
தோற்றுவித்தவர்கள் தோற்கடிக்கப்படலாமா?
ஜனதா தளம் என்ற கட்சி - மறைந்த முன்னாள் பிரதமர் - சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தேசிய முன்னணி உருவாக்கத்தில் இதற்கு முக்கிய பங்களிப்பு உண்டு.
சமூகநீதியும், மதச்சார்பின்மையும், இதன் முக்கியமான இரு கூறுகள் ஆகும். வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி - மதவாத - சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்டாலும், வி.பி. சிங் அவர்கள் தலைமையில் ஜனதாதளம் இயங்கிக் கொண்டுதானிருந்தது.
சற்றுக் காலத்திற்குப்பின் அது இரண்டாகப் பிளவுபட்டது; ஜனதா தளம் (மதச் சார்பற்றது), ஜனதா தளம் (அய்க்கிய) என்று அழைக்கப்பட்டது.
அந்த ஜனதா தளத்தின் பிற்காலத்திய போக்கு என்ன? ஜனதா தளம் (அய்க்கிய) பாரதீய ஜனதா என்ற மதவாத - சமூகநீதிக்கு விரோதமான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. அதற்குக் கண்கண்ட எடுத்துக்காட்டுதான் பிகாரில் நிதிஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) தலைமையில் இயங்கும் ஆட்சிக்கு பாரதீய ஜனதா முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிகார் மாநில ஆட்சியில் பா.ஜ.க. பங்கும் வகிக்கிறது.
பிஜு ஜனதா தளம் என்ற அமைப்பு ஒரிசா மாநிலத்தில் பிஜு பட்நாயக் தலைமையில் இயங்கிவரக் கூடியதாகும். இங்கு ஜனதா தளமும், பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது.
இம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் கை ஓங்கி பிஜு ஜனதா தளத்தை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி மதவாதக் குரோதத்தனத்தை மூளையில் நிரப்பிக் கொண்டு சிறுபான்மை மக்களான கிறித்துவர்களை மயான சூறையாடித் தீர்த்தது. (அண்மையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. பலத்த அடிவாங்கியிருக்கிறது என்பது வேறு பிரச்சினை).
முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் அமைந்துள்ள ஜனதா தளம் (மதச் சார்பற்றது) என்ற அமைப்பு கட்சியின் பெயரில் ஒட்டிக்கொண்டுள்ள மதச் சார்பற்ற என்பதை வசதியாக மறந்துவிட்டு கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கையிணைத்துக் கொண்டு ஆட்சியையும் நடத்தியது.
மகாராட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் என்று சொல்லப்படும் சரத்பவார் தலைமையிலான கட்சி, மகாராட்டிரத்தில் இந்து மதவாதத்தைப் பின்னணியாக கொண்ட - உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியுடன் (நவநிர்மான் சேனா) கூட்டு வைத்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பது குறித்து யுக்தி வகுக்கப்படுவதாகத் தகவல்கள் கசிந்துகொண்டு இருக்கின்றன.
எந்த நோக்கத்துக்காக ஜனதா தளம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் ஆணிவேரை அடியோடு வெட்டி வீழ்த்தி நெருப்பில் தூக்கி எறிவதுபோல, பாரதீய ஜனதா என்ற இந்து வெறிக் கட்சியுடன் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ கையில் உறையை மாட்டிக்கொண்டு ஒன்றுக்கொன்று முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க நிலையாகும்.
பதவி என்று வந்துவிட்டால் கொள்கைகள், கோட்பாடுகள் ஆடி மாதக் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு அவலத்தை நினைத்து வேதனைப்படவேண்டியுள்ளது.
ஜனதா தளம் என்ற ஒன்று பெயரளவில் இருக்கிறதே தவிர யதார்த்தத்தில் அது இல்லவேயில்லை.
கருநாடக மாநிலத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் அக்கட்சியிருக்கிறதென்றாலும், முன்னாள் பிரதமர் தேவேகவுடா அந்தக் கட்சிக்கு நீத்தார் நினைவு நாள் நடத்தியே தீருவது என்கிற முறையில் மும்முரமாகயிருந்து கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.
லாலுபிரசாத் அவர்களின் தலைமையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்ற ஒன்று மட்டும் உயிர்த் துடிப்புடன் இருந்து வருகிறது.
ஜனதா தளம் என்பதற்குப் பொருள் மக்கள் கட்சி என்பதாகும். இந்த நாட்டில் வெகுமக்கள் என்றால், தாழ்த்தப்பட்ட வர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினரே ஆவர். ஆனால், அதிகாரம், நிர்வாகம், கல்வி, வேலை வாய்ப்பு என்பவற்றில் இவர்கள் சிறு எண்ணிக்கையில் தான் இருந்து வருகிறார்கள். இது மாற்றப்படவேண்டும் என்பது அதன் நோக்கமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் கான்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் என்பதும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரிடத்தில்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கைக் கொண்டதாகும். அங்கும் மாயாவதி தலைமையில், கட்சியின் தோற்றுநர் கான்ஷிராம் அவர்களின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு, ஆதிக்க ஜாதியினரும் உள்ளே ஊடுருவ அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.
பதவி ஆசை காரணமாக அரசியல் நோக்கத்தோடு தோற்று நர்களின் நோக்கத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் போக்கு தலை தூக்கி நிற்பது - கொள்கைகள், கோட்பாடுகள் சித்தாந்தங்களின் மீதான மதிப்பினை மண்கவ்வச் செய்து வருவது கவலைக் குரியதாகும். சம்பந்தப்பட்ட கட்சிகளில் உள்ள இளைஞர்கள் இந்தப் பின்னணியில் சிந்தித்து, கட்சிகளை நிறுவியவர்களின் நோக் கத்தை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படவேண்டும் என்பதே நமதுவேண்டுகோள்!
----------------நன்றி;-"விடுதலை" 11-2-2009
0 comments:
Post a Comment