Search This Blog

3.11.08

வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் பற்றிய வரலாற்றுச் சுவடுகள்.



பார்ப்பனரல்லாதாருக்குத் தகுதி இருந்தும் வாய்ப்புத் தரப்படவில்லையே - ஏன்? என்று கோப்பில் கையொப்பம் போடுவதற்கு முன்பு கேள்வி கேட்டவர் முத்தையா முதலியார்
வகுப்புரிமைச் சிற்பி முத்தையா முதலியார் நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பழைய வரலாற்றுச் செய்திகளை விளக்கிப் பேச்சு

சென்னை, அக். 29- பார்ப்பனரல்லாதாருக்குத் தகுதி இருந்தும் ஒருவருக்குக் கூட ஏன் வாய்ப்புத் தரவில்லை என்று கோப்பில் கையெழுத்துப் போடுவதற்கு முன்பு சிந்தித்து கேள்வி கேட்டவர் முத்தையா முதலியார். வரலாற்றுச் செய்தியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கினார்.

வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் நூல் வெளியீட்டு விழா - சென்னை இராணி சீதை மன்றத்தில் 21-10-2008 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்த நாள் ஒரு குறிப்பிட்ட நாள்

இந்த நாள் ஒரு குறிப்பிட்ட நாள் என்பதை நான் தொடக்கத்திலே சொன்னேன். காரணம் என்னவென்றால் இந்த அரங்கம் அறிவார்ந்த அரங்கமாக அமைந்திருந்தாலும்கூட, மக்கள் அதற்கு ஏராளமாக வரவில்லையே என்று இங்கு ஒரு ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது. இது வெளியே சரியாக விளம்பரப்படுத்தப்படாமல் அமைந்த ஒரு நிகழ்ச்சியாக ஆகிவிட்ட காரணத்தால் மக்கள் கூட்டம் வரவில்லை. அதுதான் அதற்குக் காரணமே தவிர இன உணர்வினாலே யாரும் குறைவாக இல்லை. அல்லது நம்முடைய வகுப்புரிமையின் தந்தையான அய்யா முத்தையா முதலியாரைப் பாராட்டுவதற்கு தமிழர்கள் யாரும் தயங்கிக் கொண்டதேயில்லை.இந்த நிகழ்ச்சி சரியாக விளம்பரப்படுத்தப்படவில்லை, அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட தமிழன் மட்டும்தான் வர முடியும் போலிருக்கிறது என்ற அளவிலே இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

இங்கே பேசப்படுகின்ற கருத்துகள் எல்லாம்

ஆகவே, அதுதான் காரணமே தவிர மற்றபடி வேறு காரணம் இல்லை. ஆனால், இந்த அரங்கத்திலே இருக்கக் கூடியவர்கள் அறிவார்ந்த பெருமக்கள்.
இன்றைக்கு இங்கே பேசப்பட்ட கருத்துகள் எல்லாம் இந்த அரங்கத்திலே இருப்பவர்களுக்காகவும் இந்த அரங்கத்திலே அப்பாற்பட்டவர்களுக்காக இருக்கிறவர்களுக்கும் சேர்த்து ஒரு வரலாற்றுப் பதிவு போல இருக்கவேண்டும் என்ற கருத்தோடு இந்த நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்

முதலாவதாக தந்தை பெரியார் அவர்கள் பிறந்திருக்காவிட்டால், தமிழர்களுடைய நிலை என்ன? என்ற ஒரு கேள்வி எவ்வளவு ஒரு அடிப்படையான கேள்வியோ அதுபோல முத்தையா முதலியார் அவர்கள் பிறந்திருக்காவிட்டால் அவர் இப்படிப் பட்ட ஒரு செயலை செய்திருக்காவிட்டால் தமிழர்கள் படித்தவர்களாக, பதவியாளர்களாக வந்திருக்க முடியுமா? என்ற ஒரு கேள்வி அடிப்படையான ஒரு கேள்வியாகும். ஆகவேதான் இந்த சமுதாயத்தில் காலம் காலமாக இப்பொழுது இருக்கின்ற தலைமுறை மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறைக்கும், நன்றிக்குரியவரான பெரியார்தான் படமாக மட்டுமல்ல, நம் இனத்திற்குப் பாடமாகவும் அமைந்திருக்கின்ற, நம்முடைய அய்யா முத்தையா முதலியார் அவர்களும் ஆவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இங்கே மிகச் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கின்றார்கள். நான் மிகச் சுருக்கமாக உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

காதர் மொய்தீன் எம்.பி.

வகுப்புரிமை வரலாற்றை அவர்கள் உருவாக்கிய பொழுது எப்படி உருவானது என்பதை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் எம்.பி. அவர்கள் அழகாக அவர்கள் இங்கே சொன்னார்கள்.

முத்தையா முதலியார்

அவர்கள் அமைச்சராக இருந்தபொழுது ஏதோ ஒன்றிலே கையெழுத்துப் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று அவர்கள் கருதவில்லை. மாறாக அவருடைய துறையான பத்திரப் பதிவுத் துறையிலே இருந்து கோப்பு வந்த நேரத்திலே ஒரு கேள்வியைக் கேட்டார்கள். பதினாறு வேலை வாய்ப்புகளில் பார்ப்பனரல்லாதார் ஒருவருக்குக்கூட தகுதியே இல்லாதவர்கள், திறமையே இல்லாதவர்கள் என்று இருந்தபொழுதுதான் பார்ப்பனரல்லாதார் ஒருவருக்குக் கூட பதவி தரப்படவில்லையே ஏன்? என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ஆழமாக ஆதாரப்பூர்வமாக அவர்கள் சிந்தித்தார்கள்.

ஒரு சிறப்பான ஆங்கில அதிகாரி

அந்தக் காலத்திலே அப்பொழுது ஒரு சிறப்பான ஆங்கில அதிகாரி அவர்களுடைய சிந்தனைக்கு வித்திட்டார்கள். அதை தம்முடைய நூலிலே மிக அருமையாக பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பெரியார் திடலிலே இந்த நூலைப்பற்றி அவர்களைப் பாராட்டி , மிகச் சிறப்பான ஒரு விரிவான கூட்டத்தை நடத்த அடுத்து நாங்கள் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாற்காலி - யார் போட்ட பிச்சை?

ஏனென்றால் இது பலபேருக்குப் போய்ச் சேரவேண்டும். மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இளைய தலைமுறை யினருக்குப் போய்ச் சேரவேண்டும். இன்றைக்கு அவர்கள் அமைத்திருக்கின்ற நாற்காலி யார் போட்ட பிச்சை என்பதை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும். 1871-லே அப்பொழுது ஒரு சென்சஸ் அதிகாரியாக ஒரு ஆங்கிலேயர் இருந்தார். மிக அருமையாக அந்தச் செய்தியைப் பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் எடுத்துச் சொல்லி யிருக்கின்றார்கள். இதுதான் அவருடைய சிந்தனையைத் தூண்டுவதற்கு கருவாக அடித்தளமாக அமைந்திருக்கிறது.

1871-ல் கார்னிஷ் வெள்ளைக்கார அதிகாரி

1871-லே று.சு. கார்னிஷ் என்பவர் சென்சஸ் சூப்ரன்டெண்ட்டாக வந்தவர். அப்பொழுது இருந்த மக்களின் நிலையைப் பார்க்கின்றபொழுது அவருக்கு அதிர்ச்சி.
ஏனென்றால் உலகத்திலேயே பிறவியை அடிப்படையாகக் கொண்டு ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஒரே சமுதாயம் நம்முடைய சமுதாயத்தைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டில் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. ஏழை - பணக்காரன் என்ற பொருளாதார பேதம் இருக்கலாமே தவிர உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதத்திற்கு இடமே கிடையாது. தொடக்கூடி யவன், தொடக்கூடாதவன் என்ற பேதத்திற்கு இடம் கிடையாது.
அந்த சமூக அநீதியை அதை நிலை நாட்டியதிலே மட்டுமல்ல, கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கவே கூடாது என்ற நிலையை வைத்திருந்தார்கள். அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்கள். அதன் காரணமாக எப்படி அன்றைய காலகட்டம் அடைந்தது?

சென்சஸ் அறிக்கையில்

1871-லே எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தெளிவாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இவ ருடைய உள்ளம் தொட்டிருக்கிறது.

இதுதான் சமூகநீதி. சமூகநீதி என்பதற்கு என்ன அடையாளம்? இதுதான் சமூகநீதி - என்ன விளக்கம், என்ன அடித்தளம் என்று பார்த்து இந்த நிலையைக் கொண்டு வந்தார்கள்.
இதை அவர்கள் சொல்லியிருந்தாலும் அதற்கு உருவம் கொடுப்பதற்கு இதோ படமாக இருக்கிறாரே அந்தப் பெருமகனார் அவர்கள் - முத்தையா முதலியார் அவர்கள் தேவைப்பட்டார்கள்.

முத்தையா முதலியார் பற்றிய பல குறிப்புகள்

நீண்ட பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவரைப்பற்றி பல்வேறு குறிப்புகள் இருக்கின்றன. நீண்ட நேரம் உங்களை எல்லாம் அமர வைக்கவேண்டும் என்பதிலே எனக்கு விருப்ப மில்லை. இதிலே ஒரு சில கருத்துகளைச் சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள், இதைப்பற்றி குறிப்புகள் சொல்லும்பொழுது அவர்கள் எழுதியிருக்கின்றார். முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று ஒரு பெரிய தலையங்கமே எழுதியிருக்கின்றார். முத்தையா முதலியார் கம்யூனல் ஜி.ஓ. வைக் கொண்டு வந்தவுடனே அய்யா அவர்கள் குடிஅரசிலே தலையங்கம் எழுதி யிருக்கின்றார்கள்.
குழந்தைக்குப் பெயர் முத்தையா... முத்தையா! ஒவ்வொரு குழந்தைக்கும் கூட அய்யா அவர்கள் முத்தையா, முத்தையா என்று பெயர் வைத்தார்கள். அதைத்தான் இந்த நூலில் நீதியரசர் அவர்கள் மிகப் பொருத்தமாக எடுத்துக் கையாண்டிருக்கின்றார்கள்.
திருமுத்தையா முதலியார் அவர்கள், சர்க்கார் உத்தியோகங்களில் எல்லா மக்களுக்கும் பங்களிக்கும் படியாக ஏற்பாடு செய்தார். இதைப் பார்க்கும்பொழுது வகுப்புவாரித் திட்ட மானது கடுகளவு மனித சுபாவம் உள்ளவனும், போற்றித் தீரவேண்டியதோடு, (பெரியார் அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையும் அலங்காரத்திற்கு இருக்காது, ஆழமாக அர்த்தமுள்ளதாக எழுதுவார்கள்.

இன்னமும் உயிரை விட வேண்டியிருக்கிறது

எதுவரையில் இந்த நாட்டில் வகுப்பு உயர்வு, தாழ்வு பிரிப்பு, மத உணர்ச்சி இருக்கிறதோ (இன்றைக்கும் இது ஆழமான செய்தி. நம்மவர்களுக்கே ஒரு குழப்பம். இன்றைக்கு எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்களே, இன்றைக்கு இது என்ன தேவையா? இதுமாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கலாமா? இன்றைக்குப் பிராமின், நான் பிராமின் என்றெல்லாம் பிரித்துப்பேசலாமா? என்று ஏதோ இவர்கள் குழாய் மாட்டிக் கொண்டார்கள் என்பதற்காக, இவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டுக்குப் போய்விட்டான், படித்துவிட்டான் என்பதற்காக அல்லது இவர்களிலே ஒரு சாரார் உணர்ந்து விட்டார்கள் என்பதற்காக தங்களை மய்யப்படுத்திக் கொண்டு பார்க்கின்றார்களே தவிர, இந்தப் பரவலான ஒரு சமுதாயம் எப்படி வளர்ந்திருக்கவேண்டிய ஒரு சமுதாயம். நம்முடைய பங்கைப் பெற இன்னமும் உயிரை விட்டுப் போராட வேண்டிய நிலை இருக்கிறது என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

அதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு முன்னுரிமையோடு, எவ்வளவுத் தொலைநோக்கோடு தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். முத்தையா முதலியார் அவர்களைப் பாராட்ட வேண்டிய நேரத்திலே எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலே, அய்யா போன்றவர்கள் பிறந்து இளைஞர்களாக இருந்த காலத்திலே அய்யா அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தவுடனே அதை அய்யா அவர்கள் பாராட்டி 1929-லே எழுதி வரவேற்கிறார்கள். அதுவரை அவருக்கு நன்றி தெரிவித்துத் தீரவேண்டியதாகும்.

நன்றி தெரிவிக்கும்பொழுது சாய்ஸ் கிடையாது

(இதில் நன்றி தெரிவிக்கும்பொழுது சாய்ஸ் கிடையாது. நமது விருப்பம் கிடையாது. கட்டாயம். பார்ப்பனரல்லாத குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒரு ஆண் குழந்தைக்கு முத்தையன் என்று பெயர் வைக்கவேண்டும். ஏனென்றால் அந்த அளவுக்குப் பார்ப்பனரல்லாதாருக்கும் சட்டமாக திரு முத்தையா முதலியார் உருவாக்கிய பயனாளிக்கு வகுப்புரிமை ஆணை அமைந்துள்ளது.

பேராசிரியர் அவர்களுடைய தம்பிக்குப் பெயரே முத்தையன். அவர்தான் பிறகு அறிவழகன் ஆனார். எத்தனையோ முத்தையாக்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அந்த உணர்வுகள் வளரக்கூடிய அளவுக்கு வந்திருக்கின்றன.

பார்ப்பனர்கள் வைத்த கோரிக்கை

அதுமட்டுமல்ல, நம்முடைய நீதியரசர்களாக எஸ். நடராஜன் அவர்கள், பு.ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இன்னும் இப்படி ஏராளமானோர் வந்திருக்கின்றார்கள். முன்னேறிய சமுதாயத்தினராக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் இப்பொழுது ஒரு கோரிக்கையை அவர்களு டைய மாநாட்டிலே வைக்கின்றார்கள். என்ன அந்தக் கோரிக்கை என்று சொன்னால், எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றார்கள். நாம் யாரும் மறுப்பதற் கில்லை சமூக நீதியாளர்கள் மறுப்பதற்கில்லை.

நீங்கள் என்றைக்கும் பின்புத்திக்காரர்கள்தான்

அதை ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றோம். அப்பொழுது நாங்கள் சொன்னோம், பெரியார் தொண்டர்கள் தெளிவாகச் சொன்னோம். இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்கின்றீர்கள். நீங்கள் இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்ததே நீங்கள்தானே.

நீங்கள் எப்பொழுதுமே பின்புத்தி உள்ளவர்கள் என்பதை தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை இப்பொழுதாவது ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று மிகத் தெளிவாக கேட்டோம்.

வகுப்புரிமைச் சிற்பி முத்தையா முதலியார்

காரணம் என்னவென்றால் இன்னார்க்கு இது என்று சொன்ன ஒரு சமுதாயத்திலே அனைவருக்கும் அனைத்தும் எல்லோருக்கும் சமமாக முத்தையா முதலியார் அவர்கள் பங்கிட்டார்கள்.
அப்படிப் பங்கிடும் பொழுது பசி ஏப்பக்காரனை நன்றாகக் கவனிப்போம். கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி உரிமையை முத்தையா முதலியார் அவர்கள் எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதை வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய இந்த நூலில் இருக்கிறது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்தன

1928-லிருந்து 1951 வரையிலே எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். ஏன் - ராஜகோபாலாச்சாரியாரே முதலமைச்சராக இருந்திருக்கின்றார். அதுமட்டுமல்ல, பிரகாசம் அவர்கள் முதல்வராக இருந்தார். தென்னேட்டி விசுவநாதன் என்ற ஒருவர். கம்யூனல் ஜி.ஓ. கூடாது, அதை ஒழிக்கவேண்டும், ரத்து செய்யவேண்டும் என்று சட்டசபையிலே பேசினார்கள்.

கம்யூனல் ஜி.ஓ.விலே கை கைவைத்தால்...

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாம் வந்தபொழுது கம்யூனல் ஜி.ஓ. பிரச்சினையிலே கை வைத்தால் எந்த அரசும் நிலைக்க முடியாது. எந்த முதலமைச்சரும் நிலைக்க முடியாது என்று நினைத்து யாரும் கம்யூனல் ஜி.ஓ.வில் கை வைக்கவில்லை. பிறகுதான் திட்டமிட்டு, நீதிமன்றத்தையே பயன்படுத்தி அரசியல் சட்டத்தையே காட்டி கம்யூனல் ஜி.ஓ. வை ஒழிக்க முற்பட்டார்கள்.

ஒரு சூழ்ச்சி நடைபெற்றது

இதிலே ஒரு சூழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலபேருக்குத் தெரியாது. இங்கே நீதியரசர்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள். கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று வழக்கு வந்தது. செண்பகம் துரைராஜன் வழக்குதான் இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக 1950-லே தொடரப்பட்ட வழக்கு.

இன்னொரு கொடுமை இதில் இருக்கிறது. அதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல் சட்டத்தை எழுதிய ஆறு பேர்களில் கடைசியாக வந்த டிராப்டிங் கமிட்டி என்ற வரைவுக் கமிட்டியிலே இடம் பெற்றிருந்தவர்களில் அல்லாடி கிருஷ்ணசாமி என்று ஒருவர்.

தன்னுடைய கவுரவம் முக்கியமல்ல - தன் இனம்...


சட்டத்தையே வகுத்தவர்களில் ஒருவர் - அவ்வளவு பெரிய நிலைக்குச் சென்ற யாரும் நீதிமன்றத்திற்கு வந்து வாதாட மாட்டார்கள். ஆனால், அதில் தன்னுடைய கவுரவம் முக்கிய மல்ல. தன்னுடைய இனத்தினுடைய கவுரவம்தான் முக்கியம் என்று கருதி அவரே செண்பகம் துரைராஜன் வழக்கிலே அவர்களுக்கு ஆதரவாக இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான வழக்கிலே ஆஜராகி வாதாடினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்திலே வாதாடினார். இது பழைய கதை. ஆனால், தெரிந்து கொள்ள முடியாத, ஒளிந்திருக்கின்ற உண்மை, அதில் என்ன வென்று சொன்னால், வகுப்புரிமை செயல்படுத்தினால் எனக்கு இடம் கிடைக்காது என்று செண்பகம் துரைராஜன் சார்பிலே வழக்குத் தொடரப்பட்டது.

செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன அம்மையார்

இந்த கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். இடையிலே என்னவென்றால் செண்பகம் என்கிற அந்த பார்ப்பன அம்மையார் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு மனுவே போடவில்லை. தவறான, ஒரு பொய்யான - உண்மைக்கு மாறாக ஒரு பிரமாணப் பத்திரத்தை மோசடியாக அவர்கள் போட்டு அதை அன்றைய அரசாங்கம் கண்டுபிடிக்காமலே விட்ட காரணத்தினால்தான் - அதையே எடுத்து வாதாடாத காரணத்தால்தான் அந்த வழக்கிலே தீர்ப்பு வந்தது. இங்கே இருக்கின்ற அறிஞர் பெருமக்களுக்கு அதை சொல்லவேண்டிய அவசியமில்லை.

.... உரிமை இருக்கவேண்டும். நீ எப்படி பாதிக்கப்பட்டாய்? முதலில் அதைச் சொல். நான் இப்படி பாதிக்கப்படுகின்றேன் என்று சொல்ல வேண்டும்.

- தொடரும்.


-----------விடுதலை 29-10-08

"வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார்" நூல்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பாட நூலாக வைக்கப்படும்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் அறிவிப்பு



வகுப்புரிமைச்சிற்பி எஸ். முத்தையா முதலியார் நூல் வெளியீட்டு விழா - சென்னை இராணி சீதை மன்றத்தில் 21-10-2008 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மனுபோட்டிருந்தால் தானே பாதிப்பதற்கு?

மனு போட்டிருந்தால் தான் செண்பகம் துரைராஜன் பாதிக்கப்பட்டிருக்க முடியுமே தவிர, மனுவே போடாமல் எப்படி வழக்குப் போட்டிருக்கிறார்கள் பாருங்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு பொய் சொல்லுவார்கள்? எதையும் சொல்வார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

கம்யூனல் ஜி.ஓ. செல்லாது


அதற்குப் பிறகு கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று வந்த நேரத்திலே இங்கு நடந்ததைப்போல, முதல் அரசியல் சட்டத் திருத்தமே இந்த அடிப்படையிலே வந்தது. நம்முடைய முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புவாரி உரிமை எதை வலியுறுத் தியதோ அதை அரசியல் சட்டம் அடிப்படையாகப் பின்னர் ஏற்றுக்கொண்டது. இந்திய அரசியல் சட்டப்படிதான் பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரையிலே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்கிறார்கள்.

எல்லோரும் அரசியல் சட்டப்படிதான் பதவி ஏற்கிறார்கள்

அமைச்சர்களிலிருந்து பிரதமர் வரையிலே - குடியரசுத் தலைவர் உட்பட எல்லோரும் பதவிப் பிரமாணம் எடுக்கின்றார்கள். இந்த அரசியல் சட்டத்திலே ளுடிஉயைட துரளவஉந என்ற வார்த்தை இடம் பெற்றது என்றால், அதற்கு கரு எங்கே கிடைத்தது? அதற்கு யார் மூலகாரணம் என்றால் இதோ படமாக இருக்கிறாரே அந்த முத்தையா முதலியார் அவர்கள்தான். இவ்வளவு பெரிய அரசியல் சட்டத்திருத்தத்திற்கு ஒரு பக்கம் காரணமாக இருந்தவர்கள்.

<
உலகத்திலேயே சோசியல் ஜஸ்டிஸ் இங்குதான்

உலகத்திலேயே சோசியல் ஜஸ்டிஸ் என்பதற்கு அரசியல் சட்டத்தில் முன்னுரிமை கொடுத்து ஒரு அரசியல் சட்டம் வந்தது என்று சொன்னால் அம்பேத்கர் போன்றவர்கள் இருந்த காரணத் தாலே அந்த உரிமை வந்ததென்றால் அதற்கும் அடித்தளம் எங்கிருந்து கிளம்பியது என்றால் தமிழ் நாட்டிலே இருந்து கிளம் பியது. அதற்குரிய சிற்பியாக இருக்கக் கூடியவர்தான் - இருந் தவர்தான் நம்முடைய முத்தையா முதலியார் அவர்கள் ஆவார்கள்.

சமூக அநீதியைப் போக்கவேண்டும்

அதுமட்டுமல்ல, இந்த அரசியல் சட்டத்திலே இன்னொரு சிறப்பு உண்டு. என்னவென்று சொன்னால், அரசியல் சமூக நீதி என்பது மட்டுமல்ல, சமூக அநீதி எங்கிருக்கிறதோ அதைப் போக்கவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த சமூக அநீதியை போக்குவதற்காகத்தான் இவ்வளவு பெரிய வாய்ப்பை உருவாக்கினார்கள். எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் எல்லா வகையிலும் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். எனக்கு இன்னொரு தனிப்பட்ட முறையிலே என்ன மகிழ்ச்சி என்றால் முத்தையா முதலியார் அவர்களுடைய படத்தை நாங்கள் வழங்கினோம் என்று சொன்னார்கள்.

திராவிட நாடு பிரிவினை மாநாட்டிற்கு வந்தார்

முத்தையா முதலியார் அவர்களுடைய படத்தைக்கூட இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள். இங்கே பேராசிரியர் அவர்கள் பேசும்பொழுது கூட முத்தையா முதலியார் அவர்களுடன் மாநாட்டிலே எப்படிக் கலந்து கொண்டோம் என்பதைப்பற்றி. பேராசிரியர் அவர்கள் சொன்னார்களே, அதுபோல எங்கள் ஊரிலே - கடலூரிலே முது நகரிலே திராவிட நாடு பிரிவினை மாநாடு என்று 1947-லே தந்தை பெரியார் அவர்களுடைய கட்டளைக்கிணங்க திராவிடர் கழகத்தவர்கள் நாங்கள் நடத்திய பொழுது அதிலே நான் மாணவனாக இருந்தபொழுது முத்தையா முதலியார் அவர்கள் அந்த மாநாட்டிற்கு வந்து சொற்பொழிவாற்றினார். அந்த மாநாட்டில் நான் ஒரு தொண்டனாக இருந்து அவரை வரவேற்ற பல தோழர்களிலே நானும் ஒருவன் என்ற நிலையை நான் நினைத்துப் பார்க்கின்றேன். அதுமட்டுமல்ல, அவர்கள் எவ்வளவு சிறப்பாக உரிமையோடு இருந்தவர்கள் என்பதற்கு அடையாளம் இந்த புத்தகம்.

வகுப்புரிமைப் போராட்டம் - பேராசிரியர் எழுதிய நூல்

வகுப்புரிமைப் போராட்டம் கம்யூனல் ஜி.ஓ. என்று பேராசிரியர் அவர்கள் எழுதிய நூல். இந்த நூலிலே கூட அதைக் கையாண்டி ருக்கின்றார்கள். இந்த நூலைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் - அப்படியே இருக்கிறதென்று. இதற்கு முன்னுரை, மதிப்புரை, சிறப்புரை அளித்தவர் முன்னாள் அமைச்சர் மூதறிஞர் உயர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள். சிறப்புரை என்று இருக்கின்ற பொழுது, சட்ட ரீதியாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கின்றார். இதை மற்ற இடங்களிலே விரிவாக விளக்கமாகப் பேச வேண்டும்.

அரசியல் சட்டத்தினுடைய பிரிவு

1936-ல் அந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தாலும், சமூகநீதித் தத்துவத்தை இந்திய அரசியல் சட்டத்தினுடைய பிரிவு 16 (4), 46, 320, 335, 336, 340 ஆகியவற்றில் ஏற்கப்பட்டிருக்கின்றதென்று முத்தையா முதலியார் அவர்கள் சொல்லிவிட்டு, தகுதி, திறமை என்பது எவ்வளவு பெரிய புரட்டு, பித்தலாட்டம் என்பதை அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

எஞ்சினியரிங் கல்லூரியிலே, மருத்துவக் கல்லூரிகளிலே எப்படி நடந்தது என்பதை எல்லாம் 27-1-1951-லே அவர் மதிப்புரையாக இவ்வளவும் தந்து இதிலே அந்தச் செய்திகள் எல்லாம் இருக்கின்றன.

பேராசிரியர் ஒரு நூல் வெளியிட்டிருக்கின்றார்

முத்தையா முதலியார் அவர்களின் கம்பீரமான அற்புதமான ஒரு படத்தோடு பேராசிரியர் அவர்களுடைய நூல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதையும் - நமது பேராசிரியர் (க. அன்பழகன்) அவர்களிடம் அனுமதி பெற்றிருக்கின்றேன்; விரைவில் நாங்கள் வெளியிட இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப் படுத்திக் கொள்கின்றோம். அடுத்தபடியாக இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும். தனிப்பட்ட முறையிலே முத்தையா முதலியார் அவர்கள் எவ்வளவு சிறப்பானவர்? இதுவரையிலே வகுப்புரிமையைத்தான் பார்த்திருக்கின்றோம். முதன் முதலாக இந்தியாவிலேயே பெண்களிலே படித்த முதல் டாக்டர் யார் என்றால் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் அவர்கள்தான்.
முத்தையா முதலியார் அவர்கள் செய்த பணியை எவ்வளவு சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார் என்பதை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இந்த நூலிலே அருமையாகப் பயன் படுத்தியிருக்கின்றார்கள்.

பஞ்சமர்களுக்கும் கீழ் பெண்கள்

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களிலே வர்ணாசிரம தர்ம அமைப்பு இருக்கிறது பாருங்கள் - நம்முடைய நாட்டிலே இந்து தர்மம், வர்ணாசிரம தர்மம், மனு தர்மம் என்ற அடிப்படையிலே அமைந்திருப்பதிலே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்றும் அதற்குக்கீழே பஞ்சமர் என்று வருகின்ற பொழுது பெண்களுடைய நிலை என்னவென்றால் பஞ்சமர்களுக்கும் கீழே என்றுதான் ஆக்கியிருக்கின்றார்கள். எனவே பெண்கள் எப்படியிருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் பழைய தர்மம். ஆனால், இவருடைய சிந்தனை எவ்வளவு புரட்சிகரமான சிந்தனை என்று சொன்னால், இவருக்கு எப்படி பத்திரப் பதிவுத் துறை இருந்ததோ அதுபோல சுகாதாரத்துறையை பயன்படுத்தி முத்தையா முதலியார் அவர்கள் ஒரு மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்கினார்கள். இதைப்பற்றி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்கள் குறிப்பிட்டதை எடுத்து, அருமையாக இந்த நூலிலே கையாண்டிருக்கின்றார்கள்.

அப்போதைய அமைச்சர் திரு. முத்தையாவுக்கு பெண்டிர் பெரிதும் கடமைப்பட்டவர்கள். (வகுப்புரிமை ஒன்றுக்காக மட்டும் நாம் கடமைப்படவில்லை. ஆனால், சரி பகுதியாக இருக் கின்ற பெண்களுக்கு, அவர்களுடைய தொண்டு அவர்களுடைய தொண்டறம் எவ்வளவு சிறப்பானதென்பதை பாருங்கள்.

முதன்முதலாக பெண் இயக்குநரை நியமித்தார்

ஏனென்றால் அவர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் செய்வதன் பொருட்டு பொதுநலத்துறையில் பெண்கள் இயக்குநரை நியமிக்க ஏற்பாடு செய்தார்.
முதன் முதலாக பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்து இயக்குநரை நியமித்தார் என்ற பெருமை இருக்கிறதென்றால் அது முத்தையா அவர்கள் செய்த மகத்தான புரட்சிகரமான ஏற்பாடு. அந்த காலத்தில் பெண்கள் படிக்க வாய்ப்பே தரமாட் டார்கள். அந்த காலத்தில் பெண் இயக்குநர்கள் வந்தால்தான் - அவர்களுடைய தொல்லைகள் என்ன? மேலும் அவர்களுடைய துன்பம் என்ன என்ற நிலைகளை உணரக்கூடிய அளவிலே இருக்கும். இதை நான் சொல்லவில்லை. முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் அவர்கள் பாராட்டியிருக்கின்றார்கள். தாய், சேய்நலப் பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்.

செஞ்சிலுவைச் சங்கப் பள்ளி உருவாக்கப்பட்டது


அவர் ஒதுக்கீடு செய்த நிதியைக் கொண்டு செஞ்சிலுவை சங்கப்பள்ளி உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறார். இன்றைக்கு அது எவ்வளவு பெரிய ஆலமரமாக வளர்ந்து, எவ்வளவு பெரிய தொண்டறத்தை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறதென்று சொன்னால், வேர் எங்கேயிருந்து கிளம்பியது? அடித்தளம் எங்கேயிருந்து கிளம்பியது. பலபேர் நாம் அவரை மறந்துவிட்டோம் என்று நினைக்கின்றார்கள்.

எப்பொழுதுமே ஒரு கட்டடத்தைப் பார்க்கும்பொழுது முகப்புதான் ஆடம்பரமாகத் தெரியுமே தவிர, அதற்கு பலமான கீழே இருக்கின்ற அஸ்திவாரம் என்றைக்கும் தன்னை வெளியே காட்டிக் கொண்டிருக்காது.

ஆடாத அஸ்திவாரங்கள்

ஆனால், மேலே இருக்கிறார்கள். பலமாக இருக்கவேண்டு மானால், அந்த அஸ்திவாரம் ஆடாத அஸ்திவாரமாக இருக்கின்ற பொழுதுதான் சிறப்பானது. அடக்கமாக, அமைதியாக அவர்கள்போட்ட பாதைதான் இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக உருவாகியிருக்கிறது.
இப்படி எத்தனையோ செய்திகளை சொல்லலாம். இன்றைக் குக் கூட சமூக நீதிக்காக நீதித்துறையிடம்தான் மிகப் பெரிய அளவுக்குப் போராட வேண்டியிருக்கிறது.
இந்த மக்களுக்காகப் பரிந்து அவர் எவ்வளவு செய்திருக்கின்றார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற அருள் உள்ளத்தோடு இருக்கக் கூடியவர்கள் இல்லை. அதற்காக முத்தையா முதலியார் அவர்கள் செய்த ஏற்பாடு இருக்கிறதே அது சாதாரண ஏற்பாடு அல்ல. இதை அழகாகச் சொல்லியிருக்கின்றார்.

முத்தையா முதலியாரைத்தான் அழைத்தார்கள்

ஒரு மாநாட்டைப்பற்றி இங்கே நம்முடைய நூலாசிரியர் சொல்லுகின்றார். 1950 லே திருச்சியிலே தந்தை பெரியார் அவர்கள் வகுப்புரிமைக்காகப் பெரிய போராட்டம் நடத்திய பொழுது முத்தையா முதலியார் அவர்களைத்தான் அழைத்தார்கள்.

எங்களைப் போன்றவர்கள் இந்த இயக்கத்தின் தொண்டர்கள், தோழர்கள். அவர்கள் பங்கேற்ற மாநாட்டைப்பற்றி பேசிய உரையை எல்லாம் இங்கே இந்த நூலிலே நன்றாகப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் இருக்கவேண்டிய நூல்

உள்ளபடியே இந்த நூல் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு சமூகவியலுக்காக சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய நூல். வேறு எங்கு சொல்லிக் கொடுக்கப்படாவிட்டாலும் தஞ்சை வல்லத்திலே உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இது பாட நூலாக சொல்லிக் கொடுக்கப்படும் என்பதை அதனுடைய வேந்தர் என்ற முறையிலே கேட்டுக்கொள்ள கடமையிருக்கிறது.

ஜில்லா முன்சீப்பை நியமிப்பது அன்றைக்கு மத்திய அரசு

முத்தையா முதலியார் பற்றிய நூலில் இந்த செய்தி இருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஜில்லா முன்சீப்களை நியமிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் இருந்தது. 1937-இல் மேற்படி உரிமை மாகாண சர்க்காருக்குக் கிடைப்பதும் மாகாண கவர்னராக இருந்த ஜஸ்டின் அவர்கள் உடனே அவ்வேலைகளையும் வகுப்பு வாரி உத்தரவுக்குள்ளே கட்டுப்படும்படியாகச் செய்துவிட்டார். இதனால்தான் இன்றைக்குப் பார்ப்பனரல்லாதார் நீதித் துறையிலே உள்ளே புகக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது.

அதன்பின்தான் டிஸ்ட்ரிக் முன்சீப்பாக வர முடிந்தது

அதற்கு முன்னாலே இந்த சூழல் வந்திருக்காது. மேலும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது, அய்யா அவர்கள் சொல்லுகின்றார். அதன் பிறகுதான் நம்மவர்கள் டிஸ்ட்ரிக் முன்சீப்புகளாக வர முடிந்தது (அதுதான் முதல் படிக்கட்டு). பார்ப்பனர்கள் அப்பொழுது கூக்குரல் எழுப்பினர். பார்ப்பனர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். ஏனென்றால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இந்தத் தகுதி திறமையை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

விஷமம் செய்து பார்த்தனர். ஆனால், ஒன்றுமே பலிக்க வில்லை. (நல்ல வார்த்தை போட்டிருக்கின்றார் முத்தையா முதலியார்). கனம் ஆச்சாரியார் அவர்களாலேயே கூட அதை அடைக்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லுகின்றார்.

கனம் ஆச்சாரியார் என்று சொல்லுகிறார் - பாருங்கள். எவ்வளவு மரியாதையாகப் பேசுகிறார் பாருங்கள். இப்படி எத்தனையோ செய்திகள்.

ஜாதிக்கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை

இவ்வளவு செய்தவர்களை வெறும் ஜாதிக் கண்ணோட்டத் தோடு பார்க்கத் தேவையில்லை. அதற்கு ஒரு அற்புதமான செய்தியை நூலாசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார். சரி இவர்தானே வகுப்புரிமைக்கு அமைச்சர் - நல்ல அமைச்சராக இருக்கிறார். எதற்கு வேண்டுமானாலும் உத்தரவு போட்டுவிடலாம் என்று நினைப்பார்கள்.

அவர் பிடித்த தராசு எப்போதும் சாயாது!


இவர்களுடைய ஜாதியரான தொண்டை மண்டல துளுவ வேளாளரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று முதலியார் ஜாதியைச் சார்ந்தவர்கள் கேட்டபொழுது, நியாய உணர்வு அவருடைய மனித நேயம் அவர் பிடித்த தராசு எப்போதுமே சாயாது என்று சொல்லக்கூடிய அளவிலே எப்படி நடந்துகொண்டார் என்று பாருங்கள்!
முடியவே முடியாது, அதை நான் செய்யவே மாட்டேன், என்று உறுதியாக அவர்கள் இருந்தார்கள் என்றால் அப்படிப் பட்டத் துணிவானவர்களை அப்படிப்பட்ட நேர்மையானவர் களை வரலாறு என்றென்றைக்கும் பாராட்ட வேண்டாமா? எண்ணிப் பார்க்கவேண்டும். அதைவிட இன்னொரு செய்தி. அதிக நேரம் ஆகிவிட்டது என்பது எனக்குப் புரிகிறது. பல்வேறு செய்திகள் இருந்தாலும் கூட ஒரு செய்தியை இந்தநூலிலே அவர்கள் கையாண்டிருக்கின்றார்கள்.
--------------- தொடரும்

---------------"விடுதலை" 30-10-2008


வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியாருக்கு சிலை, அஞ்சல்தலை
அதற்கான குழுவுடன் இணைந்து முயற்சியில் ஈடுபடுவோம்
சென்னையில் தமிழர் தலைவர் முக்கிய அறிவிப்பு



வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் நூல் வெளியீட்டு விழா - சென்னை இராணி சீதை மன்றத்தில் 21-10-2008 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் (30-10-2008) தொடர்ச்சி வருமாறு:

பெரியார்பற்றி புதுவை சிவம் வெளியிட்ட நூல்


தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒரு தொகுப்பு நூலை புதுவை சிவம் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த நூல் எங்களிடத்திலே இருக்கிறது. அது வேறு செய்தி. ஆனால், வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் என்ற இந்த நூலிலே பின்னிணைப்பு - அய்ந்து என்ற தலைப்பிலே ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றார் நூல் ஆசிரியர்.
உண்மையான மனித இனத்திற்கே
உயர்ந்தவர்கள்
இதிலே மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சொல்வதற்குப் பயப்படக்கூடிய ஒரு உண்மையை முத்தையா முதலியார் அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர்கள்தான் நேர்மையானவர்கள். அவர்கள்தான் சிறந்த பகுத்தறிவாளர்கள். அவர்கள் தான் உண்மையான - மனித இனத்திற்கே வழிகாட்டிய உயர்ந்தவர்கள்.

பெரியார் ராமசாமிபற்றி முத்தையா முதலியார்

அந்த வகையிலே சொல்கின்றபொழுது இந்த நூலிலே 196-ஆவது பக்கத்திலே சொல்கின்றார் - பெரியார் இராமசாமி பற்றி முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் அவர்கள் என்ற தலைப்பிலே ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அதைப் படிக்கிற பொழுது எங்களுக்கெல்லாம் கூட இவ்வளவு துணிச்சல் அந்தக் காலத்திலே இருந்திருக்கிறதே என்று ஆச்சரியப்படக் கூடிய அளவிற்கு, வியப்படையக் கூடிய அளவிற்கு அவர்கள் அழகாக மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். அதில் உள்ளதைப் படிக்கின்றேன்.

மகாத்மா எனும் சொல் - காந்தியாருக்கே
பெரியார் எனும் சொல் - ஈ.வெ.ரா.வுக்கே


பெரியார் இராமசாமிக்குக் கருத்துரை தர, திருவாளர் சிவப்பிரகாசத்தின் வேண்டுகோளை உவப்புடன் ஏற்கிறேன். மகாத்மா எனும் சொல் காந்தியாருக்கே சிறப்புப் பெயராக உரித்தாய்விட்டதுபோல, பெரியார் எனும் சொல், ஈ.வெ.ரா.வுக்கே இந்நாட்டில் உரித்தாய் விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. சிறை சென்று காங்கிரசு கவர்ன்மெண்டின் காருண்யத்தினால் - எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு முத்தையா முதலியார் சொல்கிறார் பாருங்கள். இவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவர்களுடைய நகைச்சுவை உணர்வை பாருங்கள்.

1947-இல் சொல்லியிருக்கின்றார். மாநாட்டிற்கு வந்து பட்டங்களை எல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லுகின்றார்கள். மற்றவர்கள் பாராட்டுத் தெரிவித்துப் பேசுகின் றார்கள். அதற்கு முத்தையா முதலியார் நன்றாகப் பதில் சொல்லியிருக்கிறார். செத்துப் போன அந்தப் பட்டத்தை நாம் விட்டால் என்ன? வைத்திருந்தால் என்ன? ஆகவே உயிரில்லாத பட்டத்தை நாம் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று நகைச்சுவையோடு சொன்னார் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பெல்லாரி ஜெயிலில் வதியும்பொழுது கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை மகாத்மாவென்று அழைப்பது போல, தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான பெரியார் என்றே அழைக்கவேணும், அச்சொல் அவருக்கே தனிச் சொல்லாக வழங்க வேண்டுமென்று சொன்னது - இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்தது பற்றி மகிழ்ச்சி. அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது மேலும் மகிழ்ச்சி.

இவ்விருவருக்கும் உள்ள சில பொருத்தங்கள்

இவ்விருவருக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன். (மகாத்மா காந்தி அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். சாதாரணமாக மற்றவர்களால் சுலபமாக சிந்திக்க முடியாதது. சிந்தித்திருந்தால் சொல்வதற்குத் தைரியம் வராது. அவர் சிந்தித்ததனால்தான் சொல்லுகின்றார்).

மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொது நல ஊழியத்தில் ஈடுபட்டார். அப்படியே, பெரியாரும், தம் பெரிய லாபகரமான வியாபாரத்தையும், பல பொது ஸ்தாபனங்களின் தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார்.

இருவரும் பல முறை சிறை சென்றார்கள்

அன்னிய ஆங்கிலேயே ஆட்சியை ஒழிக்க இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளனர். மகாத்மாவின் மனைவி சிறீமதி கஸ்தூரியம்மையாரும், மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி சிறீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியார் கதர் நூல் நூற்றார். பெரியாரும் நூல் நூற்றார். மூட்டையை தலையில் சுமந்து கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தைம், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியாரும் அக்கொள்கைகளை ஏற்று அவ்விதமே நடந்து அறிவுரை பரப்புதல் செய்கிறார். இனி இருவருக்கும் உள்ள வேற்றுமைகள்
இதுவரையில் முத்தையா முதலியார் அவர்கள் ஒற்றுமையை சொல்லிவிட்டார். எப்படித் தீர்ப்பு எழுதினால் - ஒரு தீர்ப்பில் ஒற்றுமை, வேற்றுமை இருக்கும்பொழுது, ஒற்றுமையை சொல்லும்பொழுது ரொம்ப சுலபம். ஏனென் றால் இதில் பெரிய பிரச்சினை இருக்காது. ஆனால், வேற்றுமை என்னவென்று சொல்லும் பொழுது அவருடைய பார்வை எவ்வளவு சரியாக இருந்தது? இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 55, 60 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்கிறார்கள். மேலும் அவர் சொல்கிறார். இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்கிறேன்.

மகாத்மா எளிய வாழ்வு என்று சொல்லிக்கொண்டே

மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக்கொண்டு மன்னரும் பெற்று மகிழக்கூடிய சுக வாழ்வு பெற்று வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில், நிமிஷம் தவறாமல் ஸ்நானம், உணவு, பானம், படை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப் பால் என்றால், ஆடே உடன் பிரயாணம் செய்யவேண்டும்.

தனி ரயில் - அரண்மனை ஒத்த விடுதிகள்

பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலும் உண்டு. பணிவிடையாள்கள் காரியதரிசிகள் உட்பட எவரும், மூன்றாவது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும், சில சமயங்களில் தனி ரயில்கள்கூட சென்ற விடங்களிலெல்லாம் அரண்மனையை யொத்த விடுதிகள்! பங்கீ காலனியானாலும், முன்னதாகவே லட்ச ரூபாய் செலவில் வசதிகள் செய்த பிறகு, நடக்கும்பொழுது கைவாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்ட இருந்து பழகிய வர்கள் சொல்வது பலவிருக்கலாம்.

பெரியார் கதை என்ன?

பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக் கூடிய நிலையில் துன்பத்தை அடைந்து பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்கா விட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5 நாட்களுக்கு இல்லாமலே போனாலும் போய்விடும், கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது (பிறர்). நினைத்த நேரத்திலெல்லாம் பேச வேண்டியது. தொண்டை காய்ந்து கால்கடுக்கும் வரையில். மூன்றாவது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக் கூட இட மிருக்காது - கூட்டம். தப்பித்தவறி மேல்வகுப்புக்குப் போனால், அங்கும் அப்பொழுது அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை.

ஜாகை சவுகரியமிருந்தால்....!

தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ள வேணும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர் இருவர் இவ்வளவுதான். சென்றவிடங்களில் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை சவுகரியமிருந் தால், அங்கும் 20 பேர் கூட்டம். உறங்க ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுதுதான் தன்னுடம்பும் தசை நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகிறது. காங்கிரசில் முழுமையும் ஈடுபட்டு நடந்து வரும்பொழுது காஞ்சிபுரம் மாநாட்டில் இந்த ஸ்தாபனத்தினால் தமிழருக்கு நலன் கிடைக்காது.

பெரியார் அதைவிட்டே விலகினார்

திராவிடருக்குத் தாழ்மையும், தீமையுந்தான் உண்டாகு மென்று இருவரும், திரு.வி. கல்யாண சுந்தரமுதலியாரும் கண்டு கொண்டார்கள். பெரியார் அதைவிட்டே விலகினார் என்று இப்படி பல செய்திகளை மிகத் துணிச்சலாக எழுதியிருக்கின்றார்கள்.
எனவேதான் முத்தையா முதலியார் அவர்கள் உண்மையைப் பேசத் தயங்காதவர்கள். தன் மனதில் பட்டதை ஒளிக்காமல் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற உத்தமர்.
சமுதாயத்தினுடைய அனைத்து மக்களுக்கும் சுகவாழ்வு வாழவேண்டும் என்பதை எண்ணியவர்கள். இன்றைக்கு ஓரளவுக்காவது பார்ப்பனரல்லாத மக்கள் சிறந்த பதவிகளிலே இருக்கிறார்கள்.

சமுதாயம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது

நல்ல பட்டங்களை பெற்றிருக்கின்றார்கள் என்று சொன்னால், அதற்கு சமுதாயம் முழுவதும் நன்றி செலுத்த வேண்டிய ஒருவர் உண்டென்றால் அவர்தான் படமாக இன்றைக்குக் இருக்கக் கூடிய இந்த விழா நாயகராக இருக்கக் கூடிய முத்தையா முதலியார் அவர்கள்.
அவர்களுக்கு சிலை இல்லையே, அவர்களுக்கு நினைவுத் தபால் இல்லையே என்று சொன்னார்கள்.
இன்னும் ஒரு ஆண்டுக்குள்ளேயே
முத்தையா முதலியார் சிலை
நிச்சயமாக திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு ஆண்டுக்குள்ளாக நம்முடைய நீதியரசர் அவர்களையே முத்தையா முதலியார் சிலை அமைப்புக் குழுவுக்குப் புரவலராக நியமித்து, சென்னை நகரிலேயே சிறப்பான இடத்திலே சிலை எழுப்புவோம் என்பதை எடுத்துச் சொல்லி அவர்கள் முன்மொழிந்தார்கள். இப்பொழுதுதான் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய முயற்சியினாலே திராவிட இயக்கத் தலைவர்கள் சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், டாக்டர் நடேசனார் இவர்களுக்கெல்லாம் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப் பட்டிருக்கிறது. அதேபோலத்தான் அடுத்து முத்தையா முதலியார் அவர்களுக்கும், அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிடுவதற்கு எங்களைப் போன்றவர்கள் கடுமையான முயற்சி எடுப்போம் என்பதை எடுத்துச் சொல்லி, நல்ல அருமையான முயற்சி எடுத்த நீதியரசர் அவர்களுக்கு நாங்கள் எல்லோருமே கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

இன உணர்வு தழைக்க சமூக நீதிக் கொடி பிடிக்க

நீதியரசர் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து சிறப்பாக இருக்க வேண்டும். அதுபோல அவர்களுடைய பெயர்த்திதான் நன்றி சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுடைய பெயர்த்தி யின் துணைவர்தான் மேனாள் துணைவேந்தராக இருந்த டாக்டர் கலாநிதி அவர்கள். அவர் இன்றைக்கு 60-ஆவது ஆண்டை பெற்றிருக்கின்றார் என்ற நிகழ்ச்சியும் இருக்கின்றது.
அவர்களும் பல்லாண்டு காலம் வாழவேண்டும். நல்ல முயற்சி எடுக்க வேண்டும். இன உணர்வு தழைக்க வேண்டும். சமூக நீதிக்கொடி அன்றைக்கு ஏற்றப்பட்டது. அது என் றைக்கும் இறங்காது. அந்தக் கொடி என்றைக்கும் பட்டொளி வீசி பறந்துகொண்டே இருக்கும். அதுதான் முத்தையா முதலியார் அவர்களுக்கு நாம் செய்கிற நிரந்தரமான ஒரு அற்புதமான நினைவுச் சின்னம் என்பதைக் கூறி முடிக்கிறேன்.
ஆங்கிலத்தில் கூட சிறப்பாக கே.எம். பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதியிருக்கின் றார்கள்.
அந்த ஆங்கில நூலைக்கூட நாங்கள் பதிப்பித்து வெளியிட இருக்கின்றோம். அந்த செயல்களையும் சொல்வதற்கு நேரமில்லை. எனவேதான் நீங்கள் அதை எல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இளைஞர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-------------- "விடுதலை" 2-11-2008

0 comments: