Search This Blog

21.2.09

இடதுசாரிகளின் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதன் நிலைப்பாடு என்ன?


மத்தளத்துக்கு இருபக்கம் இடி!

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பதாகையை முன்னிறுத்தி இடதுசாரிகள் தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு, செல்வி ஜெயலலிதாவைத் தலைவராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்த நாள் முதல் அந்த அம்மையாரின் அறிக்கைகள், நடவடிக்கைகள் குறித்து உரிய வகையில் கருத்துகளைத் தெரிவிக்கும் கடமையில் பின்வாங்கினார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மைக்காலமாக வெகு மும்முரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் - இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே கூறி வரும் கருத்துகளின் மறுபதிப்பாகவும், சில நேரங்களில் அவரைத் தாண்டியும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவிற்குப் பதில் சொல்வதில் மட்டும் பதுங்கிக்கொண்டு விடுகிறார். செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டபோது, அவரை நேரில் சந்தித்து விவாதிப்பேன்! என்றெல்லாம் கர்ச்சித்தார்.

அதற்குப்பின் நேரில் சந்தித்தார் - அப்போது இவர் என்ன விளக்கம் சொன்னார்? அதற்கு அம்மையார் என்ன பதிலடி கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் இதுவரை தோழர் தா. பாண்டியன் அவர்கள்மூலம் ஒரு சொட்டுகூட வெளி வரவில்லை - அது என்ன சிதம்பர ரகசியமோ!


நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்கப் போவதில்லை என்று தோழர் தா. பாண்டியன் அவர்கள் கூறியிருப்பது - செல்வி ஜெயலலிதாவுடன் விவாதித்த நிலையில், அம்மையாரின் ராஜபக்சே பாணி கருத்துகளை மீற முடியாத நிலையில், எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கக்கூடும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு போயஸ் தோட்டம் பக்கம் வரவேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கக் கூடும்.

தேர்தலுக்குப்பின் செல்வி ஜெயலலிதா எடுக்கும் நிலை உறுதியாக இப்பொழுதே கூற முடியாது என்றும், இன்னொரு பேட்டியில் சி.பி.அய். செயலாளர் கூறியதும் இங்குக் கவனிக்கத் தக்கதாகும்.

இப்பொழுது இன்னொரு நெருக்கடி; எந்தக் காங்கிரசை எதிர்த்து இடதுசாரிகள் வெளியேறினார்களோ, அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள, போயஸ் தோட்டக் கதவைத் தட்டினார்களோ, அந்த ஜெயலலிதா மிக வெளிப்படையாக - அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் வந்து சேர காங்கிரசுக்கு பகிரங்கமாக அழைப்புக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இடதுசாரிகள் எந்தக் கருத்தை முன்வைக்கப் போகிறார்கள்?


கூட்டணி சேர்ந்த பிறகுதான் கருத்துக் கூற முடியும் என்று சமாதானம் சொல்லக்கூடும்! அதேநேரத்தில் தத்துவப்படி, காங் கிரசுடன் செல்வி ஜெயலலிதா கூட்டணி வைத்துக் கொள்கிறார் என்பதுதானே வெளிப்படையான பொருளாகும்.

அப்படியென்றால் இடதுசாரிகளின் காங்கிரஸ் எதிர்ப்பு என் பதன் நிலைப்பாடு என்ன? யதார்த்தம் குறித்து விலாவாரியாகப் பேசக்கூடியவர்கள் இடதுசாரி தோழர்கள்.

அவர்களுக்கு காங்கிரஸ் - அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டு என்பது யதார்த்தமாகப் புரியவில்லையா? ஒருக்கால் எந்தக் காரணத்தாலோ, தேர்தலுக்குமுன் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு இல்லாமற்போகுமானால், தேர்தலுக்குப் பிறகு அம்மையார் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள இறக்கையைக் கட்டிப் பறக்கக் கூடியவர்தான். அதற்கான வாய்ப்புக்காக ஏங்கக்கூடியவர்தான் என்பது விளங்கவில்லையா?

அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வைத்துக்கொண்டது என்கிற காரணத்துக்காக அந்தக் கூட்டணியிலிருந்து தம்மை கத்தரித்துக் கொண்ட இடதுசாரிகள், காங்கிரசுடன் கூட்டுச் சேரத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வது எப்படி? கண்களைத் திறந்து கொண்டே பாழுங்கிணற்றில் விழும் செயல்தானே இது!

காங்கிரசோடு மட்டுமல்ல, தேவைப்பட்டால், மதச்சார்பின் மையைக் குழிதோண்டிப் புதைத்து அதன்மீது ராமராஜ்ஜி யத்தை உருவாக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்துத்துவா கூட்டத்தோடும் கையிணைக்கத் தயாராக இருக்கக் கூடியவர்தான் செல்வி ஜெயலலிதா.

உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்கிற நிலைக்கு இடதுசாரிகள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், கொள்கை ரீதியாக தெளிவான முடிவுகளை எடுக்கும் நிர்ப்பந்தம் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.

------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 20-2-2009

0 comments: