(ஓணம் பண்டிகை என்பதும், அதுபோன்ற தசாவதாரம் என்பதெல்லாம் ஆரியர்கள் திராவிடர்களை அழித்த சூழ்ச்சிதான் என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை இது).
மலையாள நண்பர்கள் கொண்டாடும் ஓணம் திருவிழாபற்றி முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான கருத்தினை எடுத்து வைத்துள்ளார்: (முரசொலி, 5.2.2008).
கேரள நாட்டை மாவலி மன்னன் என்பவன் ஆண்டு வந்தான். மக்கள் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவு செய்து ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சியில் சாதனை இல்லாத நாள்களே இல்லை. அவனை அப்படியே விட்டுக் கொண்டு போனால் பிறகு அவனை வெல்ல முடியாமல் போய்விடும். தேவாதி தேவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் ஆகிவிடும். அதனால் அவனை உடனடியாக ஒழிக்கவேண்டுமென்று திருமாலிடம் போய் முறையிட்டார்கள். உடனே திருமால், மாவலி மன்னனை தந்திரமாக மாளச் செய்துவிட்டார். அவன் சாகும்போது திருமாலிடம் ஒரு வரம் கேட்டான். நான் இறந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடவேண்டும். அன்று நான் கேரளாவுக்கு வந்து என் நாட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடன் குதூகலமாக இருக்கவேண்டும் என்று கேட்டான். திருமாலும் அதற்கு இணங்கி அவ்வாறே அருள் புரிந்தார். அந்த நாள்தான் மாவலி மன்னன் புகழ்பாடும் ஓணம் பண்டிகை - பூத உடலைப் புதைத்தார்கள் - மாவலியின் புகழ் உடலை அந்தப் புல்லர்களால் புதைக்க முடிந்ததா? முடியவில்லை என்பதால்தான் ஓணம் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் கலைஞர் எழுதியுள்ளார்.
இந்த மாவலிச் சக்ரவர்த்தி கதையை மராத்தியத்தில் 19 ஆம் நூற்றாண்டில் சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே அவர்களால் அந்த நாட்டின் சுயமரியாதை இயக்கம்போல் - தோற்றுவிக்கப்பட்ட - சத்திய சோதக் சமாஜ் என்ற உண்மை விளக்க இயக்கம் என்ற சமுதாயப் புரட்சி இயக்கம் பிரச்சாரம் செய்தபோது,
ஆரியர்கள் சூத்திரர்களை எப்படி அழித்தனர் என்பதற்கான உருவகம்தான் 10 அவதார கதைகள்; அதில் வாமன அவதாரம் - மாவலி மன்னனின் மண்ணைப் பறித்த சூழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள் அறிய வேண்டும் என்று விளக்கி, மாவலி மன்னனை நினைத்து - மாவலிச் சக்ரவர்த்தியின் திருவிழாவை - பண்பாட்டுப் புரட்சி விழாவாக, பார்ப்பனரல்லாத சூத்திர, ஆதி சூத்திரர் எழுச்சி நாளாகக் கொண்டாடவேண்டும் என்று பரப்பி, மராத்திய மாநிலம் முழுவதிலும் அவரது காலத்திலும், அவருக்குப் பின்னும் கொண்டாடிடச் செய்தனர்.
தந்தை பெரியார் அவர்கள் எப்படி தீபாவளி போன்ற விழாக்கள் நம்மை - நரக அசுரனை, கிருஷ்ணன் (தேவர்களுக்குத் தலைவர்) சூழ்ச்சியால் கொன்றான் என்பதைப்போல மாவலி ராஜாவை வீழ்த்தியதை நினைவூட்டி மாவலி ராஜாவுக்கு விழா எடுப்போம் என்றார் - 1880 -களில் மராத்திய மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே.
அதுபோன்ற ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ள ஈரோட்டுக் குருகுலத்தின் இணையற்ற மாணவர் மானமிகு சுயமரியாதைக்காரரான நமது கலைஞர் அவர்கள்.
பத்து அவதாரங்கள் ஆரியர்களின் சூழ்ச்சியே!
10 அவதாரங்கள் என்பது, இதே ஆரியம் நம்மை அழித்த கதைதான் என்பதை தந்தை பெரியார் அவர்களும் விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.
(ஜோதி பாபூலே கருத்தினை அறியாமலேயே அது இவரது சிந்தனையில் உதித்ததாகும்).
ஜோதி பாபூலேபற்றிய ஆய்வு செய்ய வந்து, பிறகு மராத்தியத்திலேயே குடியேறிவிட்ட சமூக விஞ்ஞானியான திருமதி கெயில் ஆம்வெட் (Gail Omvedt) அம்மையார் இதுபற்றி,
The Culmination was Phule’s emphasis on Bali-Raja, King Bali. This was in a sense his reply to the elite’s use of Ram, Ganabathi, or Kali; it was a symbol that united Maharastrian peasant masses with the tales of Ariyan Invasiouns. (“Cultural Revolt in a Colonial Society” - The Non-Brahmin Movement in Western India; 1873 to 1930) என்ற நூலின் 114 ஆம் பக்கம். என்று எழுதியுள்ளார்!
இதன் தமிழாக்கம்: இதன் முடிவாக, மகாத்மா ஜோதிபா பூலே, மாவலி அரசரை உயர்த்திக் காட்டினார். சமுதாயத்தில் உயர்மட்டத்தினர், ராமன், கணபதி, காளி ஆகியோரைப் பற்றிப் பெரிதாகப் பேசினர்; அந்த அடையாளங்களைக் கொண்டு, ஆரியர் படையெடுப்பைப் பற்றிய கதைகளைக் கூறி உழவர்களை - பாமர மக்களை - திரட்டினார்கள். அதற்கு மாற்றாக, பூலே மாவலியின் அடையாளத்தை முன்வைத்தார். அதுபோல, முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த ஓணம் பண்டிகையையொட்டி, உருவகப்படுத்தி ஆரியம் தமிழராட்சிக்கு எதிராக புதிய மாவலிக் கதையை மீண்டும் நடத்திட திட்டமிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தமிழன் ஏமாறமாட்டான்; தமிழர்கள் பலியாகமாட்டார்கள் என்பதைக் காட்டவேண்டிய மகத்தான கடமை உணர்வு நம் ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கடமையாகும்.
தமிழா விழி, எழு, உணர்வு கொள்!
---------தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் 5.2.2008 "விடுதலை" நாளிதழில் எழுதிய கட்டுரை
Search This Blog
28.2.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment