
களத்தில் கழக மாணவர்கள் பகுத்தறிவு - ஏன் - எதற்காக?
கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படி இல்லாமல் கடவுளுக்கும் மோட்சத்திற்குப் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி
குடிஅரசு 7.9.1930
சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால், சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்க வேண்டுமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும், சர்வ வியாபாரமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்
குடிஅரசு 25.9.1930
பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தைமுன்னிட்டும் இந்தியாவில் இனி அரை க்ஷணம்கூட இருக்கக் கூடாதவையாகும்
குடிஅரசு 5.10.1930
இதுபோன்ற மணி மணியான - தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை முத்துக்கள் குவிந்து புன்முறுவல் பூக்கக் கூடியதுதான் பகுத்தறிவு, ஏன், எதற்காக? என்ற நூலாகும்.
120 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சராசரி வயது 30 என்கிற அளவில் முடங்கிக் கிடந்த இந்திய மனிதன் இன்றைக்கு 65-அய்க் கடந்து விட்டான். (ஆண்களின் சராசரி வயது 63.9; பெண்களின் சராசரி வயது 66.9 இப்பொழுது)
கடவுள்தான் ஆயுளை நிர்ணயித்தான் என்று மதவாதிகள் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே. அவர்களை நோக்கி அழுத்தமாக நாம் வைக்கும் வெடிகுண்டு வினா இதுதான்.
30 எப்படி 65-அய் தாண்டிற்று? அன்று கடவுளுக்குக் கெட்ட புத்தி - இன்று நல்ல புத்தி வந்து சேர்ந்து விட்டது என்று கூறப் போகிறார்களா?
நான் ஒரு நிமிடம் அரசனாகயிருந்தால் புத்தியை நாசப்படுத்துகிறவனுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்றார் பெரியார்.
அறிவு இருந்தும் பூர்ண ஏழையாக மனிதன் ஆனதற்குக் காரணம் அந்த அறிவைத் தடை செய்யும் கடவுள் நம்பிக்கைதானே!
மனித சமுதாயத்துக்கு யோக்கியமாக தொண்டு செய்பவன் எவனும் இந்தக் கடவுள் ஒழிப்பில் இறங்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார்.
மூலதனமான மூளைதனம் நம்மிடம் இருந்தும் அதனை மூலைதளத்திலே கூட்டி ஒதுக்கிடுவதைக் கண்டு தார்மீகக் கோபம் கொண்டு கொந்தளித்து எழுந்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
கடவுளை மற - மனிதனை நினை என்றார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றார்.
பகுத்தறிவு, ஏன், எதற்காக என்ற அய்யாவின் நூலை அகிலத்திற்கும் எடுத்துச் சென்று பரப்ப வேண்டும்.
திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள் ஒரு அருமையான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விட்டனர்.
தமிழர் தலைவரின் பவள விழா நிறைவினை ஒரு கொள்கைப் பரப்புச் செயல்பாட்டுக்கான ஒரு உந்து சக்தியாகக் கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் பிரதிகளைக் கொண்டு சேர்ப்பது என்கிற ஒரு முனைப்புத் திட்டத்தில் (intensive compaign) களம் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் அனைத்துக் கழக மாவட்டங்களுக்கும் தேனீக்களாய்ப் பறந்து சென்று கழகப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து வந்துள்ளனர்.
தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி அந்தப் பத்தாயிரம் நூலுக்கான தொகையை அவரிடம் ஒப்படைக்கவிருக்கின்றனர்.
கடந்த பவள விழா ஆண்டில் விடுதலை சந்தாக்களை ஆயிரக்கணக்கில் அளித்து அவர் மனதைக் குளிர வைத்தோம் இவ்வாண்டோ அய்யாவின் பகுத்தறிவு நூலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அவர் முகத்தினை முழு மகிழ்ச்சியில் மலர வைக்கும் ஏற்பாடு இது.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கெல்லாம் அடேயப்பா பிறந்த நாளாம்! எத்தனை எத்தனை வண்ண வண்ண சுவரொட்டிகள், அமர்க்களம்!
அந்தப் பட்டியலில் நாம் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே நமது தலைவர் உறுதியாக இருக்கிறார்.
வேண்டுமானால் கொள்கைப் பிரச்சாரத்திற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியோடு ஒரு அரும்பெரும் செயல்பாட்டில் கழக மாணவ மணிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கழகத் தோழர்களே, பொறுப்பாளர்களே, கழகப் பிரச்சாரம் சுழன்றடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அருமைத் தோழர்களே,
இதோ ஒரு அரிய வாய்ப்பு! அய்யாவின் கொள்கை பட்டி தொட்டிகளில் எல்லாம் மணக்க இதோ ஒரு பகுத்தறிவுச் சோலை அறிமுகம்!
உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்கள் முகாமுக்குக் கொண்டு சேருங்கள்.
120 பக்கங்கள். நன்கொடை வெறும் 40 ரூபாய்தான். நமது பிரச்சார நிறுவனத்தைப் போல இவ்வளவு மலிவு விலைக்கு யாரும் அளிக்க முடியாது.
ஒரு காட்சி சினிமாவைப் பார்ப்பதற்கு அய்ம்பது, நூறு என்று செலவு செய்யப்படுகிறது. அதைவிட அறிவு கொளுத்தும் ஒரு நூல் விலை எவ்வளவு? வெறும் நாற்பது ரூபாய்தான் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
பெரியாரின் நூல்! பெரியாரின் நூல்! என்ற பேச்சே எங்கும் கேட்க வேண்டும்.
பொது இடங்களில் முழக்கமிட்டேகூட விற்பனை செய்யலாம் - பிரச்சார நோக்கத்திற்காக புதிய அணுகுமுறை தேவைதானே!
சட்டம் படிக்கும் மாணவர்களிடத்தில்கூட ஜாதி சத்தம் கேட்கும் இந்தக் கால கட்டத்தில் இப்பொழுது இருக்கிற ஒரு நம்பிக்கை தந்தை பெரியாரியல்தான் - தத்துவம் தான்! இந்தச் சமுகப் பொறுப்புணர்ச்சியை அய்யா தந்த அறிவுச் சுடரை தமிழர் தலைவர் தலைமையில் மூலை முடுக்கெல்லாம் ஏற்றுவோம். வாரீர்! வாரீர்!
கடவுளும், கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்ப்படுத்தி பகுத்தறிவற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனை துக்க ரூபமாகவும், கவலைக்களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது
மனிதன் முதன் முதலில் தவறிப் போன இடம் இதுவேயாகும்.
- தந்தை பெரியார் (இந்நூல் பக்கம் 76)
----------------கறுஞ்சட்டை -"விடுதலை" 16-11-2008
0 comments:
Post a Comment