Search This Blog

20.2.08

நீதி கெட்டது யாரால்? நூலை எழுதியது யார்?

1959 -நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். 1958-இல்தான் அய்யாமீது அய்க்கோர்ட் அவமதிப்பு வழக்கும் அவர்கள் அளித்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த அறிக்கையும், உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகளிலும் பார்ப்பன நீதிபதிகளின் மனு தர்ம மனப்பான்மையுடன் ``ஒரு குலத்துக்கொரு நீதிப் பாங்குடன் தீர்ப்புத் தந்தவைகளையெல்லாம் தொகுத்து ஓர் கட்டுரையாக - ஆதாரப்பூர்வமாக எழுதி ``நீதி கெட்டது யாரால்? என்று தலைப்பிட்டு அய்யா அவர்களிடம் காட்டினேன். அதை மிகவும் கவனத்துடன் படித்த தந்தை பெரியார் அவர்கள் அதனைப் பாராட்டிவிட்டுச் சொன்னார்கள்.

``இது கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. ஆனால், விசயங்கள் மிகவும் சிறப்பானவை. விளைவுகள் இதற்கு ஏற்படலாம். நீங்களோ மாணவர். உங்களுக்குத் தொல்லை வரக்கூடாது என்று நான் கருதுவதால் இது என் பெயரிலேயே, நான் எழுதியதாக வெளியிட-லாம். அப்போது அதற்கு வெயிட்டும் அதிகம் ஏற்படும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் - கன்டெம்ப்ட் என்று என்னைச் சாரட்டும் - என்று கூறி அதை அவர்கள் எழுதுவதாகத் திருத்தம் செய்யச் சொன்னார்கள். அப்படியே சில சொற்கள் மாற்றம் உட்பட, செய்து எழுதினேன். விடுதலையில் தலையங்க அறிக்கையாக ``நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் வெளி வந்தது. அதனை வாசகர்கள் பலரும் பாராட்டினர்.

வேலூரில் ஒரு கழகப் பிரமுகர், அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அவரது நண்பர்களும் அய்யா அவர்களிடம் சென்று இந்த அறிக்கைக்காக நேரில் பாராட்டுத் தெரிவித்தார்கள். (அவர் என்னைப்பற்றி எக்காரணத்தாலோ கொஞ்சம் வெறுப்பை வளர்த்துக் கொண்டவர் - அதுவும் அய்யா அறிந்ததே). அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, அவர்கள் புகழ்ந்து கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து-விட்டு அதுபற்றி ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கெல்லாம், அவ்வறிக்கையை நான் எழுதவில்லை. அதை எழுதியது யார் தெரியுமா? வீரமணி.

அது கடுமையாக இருப்பதால் சட்டத்தின் விளைவிலிருந்து அவரை விடுவிக்க நானே என் பெயரைப் போட்டு வெளியிட்டு விட்டேன் என்றார். எதையும் ஒழிக்காத ஒளி அல்லவா அவர்.
இந்தத் தொண்டர் நாதனை தூய தலைவனைப் போல வேறு எங்கே பார்க்க முடியும்-?

------ தி.க.தலைவர் கி. வீரமணி
(விடுதலை பொன்விழா மலர், 1984)

0 comments: