Search This Blog

7.2.09

கம்யூனிஸ்ட் கட்சியிடம்" சோ" ராமசாமியின் பூணூல் வாடை வீசுகிறதா இல்லையா?





யார் தலையாட்டிப் பொம்மை?



இடதுசாரிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையில் மிகக் காலங்கடந்தாவது காலடி எடுத்து வைத்து - திராவிட இயக்கப் பாதையில் - பயணம் தொடருகிறதே என்கிற ஆறுதலும், மகிழ்ச்சியும் திராவிடர் கழகத்திற்கு ஏற்பட்டதுண்டு.

ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களுக்கு கைலாகு கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பது கழகம்.

ஆனால், ஈழத் தமிழர்கள் - அவர்களைக் காக்கும் கேடயமான விடுதலைப்புலிகள்மீது காலம் எல்லாம் சேற்றை வாரி இறைத்து மார்பில் சந்தனம் பூசிக்கொண்ட இந்தக் கட்சி - இப்பொழுது திடீர் உணர்ச்சி பீறிட்டுக் கொந்தளிப்பதுபோல காட்டிக்கொண்டாலும் பரவாயில்லை, இப்பொழுதாவது நல்ல புத்தி வந்ததே என்ற நப்பாசை நமக்கு.

அதேநேரத்தில், ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொடர்ந்து நிதானமாக, சீராக பாடுபட்டுவரும், குரல் கொடுத்துவரும், போராடி வரும் திராவிடர் கழகத்தையும், அதன் தலைவரையும் கொச்சைப்படுத்தலாம் என்கிற வகையில் எகிறிக் குதிக்க முனைவது - அவர்களின் குற்ற உணர்வைத்தான் பறைசாற்றும்.

நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலிதானே அதிகம் குதிக்கும் - குற்ற உணர்ச்சி காரணமாக!

ஜனசக்தி (6.2.2009) ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் திராவிடர் கழகத்திற்கும், தி.மு.க.வுக்கும் உள்ள ஈடுபாடு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

1939 ஆம் ஆண்டே இது தொடங்குகிறது. ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்க நிருவாகக் கூட்டத்திலேயே கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிக் கிறது. அதற்கு ஈ.வெ. ராமசாமி, சாமியப்ப முதலியார், ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகி யோரை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக்கொள்கிறது என்பது முதலாவது தீர்மான மாய் நிறைவேற்றப்பட்டுள்ளது (விடுதலை, 11.8.1939, பக்கம் 3)."

இத்தகு பாரம்பரியம் உள்ள கட்சி பற்றி எழுதும்போது நிதானப் போக்கைக் கடைப்பிடித்திருக்கவேண்டும்.

அதேநேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் எப்படியெல்லாம் நடந்துகொண்டு வந்திருக்கிறது?

ஈழத் தமிழர்களுடைய ஒரு நாள் முழு அடைப்பு நடத்திட வேண்டுகோள் விடுக்கும் கட்சிகளின் பட்டியலில் இடம்பெற்ற இந்தக் கட்சி,

- இதே காரணத்துக்காக 1997 இல் நடத்தப்பட்ட முழு அடைப்பில் கலந்துகொண்டதா?

28.5.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள்கூட (தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.) பங்கேற்றன. அந்த நிலையை திராவிடர் கழகத்தால்தான் உருவாக்க முடியும் - முடிந்தது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் கூட்டப்பட்ட அக்கூட்டத்தில் பங்கேற்கக்கூட இடதுசாரிகளுக்கு (இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்) மனம் கசியவில்லை.

பங்கு கொள்ளாததோடு மட்டுமல்ல - ஜனசக்தி என்ன எழுதிற்று தெரியுமா?

தமக்குப் பந்த் நடத்த தகுதியோ, திறமையோ இல்லாத கட்சிகள் அதற்காக அறைகூவல் விடுத்தது அப்பட்டமான அகம்பாவமும், அதிகப் பிரசங்கித்தனமும், அரசியல் ஆதாயம் தேடுவதுமாகும்.

(ஜனசக்தி, 20.6.1997).

சரி, அதைவிட்டுத் தள்ளுவோம் - விடுதலைப்புலிகளைப் பற்றியும் இவர்களின் கணிப்பு என்ன?

இதோ ஜனசக்தி (20.6.1997) பேசுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழகத்தைவிடக் கூடுதல் அதிகாரம் படைத்த ஒரு மாநிலமாக தமிழர் மிகுந்து வாழும் பகுதிகள் இலங்கைக்கு சுயாட்சி அதிகாரம் படைத்ததாக வடிவெடுக்க வழிகோலும் இலங்கையின் சந்திரிகா குமாரதுங்கா அரசின் யோசனைகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர். அந்த ஆலோசனையை அமலாக்கினால் ஈழத் தமிழர் கையோங்கி விடுமென்று சிங்களப் பேரினவாதிகளும், பவுத்த மத சந்நியாசிகளும், சீடர்களும், இதர பிற்போக்காளர்களும் கூக்குரலிடுகின்றனர். இவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் எதிர்க்கட்சியினருக்கு இரு தரப்பினரும் ஆயுதமேந்திய போரில் முனைந்திருப்பதால் எப்படி தேசமே நாசமாகிறதென்பதை சந்திரிகா எடுத்துரைத்து சமாதான பாதைக்கு, அவர்களது அரைகுறை சம்மதத்தையும் வென்றெடுத்துள்ளார். இந்த அனுகூலமான சூழ் நிலையை, தக்க விதத்தில் பயன்படுத்தி, இலங்கையில் இன நல்லிணக் கத்தை உண்டாக்குவதில் அமைதி மீளச் செய்வதில் புலிகளிடம் மன மாற்றமில்லாதது வேதனையளிக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பம் தொடர் கதையாவதற்கு இலங்கையில் இன்றைய அரசு மட்டுமே காரணமல்ல, பிரபாகரனின் வகையறாவும்தான் என்பதை, தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் போலித் தீவிரங்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஏமாறுகின்றனர் அல்லது ஏமாற்றுகின்றனர்.

- இவைதான் ஈழத் தமிழர்களுக்காக விட்டேனா பார் என்று வீங்கு தோள்தட்டி வீரப்பிரதாபச் சிலம்புச் சுழற்றும் செஞ்சட்டைத் சோதரர்களின் சூரத்தனம்.

சந்திரிகா அம்மையாருக்கு ஒரு பூச்செண்டு - விடுதலைப்புலிகளுக்கு ஒரு சாட்டையடி - ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவோருக்கோ வசைமாரி.

சமாதானக் கொடியை அப்படியே ஏந்தி வந்தாராம் சந்திரிகா. இலங்கைத் தமிழர்களின் துன்பம் தொடர்கதையாவதற்கு பிரபாகரனின் வகையறாக்கள்தான் காரணமாம்.

ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவோர் யாராம்?

தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் போலித் தீவிரங்களாம் - இவற்றைப் படிக்கும்போது சாட்சாத் சோ ராமசாமியின் பூணூல் வாடை வீசுகிறதா இல்லையா?

அப்படிப்பட்டவர்கள் தமிழ் ரத்தக் கொதிப்புக்கு இப்பொழுது ஆளாகிவிட்டார்களா? போலித் தீவிரவாதிகளாகிவிட்டார்களா? என்று எதிர் கேள்வி கேட்கலாம்; ஆனாலும், கொஞ்சம் நல்ல புத்தி வந்து இருக்கிறதே என்பதற்காக அதனைத் தவிர்க்க விரும்புகிறோம்.

இன்னொன்றை எடுத்துக்காட்டினால், இப்படி கூடவா எழுதினார்கள்? இந்த அளவுக்கா புரியாமையில் புதைந்து கிடந்தனர்? என்ற கேள்வி ஏற்படாமல் போகாது.

ஈழத் தமிழர் இலங்கையின் பொறுப்பு; அவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வது அவர்கள் கடமை. நாம் தலையிடுவது, இன்னொரு நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகும்.

- அதே ஜனசக்தி இதழில்தான் இந்தக் கூத்தும், இதில் சாட்சாத் இந்து ராமின் சேட்டை பளிச்சிடவில்லையா?


சரி... இவை எல்லாம் பழைய கதை. அப்பொழுது பேதலித்து இருந்தோம்; இப்பொழுது திருந்தி நல்ல புத்தியோடு நடந்து கொள்ளக்கூடாதா? என்று கேட்கலாம் - நல்ல புத்தி நல்ல விதமாக அமைந்தால் வரவேற்கவேண்டியதுதான்.

புதினம் இணையப் பதிப்பில் (5.2.2009) ஒரு தகவல் மதுரையில் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாக அந்த இணைய தளம் கூறுகிறது.

இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்றார் தா. பாண்டியன்.

முதல் பிரச்சினை புரிகிறது. இரண்டாவது பிரச்சினை என்ன? ஒரு அரசியல் கட்சி - தேர்தலில் ஈடுபடும் கட்சி - ஈழத் தமிழர்களுக்காகப் போர்க்குரல் கொடுப்பதாகக் கூறும் கட்சி - இந்த மிக முக்கிய விழுமிய பிரச்சினையைத் தேர்தலில் ஏன் முன்வைக்க மாட்டார்களாம்?

இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவா மாட்டார்கள்?

இவற்றையெல்லாம் எடுத்துக்கூற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இடதுசாரிகளுடன் மோதல் போக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற யுக்தியாலா? அல்ல - அல்ல! திராவிடர் கழகத் தலைவர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தலைவரால் ஆட்டுவிக்கப்படும் தலையாட்டிப் பொம்மையாக இருக்கிறார் என்று ஜனசக்தி வெளியிட்ட கார்ட்டூன் தான் இவ்வளவுத் தகவல் களையும் கொண்டு வந்து இறக்கும்படிச் செய்துவிட்டது. (இன்னும் எவ்வளவோ உண்டு)

திராவிடர் கழகம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராது சொந்தக் காலில் நின்று கருத்துகளை எடுத்து வைக்கும் இயக்கம். அப்படி நிதர்சனமாக சொன்ன காரணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை யெல்லாம் சந்தித்து நடைபோடும் சமுதாயக் கொள்கை சார்ந்த ஒரு இயக்கம்.

அப்படிப்பட்ட ஒரு இயக்கத்துக்கு அரசியல் ஆதாயம் என்று சொல்வது அர்த்தம் உடையதுதானா?

யாருக்கும் கைப்பாவையாக இருந்து தீரவேண்டிய நிலைப்பாடோ, அவசியமோ இந்த இயக்கத்தின் குருதி ஓட்டத்தில் என்றைக்கும் கிடையாது. எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் கருத்துகளை மேலால் எடுத்துச் சொல்லும் வலு இந்த இயக்கத்துக்கு என்றைக்கும் இருக்கவேண்டும் என்ற அஸ்திவாரத்தில்தான் ஓட்டுக்காகக் கையேந்தும் நிலையிலிருந்து விடுபட்டு தனித்தன்மையில் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது.

மறைந்த மக்கள் தலைவர் மூப்பனார் மொழியில் கூறவேண்டுமானால், வீரமணி ராஜகுருவாகத்தான் இருந்திருக்கிறார்.

மானமிகு கலைஞர் அவர்களின் மொழியில் சொல்லவேண்டு மானால், மானமிகு வீரமணி எந்த நேரத்திலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்! என்றாரே


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்களின் நிலை என்ன?

ஈழத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு, அவரை நேரில் சென்று விவாதிப்பேன்; விளக்குவேன் என்றாரே, இதுவரை அப்படி என்ன விவாதித்தார்? - எப்படி விளக்கினார்? அவர் புத்தி தெளிந்தாரா - அல்லது அம்மையார் ஆதிக்கம் செலுத்தினாரா - அம்மையார் ஆட்டுவித்தாரா - அதன்படி இவர் ஆடினாரா - ஆடுகிறாரா?

நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்று தோழர் தா.பா. அவர்கள் கூறியிருப்பது, அம்மையாரை நினைத்துக்கொண்டுதானே?

அப்படியென்றால், யார் தலையாட்டிப் பொம்மை?

அறிஞர்கள் மட்டுமல்ல - அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்!


----------------கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் - "விடுதலை" 7-2-2009

3 comments:

பொற்கோ said...

அய்யா, உங்களுக்கெல்லாம் கட்சி நடாத்த வேண்டும் என்பது தான் முக்கியம்.மற்றவையெல்லாம் இரண்டாவது தான், அது ஈழ சிக்கலாக இருந்தாலும் சரி அல்லது எந்த சிக்கலாக இருந்தாலும் சரி.இது தான் இன்றைய நிலை.னீங்க மட்டுமல்ல எல்லோரும் அப்படிதான் இருக்கிறீர்கள்.எனவே யாரும் யாரையும் குறை சொல்லவெண்டிய தெவையில்லை.எல்லா இயக்கம் மற்றும் கட்சிகளைப்பற்றியும் மக்கள் அறிவார்கள்.

தமிழ் ஓவியா said...

பெரியார் இயக்கமாம் (கட்சி அல்ல) தி.க. வுக்கு கொள்கைதான் முக்கியம். கொள்கைவழிப்படி சரியாக செயல்படுகிறவர்களை ஆதரிப்பதும், மாறாக செயல்படுபவர்களை கண்டிப்பதும் தான் அதன் அணுகுமுறை.

நீங்கள் சொன்னது போல் மக்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்துள்ளார்கள். கோலகைச் சொல்லி அறிமுகமாகிற, மக்களால் அறியப்படுகிற ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் மட்டுமெ.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பொற்கோ

Unknown said...

//இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்றார் தா. பாண்டியன்.//

தேர்தலில் முன் வைக்காமல் வேறு எங்கு வைக்கப் போகிறார் தா.பாண்டியன்.

டி.வி.யில் விவாத நிகழ்சிகளில் தா. பாண்டியன் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். தெளிவாக பிரச்சினையை விள்க்குகுவார்.
ஆனால் இப்போது ஏன் இப்படி குழப்புகிறார். ஓட்டு வாங்குவதற்காக எது வேண்டுமானலும் செய்வாங்களா?

தா. பாண்டியன் மீது ஒரு வித வெறுப்பே வந்துவிட்டது.