Search This Blog

14.2.09

காதலர் தினத்தை ஆதரிப்பவர்கள் பெண் கேலியை (ஈவ்டீசிங்) ஆதரிப்பார்களா?


நவராத்திரியைத் தடை செய்வார்களா?

பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் அண்மைக்காலமாகக் கொண்டாடப்படுகிறது.

காதல் என்பதைக் கொச்சைப்படுத்தியே பழக்கப்பட்ட இந்துத்துவாவாதிகள், காதலர் நாளையும் ஆபாசமான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.

அதன் விளைவாகத்தான் இந்த நாளில் காணப்படும் காதல் இணையர்கள்மீது தம் வன்மத்தை உமிழ்கின்றனர். தங்கள் கண்களில் காணப்படும் இணையர்களுக்கு அந்த இடத்திலேயே கட்டாயக் கல்யாணத்தைச் செய்து வைப்பார்களாம். தாலிக் கயிறைத் தயாராகக் கைகளில் வைத்துக்கொண்டு திரிவார்களாம்.

இதைவிட அப்பட்டமான பாசிசம், அத்துமீறல், உரிமை மீறல் வேறு ஒன்றும் இருக்க முடியாது.


தக்க பருவம் அடைந்த ஓர் ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்வு செய்து கொள்வது என்பது அவர்களின் சட்டப்படியான உரிமையாகும். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும்.

காதல் என்றால் கட்டிப்பிடித்துக் கொண்டு உருளுவது என்கிற ஆபாச வரைபடத்தைத் தங்கள் உள்ளத்தில் வரைந்து வைத்துக்கொண்டு, அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆத்திரப்படுகின்றனர்.

காதல் என்பது எல்லா உயிர்களிலும் நுண்மையாக ஊடுருவி நிற்கும் உன்னத உணர்வு ஆகும்.

காதல் என்பது உயிர் இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ? என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

காதல் என்றால் கடிந்து பேசும் இந்த இந்துத்துவாவாதிகள் அவர்களின் இதிகாச, புராணங்களில் எல்லாம் ஆபாசங்கள் வழிந்தோடுகின்றனவே அவற்றையெல்லாம் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அந்த நேரத்தில் சீதையின் நிலைப்பாடுகள் எப்படியெல்லாம் இருந்தன? எந்நிலைக்கு ஆளாகின என்று கம்பநாட்டாழ்வார் கசிந்துருகி வருணித்துள்ளாரே - அவற்றை எல்லாம் அனலில் கருக்கி அலைகடலில் வீசி எறிவார்களா?

இந்து மதத்தில் காமக் கடவுளான கிருஷ்ண பரமாத்வாவை கடவுள் பட்டியலிலிருந்து கழித்து விடுவார்களா?

ஆபாசத்தின் வெள்ளமாகக் காணப்படும் இந்து மதக் கோயில் கோபுரங்களையெல்லாம் இடித்துத் தள்ளி விடுவார்களா? தேர்களின் கதைதான் என்ன? இயற்கைக்கு மாறான பாலுணர்வுக் காட்சிகளை வண்ணந் தீட்டிக் காட்டுகிறார்களே - அவற்றை யெல்லாம் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்களா?

குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்றும், பெற்ற மகள் சரசுவதியையே பெண்டாண்டவன் பிரம்மா என்றும் - அவன்தான் இந்து மதத்தின் படைக்கும் கடவுள் என்றும் கொஞ்சஞ்கூடக் கூச்சநாச்சமில்லாமல் எழுதித் தொலைத்துள்ளார்களே - இவற்றையெல்லாம் ஒரே மூட்டையாகக் கட்டி இந்து மகாசமுத்திரத்தில் தூக்கி எறிந்துவிடுவார்களா?


காதலர் தினத்தை ஆதரிப்பவர்கள் பெண் கேலியை (ஈவ்டீசிங்) ஆதரிப்பார்களா என்று இந்து முன்னணித் தலைவர் திருவாளர் இராம. கோபாலன் கதறுகிறார்.

அறிவுப்பூர்வமாக அவர்கள் எதையும் எடுத்துச் சொல்வதில்லை. ஏட்டிக்குப் போட்டியாகத்தான் பேசுவார்கள்.

ஈவ்டீசிங் என்பது பெண் என்கிற ஒரே காரணத்தால் பாலியல் சேட்டை செய்வதாகும் - காதல் என்பது அதுவல்ல - விரும்பியோர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவர்கள் நட்பின் அடிப்படையில் பழகுவதாகும். விஷமம் செய்வதற்கும், நட்போடு பழகுவதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளாமல் நான்குகால் பாய்ச்சல் பாய்கிறார்கள்.

கருநாடகாவில் ராமசேனாவும், தமிழ்நாட்டில் ஏதோ அனுமான் சேனாவும் வாலை முறுக்கிக் கொண்டு கிளம்பியிருக்கின்றன - காதலர்கள்மீது வன்முறைகளை ஏவிடத் துடிக்கின்றனர். இத்தகையக் கூட்டத்தை காவல்துறை கண்காணித்து, கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்.

இந்த இந்துத்துவாவாதிகள் காதலர் தினத்தை வெறுப்பதற்கு இன்னொரு ஆழமான காரணமும் உண்டு. ஜாதியைப் பார்த்து வருவதல்ல காதல்; காதல் உணர்வு வளர்ந்தால் அது கண்டிப்பாக ஜாதி ஒழிப்புக்கு உந்து சக்தியாகவிருக்கும் என்கிற காரணத்துக் காகவும் இந்த நாளை வெறுக்கின்றனர்.

அப்படிப் பார்க்கப் போனால், நவராத்திரி என்று இந்து மதத்தவர்கள் கொண்டாடுகிறார்களே - அந்தக் காலகட்டத்தில்தான் திருமணமாகாத பெண்கள் கர்ப்பந்தரிப்பது அதிகமாகிறது என்று ஆதாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின்றன. அந்த ஒன்பது நாள்களில் அப்படியொரு "நெருக்கமாம்!" முதலில் அந்தப் பண்டிகைகளை யெல்லாம் எதிர்க்கட்டும்; ஒழித்துக் கட்டட்டும்!

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கலாச்சாரக் காவலர் களாக இந்துத்துவாவாதிகள் முண்டா தட்டுவார்களேயானால், அவர்கள் சட்ட ரீதியாக ஒடுக்கப்பட வேண்டியவர்களே!


------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 14-2-2009

6 comments:

Unknown said...

இந்துத்துவவாதிகளின் இடுப்பெலும்பை ஒடித்து நொறுக்கிவிட்டது இந்தக் கட்டுரை.

ஆ.ஞானசேகரன் said...

///இந்த இந்துத்துவாவாதிகள் காதலர் தினத்தை வெறுப்பதற்கு இன்னொரு ஆழமான காரணமும் உண்டு. ஜாதியைப் பார்த்து வருவதல்ல காதல்; காதல் உணர்வு வளர்ந்தால் அது கண்டிப்பாக ஜாதி ஒழிப்புக்கு உந்து சக்தியாகவிருக்கும் என்கிற காரணத்துக் காகவும் இந்த நாளை வெறுக்கின்றனர்///
நானும் எதேனும் இவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைதிருந்தேன்.. நல்லா கேட்டிங்க அண்ணே நாக்கு புடுங்கிறது போல...
ஈங்ங்... இவனுங்க திருந்தவே மாட்டாங்க... நாமதான் ஏதாவது செய்யனும்..

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஞானசேகரன்.

மற்றும்

தமிழ்.

Unknown said...

//தக்க பருவம் அடைந்த ஓர் ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்வு செய்து கொள்வது என்பது அவர்களின் சட்டப்படியான உரிமையாகும். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும்.//

அடிப்படை மனித உரிமை மீறல். அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிமனித சுதந்திரத்தில் மற்ரவர்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

இக்கட்டுரையைப் படித்தால் இந்துக்கலாச்சாரத்தைப் பற்றிய உண்மையான சுயரூபம் அம்பலப்பட்டு, அசிங்கமே எஞ்சியிருக்கும்.

இதுவா இந்துக் கலாச்சாரம் வேண்டவே வேண்டாம் இந்த ஆபாச அசிங்கங்கள்.

மனிதனாக வாழ்வோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுடன் ஒத்துப் போகிறேன்.

மனிதத் தன்மையற்ற இந்த வானரங்களை என்ன செய்ய :(

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்


மற்றும்

திருநாவு