
அண்ணா - பதாகைச் சின்னமல்ல -
பகுத்தறிவு நெறிவாழ் பாசமலர்!
இன்றைக்கு அறிஞர் அண்ணாவின் 40 ஆவது நினைவு நாள். இது வரலாற்றுக் குறிப்பு. வரலாற்றில் இவ்வாண்டு அண்ணாவின் நூற்றாண்டு. அறிஞர் அண்ணா தந்தை பெரியார்தம் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன் - தளபதியாக அறிவுப் போர்க்களத்தில் ஆயுதமேந்தி, அமைதி வழி அற்புதச் சாதனைகளைக் குவித்து, குன்றாப் புகழுடன் என்றும் தனி வரலாறாகவே வாழ்பவர். அதனால்தான் அண்ணா மறைந்த நாள் அன்று மிகுந்த தொலைநோக்கோடு, அவரை உருவாக்கிய அறிவு ஆசான் நம் அய்யா அவர்கள்,
அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க! என்ற அரிய தலைப்பில், வள்ளுவர் கூறிய எவரும் பெறற்கரிய பேறு பெற்றது எனக் கூறும் அளவுக்கு,
"புரந்தார் கண் நீர்மல்கிச் சாகின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து" (குறள் 780)
என்ற புகழ் உச்சிக்கு, இராணுவத் தலைவனின் கண்ணீர் கலந்த மலர் வளையத்தைப் பெற்ற படைத் தளபதியாகியே மண்ணில் விதைக்கப்பட்டார்கள்.
அறிஞர் அண்ணா - இன்று பலருக்கும் பதாகைச் சின்னமானாரே தவிர, பகுத்தறிவு நெறியாகிய பாடமாகவில்லை. என்ன செய்வது! மலிவான அரசியலுக்கும், அந்த மாவீரனையே விலைப் பொருளாக்கி விரசமான அரசியல் நடத்துகின்றனரே!
அண்ணாவிற்கு உண்மையாக உள்ளவர்கள், உதட்டால் உச்சரிக்காமல் உள்ளத்தால் பின்பற்றும் உண்மைச் சீடர்கள் - சீலர்கள் - செய்யவேண்டியது என்னவென்பதை அன்றே அய்யா அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள்:
"1. அண்ணா மீது உண்மையான அன்பு காட்டுகிறவர்கள் அவரைப் பின்பற்றிப் பகுத்தறிவுப் பாதையில் நடக்கவேண்டும்.
2. அறிஞர் அண்ணாவின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டுமானால், அவரது பகுத்தறிவுக் கொள்கையையும், சுயமரியாதை மேம்பாட்டையும் மனதில் நிறுத்திச் செயல்படுவதுதான் அதற்கு வழிவகுக்கும்."
இவ்விரண்டும் செய்யாமல், அண்ணாவைப் பற்றிப் பேசினால் அது போலித்தனமே!
நல்வாய்ப்பாக அவரால் தனது பணி முடிக்கும் தகுதி மிக்கவர் என்று அடையாளம் காட்டப்பட்டு அன்றே பகிரங்கமாய் முன்மொழிந்த நமது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறை முதல் அமைச்சராக - இன்று தமிழ் இன மானம் காக்கும் தனித் தமிழர் ஆட்சி அமைந்ததால் பெரியார், அண்ணா விரும்பிய, விழைவுகள் செயல் திட்டங்களாகச் செப்புவதற்கரிய சட்டங்களாகி உலா வருகின்றன!
வாழ்க பெரியார்!
வாழ்க அண்ணா!!
-------------- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -3.2.2009 "விடுதலை" இதழில் எழுதியது


1 comments:
//அண்ணாவிற்கு உண்மையாக உள்ளவர்கள், உதட்டால் உச்சரிக்காமல் உள்ளத்தால் பின்பற்றும் உண்மைச் சீடர்கள் - சீலர்கள் - செய்யவேண்டியது என்னவென்பதை அன்றே அய்யா அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள்:
"1. அண்ணா மீது உண்மையான அன்பு காட்டுகிறவர்கள் அவரைப் பின்பற்றிப் பகுத்தறிவுப் பாதையில் நடக்கவேண்டும்.
2. அறிஞர் அண்ணாவின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டுமானால், அவரது பகுத்தறிவுக் கொள்கையையும், சுயமரியாதை மேம்பாட்டையும் மனதில் நிறுத்திச் செயல்படுவதுதான் அதற்கு வழிவகுக்கும்."
இவ்விரண்டும் செய்யாமல், அண்ணாவைப் பற்றிப் பேசினால் அது போலித்தனமே!//
போலித்தனத்தை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதுதான் வெட்கப்படக்கூடிய வேதனை.
Post a Comment