment