Search This Blog

6.2.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் மக்களுக்குக் கூற வேண்டியது என்ன?




இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் சென்னையில் இம்மாதம் 7 ஆம் தேதியும், வெளி மாவட்டங்களில் பிப்ரவரி 8, 9 ஆகிய இரு நாள்களிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில், தமிழர்களுக்கு வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்துவதற்கு இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல அமைப்புகளும், வெவ்வேறு வகையில், உள்ள உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக் கின்றன. இதில் முட்டல், மோதல் என்பது தேவையில்லாத ஒன்றாகும்.

பிப்ரவரி 7, 8, 9 ஆகிய நாள்களில் நடக்கும் பேரணிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்பர்.

சென்னையில் நேற்று (5.2.2009) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கழகத்தின் சார்பில் எந்தெந்த மாவட்டங்களில், யார் யார் பங்கேற்று உரையாற்றுவர் என்ற பட்டியல் தனியே வெளியிடப்பட்டுள்ளது .

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் கழகத் தோழர்கள் கீழ்க்கண்டவற்றைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

(1) ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் திராவிடர் கழகம் தொடக்க முதல் எப்படி எப்படியெல்லாம் தன் கடமையினைச் செய்து வந்திருக்கிறது என்கிற விவரம் உண்மை பொங்கல் இதழில் (1.1.2009) வெளிவந்துள்ளது.

(2) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் தொடர்ந்து எழுதிவரும் அறிக்கைகள், உரைகள் இவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் வேண்டும்.

(3) இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை எது? இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் நாளும் கொன்றொழிக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தவேண்டும்.

(4) இலங்கை சிங்களர்கள் நாடுதான். இதனை ஏற்றுக்கொண்டு இங்கு வாழ்ந்தால் வாழலாம். இதை ஏற்காதவர்கள் வெளியேறிவிடலாம்; இல்லையெனில் துரத்தப்படுவர் என்று இலங்கைத் தீவின் இராணுவத் தளபதி பொன்சேகாவின் பிரகடனத்தைப்பற்றிப் பேசலாம்.

(5) ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றத்தின்மூலம் செல்லாததாக்கிய சூழ்ச்சியையும் அம்பலப்படுத்தலாம்.

(6) செஞ்சோலையில் வளரும் குழந்தைகளைக் குண்டு போட்டு அழித்தது - செம்மணியில் தமிழர்கள் புதைக்கப் பட்டது. மருத்துவமனைகள் மீதும், தஞ்சம் அடைந்த இடங்கள்மீதும் சிங்கள இராணுவம் தாக்கி அழிப்பதையும் வெளிப்படுத்தலாம்.

(7) உலக நாடுகள் இலங்கை அரசுக்குக் கொடுத்துவரும் வேண்டுகோள்களை ராஜபக்சே அரசு நிராகரித்து வருவதையும் விளக்கவேண்டும்.

(8) வெளிப்படையாக இந்திய அரசு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவேண்டும் என்று விளக்கிடலாம்.

(9) பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாறுபாடான கருத்துகளைக் கூறி, வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல், பொதுவான நோக்கத்தை மட்டும் மய்யப்படுத்தி கருத்துகளை எடுத்துக் கூறவேண்டும்.

(10) ஈழத் தமிழர்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போக்கை கைவிடவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.


பல கட்சித் தோழர்களும் பேச வேண்டிய கூட்டத்தில் 10 அல்லது 15 மணித்துளிகள் அளவில் பேசும் அளவுக்கு வரையறுத்துக் கொண்டு கழகத் தோழர்கள் உரையாற்று மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பேரணிகளில் கழகத் தோழர்கள் பெரும் அளவில் கழகக் கொடியுடன் பங்கேற்கவேண்டும் - அதற்கான ஆயத்தப் பணிகளை இப்பொழுதே மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 6-2-2009

1 comments:

Unknown said...

//ஈழத் தமிழர்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போக்கை கைவிடவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.//

நானும் வலியுறுத்துகிறேன்.