Search This Blog

27.2.08

பெரியார்,அம்பேத்கர் பார்வையில் "தேசியம்"

1. தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

1932 இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை


2. உழைக்கும் வர்க்கங்களை ஆட்கொண்டிருக்கும் மூன்றாவது நோய் ‘தேசியம்' என்ற முழக்கத்திற்கு அவர்கள் மிக எளிதில் மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பல நேரங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்தத் தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது, அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்றத் தியாகங்களால் கருவாகி உருவான அரசு, இவர்களது முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி, இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

-------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து

0 comments: